உலகிலேயே ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் அதிக அளவில் இருக்கும் இடம் அசாம் மாநிலத்தில் இருக்கும் காசிரங்கா தேசியப் பூங்காதான். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தப் பூங்காவில் இருக்கும் காண்டாமிருகங்களை வேட்டையாட பல்வேறு குழுக்கள் படையெடுத்தன. பல காண்டாமிருகங்கள் அதன் ஒற்றை கொம்புக்காக மனிதர்கள் வேட்டையாடினார். பின்பு சுதாரித்துக்கொண்ட மத்திய மாநில அரசுகள் காண்டா மிருகங்களின் வேட்டையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்தன. இதன் விளைவாக இப்போது வேட்டையாடுதல் குறைந்து காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இப்போது 2300 க்கும் அதிகமான காண்டா மிருகங்கள் காசிரங்காவில் நிம்மதியாக நடமாடமுடிவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

image

மனிதர்களால் சில ஆண்டுக்காலம் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களை அரசு காப்பாற்றிவிட்டது. ஆனால் ஆண்டுதோறும் நிகழும் இயற்கை சீற்றமான மழை வெள்ளத்தில் இருந்து காசிரங்கா தேசியப் பூங்காவை காப்பாற்ற முடியாமல் அரசுகள் திணறி வருகிறது. இந்த மழை வெள்ளத்தால் காண்டாமிருகங்கள் மட்டுமல்ல மான், புலி, காட்டு முயல் போந்ற ஜீவன்களும் ஆண்டுதோறும் உயிரிழக்கிறது. அசாம் உள்ளிட்ட பிரம்மபுத்திரா வடிநிலப் பகுதிகளில் ஆண்டுதோறும் பருவமழைக் காலத்தில் மோசமான வெள்ளம் ஏற்படும். இந்தாண்டு ஏற்பட்ட பெரு மழையினால் நேர்ந்த வெள்ளத்தில் காசிரங்கா தேசியப் பூங்காவின் 85 சதவித நிலப்பரப்பு நீரில் மூழ்கியது.

image

இந்த பெருவெள்ளம் காரணமாக 8க்கும் மேற்பட்ட ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், நூற்றுக்கும் மேற்பட்ட மற்ற உயிரினங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தன. வெள்ளத்துக்கு பயந்து சாலையை நோக்கி ஓடிவந்த மான்கள், முள்ளம் பன்றி ஆகியவை வாகனத்தில் அடிப்பட்டு உயிரிழந்த பரிதாபச் சம்பவங்களும் நடந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த உயிரிழப்பு தொடர்வதாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பேசி வருகின்றனர்.

இது குறித்து பேசிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுச் சுழல் ஆர்வலரான அம்பியா ஹூசைன் “முன்பெல்லாம் 10 ஆண்டுக்கு ஒருமுறை அசாமில் வெள்ளப் பெருக்க ஏற்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் அதிகமழை பெய்கிறது” என்றார்.

image

மேலும் தொடர்ந்த அவர் “அசாம் மாநிலத்துக்கும் காசிரங்கா பூங்காவுக்கும் வெள்ளம் அவசியமானதுதான் என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் இப்படி அழிவு ஏற்படுவது வேதனை அளிக்கிறது. இதற்கு பருவநிலை மாற்றம் மட்டுமே காரணமாக இருக்க முடியும். ஆனால் இயற்கை மேல் பழியை சுமத்தி நம்மால் தப்பிக்க முடியாது. விலங்குகளை காக்க மாற்று நடவடிக்கை குறித்து சிந்திக்க வேண்டும். இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் காசிரங்கா பூங்காவில் விலங்குகளை பார்க்க முடியாது” என்று கவலை தெரிவிக்கிறார் அம்பியா ஹூசைன். கடந்த 3 ஆண்டுகளில் காசிரங்காவின் புள்ளி விவர கணக்கெடுப்பின்படி 2017 இல் வெள்ளம் மற்றும் வாகனங்களில் அடிப்பட்டு 400 விலங்குகள் அதிபட்சமாக உயிரிழந்துள்ளன. இதில் 31 ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களும் அடங்கும். 2018 இல் 200 விலங்குகளும், 2019 இல் 125-க்கும் மேற்பட்ட விலங்குகளும் வெள்ள பாதிப்பால் இறந்திருக்கிறது.

image

இது குறித்து காசிரங்கா தேசியப் பூங்காவின் வனத்துறை அதிகாரி கூறும்போது ” காசிரங்காவை பொறுத்தவரை ஆற்றுடன் கூடிய சுற்றுச் சூழல் அமைப்பை கொண்டுள்ளது. காசிரங்கா புல்வெளிகளுக்கு சிறப்பு வாய்ந்தவை, இந்த வனத்தையொட்டி ஓடும் ஆற்றினால்தான் அவை சுத்தப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வெள்ளத்துக்கு பின்பும் காசிரங்காவில் இருக்கும் புல்வெளிகள் சுத்தமாகிறது. எனவே காசிரங்காவுக்கு வெள்ளம் அவசியம். வெள்ளம் வரவில்லை என்றால் இங்கு நோய் பரவும் விலங்குகள் அழியும். காசிரங்காவில் ஆரோக்கியமான சூழல் வேண்டுமென்றால் வெள்ளம் வர வேண்டும். வெள்ளம் காரணமாக விலங்குகளின் உயிரிழப்பை தவிர்க்க முடியாது. ஆனால் விலங்குகளை பாதுகாக்கும் அனைத்து முயற்சிகளும் வனத்துறை எடுத்து வருகிறது” என்றார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.