கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்தவர் தாஸ். சுவற்றில் வர்ணம் பூசும் தொழில் செய்து வரும் இவர் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமியை அவரது அண்ணன் அழைப்பதாக கூறி அருகில் இருந்த ரயில்வே டிராக்கிற்கு அழைத்து சென்று அங்கு வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி பயத்தில் வீட்டிற்கு செல்லாமல் அருகில் இருந்த ஒரு கோவிலிலேயே தங்கியுள்ளார்.
இரவு முழுவதும் சிறுமியை தேடிய பெற்றோர் காவல்துறையில் புகார் அளிக்க இருந்த சூழலில் அதிகாலை வீட்டிற்கு வந்த சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து பெண்ணின் தாயார் கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தாஸை கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM