உலகின் மிகச்சிறந்த பேட்மின்டன் விளையாட்டு வீரர்களின் ஒருவரான பி.வி.சிந்து தற்போது அதிகம் சம்பாதிக்கும் பெண் விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார். கடந்த ஆண்டு அதிகம் சம்பளம் வாங்கிய பெண் விளையாட்டு வீரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் பி.வி.சிந்து 13-வது இடம் பிடித்திருக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் பி.வி. சிந்துவின் மொத்த வருவாய் சுமார் 5.5 மில்லியன் டாலர்கள் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்திருக்கிறது. இதனால், மிகவும் தனித்துவம் பெற்ற விளையாட்டு வீரராக சிந்து குறிப்பிடப்படுகிறார். 2019-ம் ஆண்டில் நடந்த உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல போட்டிகளில் பி.வி.சிந்து வென்றதை அடுத்து அவரின் வருவாய் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

பி.வி.சிந்து

பணம் ஊக்குவிக்கும் ஒரு காரணியாக இருந்தாலும் பதக்கங்களை வெல்வதற்குதான் முன்னுரிமை அளிக்கப்படும் என்கிறார், பி.வி.சிந்து. எனினும், ஃபோர்ப்ஸ் பட்டியலில் தன்னுடைய பெயர் இடம் பெற்றதற்கு தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா டுடேக்கு இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “ஃபோர்ப்ஸ் பட்டியலில் எனது பெயர் இடம் பிடித்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். மற்ற விளையாட்டுத்துறை சூப்பர் ஸ்டார்களுடன் எனது பெயரும் இடம் பெற்றிருப்பது ஒருவகையில் ஊக்கமளிக்கிறது. இது எனது கவனத்தை சிதறடிக்கவில்லை. விளம்பரங்களில் தொடர்ந்து நடிக்க விரும்பினேன். ஏனெனில், பேட்மின்டனைவிட வித்தியாசமான ஒன்றாக இருந்தது.

பி.வி.சிந்து

எனக்கு அதிக பணம் தேவை என நான் நினைக்கவில்லை. பதக்கங்களை வெல்வதுதான் மிகப்பெரிய விஷயம். பதக்கங்களை வெல்லும்போது பணமும் வரும்” என்றும் கூறியுள்ளார்.

பி.வி.சிந்துவின் தந்தை பி.வி.ரமணா இதுதொடர்பாக பேசும்போது, “விளையாட்டு வீரர் ஒருவருக்கு பணம் என்பது முன்னுரிமை அளிக்கும் விஷயமாக இருக்கக் கூடாது. அவர்கள் மீதான மதிப்பும் பின்னணியும் மிகவும் முக்கியமானது. கடந்து வந்த பாதையை ஒருபோதும் மறக்கக்கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார். பி.வி.ரமணா, முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரர். 1986-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய கைப்பந்து அணியில் ஒருவராக இருந்தார். இவர் 2000-ம் ஆண்டில் அர்ஜூனா விருதையும் பெற்றுள்ளார்.

Also Read: `நான் காத்திருந்த நாள்கள் அதிகம்!’- உலக சாம்பியன் பட்டத்தை வென்ற பி.வி.சிந்து ஆனந்தக் கண்ணீர்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.