இயற்கைக்கெதிரான இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் காலங்களில் யானைகள் தினம் இருக்கும்; யானைகள் இருக்காது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “உலகில் வேகமாக அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றான யானைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக ஆண்டுதோறும் ஆகத்து-12 ஆம் நாள் உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், காடுகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல், தந்தத்திற்காக வேட்டையாடப்படுதல், வாழ்விடங்கள் அருகுதல், வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுதல், மின்சார வேலிகள், தண்டவாளங்கள் , தோட்ட வெடிகள், உணவு வழங்கும் காடுகள் அழிக்கப்படுதல் உள்ளிட்ட மனிதர்களால் உருவாக்கப்படும் இன்னல்களால் யானைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாகக் குறைந்து வருவது பெரும்வேதனையளிப்பதாக உள்ளது”

image

மேலும் ” விலங்கினங்களில் தனித்துவமிக்கச் சிறப்பு வாய்ந்த உயிரினம் யானை. மனிதர்களோடு நெருங்கிப் பழகும் தன்மை கொண்டது. உயிரினங்களில் அதிக நினைவுத்திறனும் உடையவை. யானைகள் காடுகளில் இருக்கும்போது, பெரிய மரங்களின் இளம் கிளைகளை ஒடித்து உணவாக உட்கொள்கின்றன. மேல்மட்ட கிளைகளை ஒடிப்பதால், சூரிய ஒளி அடர்ந்த காட்டின் தரையை அடைய முடிகிறது. தேவையான சூரிய ஒளி கிடைப்பதால், புற்கள் அதிகம் வளர்ந்து, தாவர உண்ணிகளுக்கு உணவாகின்றன. மேலும், கீழே விழும் இலை தழைகளையும் மற்ற தாவர உண்ணிகளான முயல், மான், காட்டெருமை போன்றவை உணவாக்கிக் கொள்கின்றன. தாவர உண்ணிகள் அதிகரிக்கும்போது ஊன் உண்ணிகளான சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்டவைகளுக்கு உணவு கிடைக்கின்றது. எனவே உணவுச்சங்கிலியில் யானைகள் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. யானைகள் ஒரு நாளில் 300 முதல் 350 வரை விதைகளை விதைக்கிறது. தன் வாழ்நாளில் சராசரியாக 18 லட்சம் மரங்கள் வளரக் காரணமாக உள்ளது”

image

“இயற்கைக்கெதிரான இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் காலங்களில் யானைகள் தினம் இருக்கும்; யானைகள் இருக்காது. மிருகக்காட்சி சாலைகளிலும், திரைப்படங்களிலும், புகைப்படங்களிலும் , புத்தகங்களிலும் மட்டுமே பார்க்கும் அரிய வகை உயிரினமாக யானைகள் மாறிப்போகும். பல்லுயிர்ச்சூழலில் உணவுச்சங்கிலி அறுபடாமல் பாதுகாக்கும் யானைகளின் அழிவு, அவற்றையெல்லாம் விடப் பல மடங்கு தாக்கத்தை, ஆபத்தைச் சூழலியலில் ஏற்படுத்தக் கூடியது என்றால் மிகையல்ல.”

“ஆகவே, இவற்றையெல்லாம் உணர்ந்து மத்திய-மாநில அரசுகள், யானைகள், புலிகள் உள்ளிட்ட வன உயிரினங்களையும், அவற்றின் வாழ்விடங்களான காடுகள், மலைகள், ஆறுகள் உள்ளிட்டவற்றையும் பாதுகாக்கும் சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டுமே தவிர பன்னாட்டு பெருநிறுவனங்களின் வளவேட்டைக்காகத் தளர்த்திட முனையக்கூடாது. அது வனவிலங்குகளுக்கும் நாட்டின் வளங்களுக்கும் மட்டுமின்றி எதிர்காலத்தில் மனிதகுலத்திற்கே தவிர்க்கமுடியாப் பேராபத்தினை விளைவிக்கக் கூடும்” என சீமான் குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.