மன்னார்குடி அருகே உள்ள கிராமம் ஒன்றில் பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டத்தில் ரூ.3 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாக புகார் வந்ததைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுலகத்தில் பணிபுரிந்த 4 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடு கட்டும் திட்டத்தில் மோசடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் என்ற ஊராட்சியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த ஊராட்சியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் கட்டுவதில் ரூ.3 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, அந்த ஊரைச் சேர்ந்த மக்கள் வீட்டைக் காணவில்லை எனத் தலையாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இதையடுத்து மோசடி விவகாரம் குறித்து விசாரிப்பதற்காகத் திருவாரூர் கலெக்டர் ஆனந்த், தனிக் குழு அமைத்து உத்தரவிட்டார். தனிக் குழுவை சேர்ந்த அதிகாரிகள் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகத் தலையாமங்கலம் ஊராட்சியில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், பிரதமந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தலையாமங்கலம் ஊராட்சி

இதுகுறித்து தலையாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். “2016-ம் ஆண்டிலிருந்து 2020 வரை எங்க ஊராட்சியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுப்பதாக எங்க ஊரை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரான ராஜ்மோகன் என்பவர் பலரிடம் ஆதார் கார்டு, பட்டா, வங்கிக் கணக்கு என ஆகிவற்றை வாங்கினார். சிலருக்கு மட்டும்தான் வீடு கட்டுவதற்கான பணம் வங்கிக் கணக்கில் வந்ததுடன், வீடும் கட்டப்பட்டது. இதேபோல் கழிப்பறைகள் கட்டித்தருவதாகக் கூறியும் ஆவணங்கள் பெறப்பட்டன.

மொத்தம் 225 பேருக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகத் தலையாமங்கலம் ஊராட்சியில் கணக்கில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், 140 நபர்களின் பேரில் வீடு மற்றும் 215 கழிப்பறைகள் கட்டாமலேயே கட்டியதாகப் பொய்யான ஆவணங்கள் மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்குக்குப் பதிலாக வேறு ஒரு வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி வீடு கட்டுவதற்குக் கொடுத்த பணத்தை மோசடி செய்துள்ளனர். இதில் ரூ .3 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

Also Read: தஞ்சை: `வங்கிக் கணக்கிலிருந்து மாயமான பணம்!’ – சினிமாவை விஞ்சும் ஹைடெக் மோசடி

இதை ஆதாரத்துடன் புகார் கொடுத்ததுடன், இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டமும் நடத்தினோம். அதைத் தொடந்து இதை விசாரிக்க தனிக் குழு அமைத்து கலெக்டர் ஆனந்த் உத்தரவிட்டார். அதன்படி ஊரக வளர்ச்சி முகமை உதவித் திட்ட இயக்குநர் பொன்னியின் செல்வன் தலைமையிலான அதிகாரிகள் தலையாமங்கலம் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர், இதில் மோசடி நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றிய ராஜா, உதவிப் பொறியாளர் சண்முகசுந்தரம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி, ஊராட்சியின் பணி மேற்பார்வையாளர் பிரபாகரன் ஆகிய நான்கு பேரையும் தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். இதில் அ.தி.மு.க பிரமுகரான ராஜ்மோகன் மற்றும் மேலும் பல அதிகரிகளுக்கு தொடர்பிருக்கிறது அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தனர்.

வீடு கட்டுவதில் மோசடி நடைபெற்ற ஊராட்சி

இதுகுறித்து கலெக்டர் ஆனந்திடம் பேசினோம்.“மோசடி தொடர்பக 4 பேர் தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் வேறு யாருக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்தால், அவர்கள் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.