தொடர்ந்து சில மாதங்கள் வீடடங்கிக் கிடந்ததால், பல பேர் உடல் எடை அதிகமாகி அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மட்டுமல்லாமல் உயரத்துக்கு ஏற்ற எடை இருப்பவர்களுக்கும்கூட சைக்கிளிங் மிக நல்லதொரு உடற்பயிற்சிதான். சைக்கிளிங்கை எப்படிச் செய்ய வேண்டும், யாரெல்லாம் செய்ய வேண்டும், எவ்வளவு நேரம் செய்ய வேண்டும், எந்த நேரத்தில் செய்வது பெஸ்ட் உள்ளிட்ட தகவல்களைச் சொல்கிறார் ஃபிட்னஸ் டிரெய்னர் ஜெயக்குமார். கொரோனா நேரத்தில் எவ்வளவு கவனமாக சைக்கிளிங் செய்ய வேண்டுமென்று சொல்கிறார் சென்னை சைக்கிளிங் குரூப்பின் நிறுவனர் திவாகரன்.

ஃபிட்னஸ் டிரெய்னர் ஜெயக்குமார்

சைக்கிளிங் பலன்கள்…

உடலில் இருக்கிற தேவையற்ற கொழுப்பைக் கரைப்பதில் சைக்கிளிங் பெஸ்ட் உடற்பயிற்சி. சைக்கிளிங் செய்யும்போது நுரையீரல் ஆக்ஸிஜனை அதிகமாக எடுக்கும். அதனால் இதயத்தின் ஆரோக்கியமும் நுரையீரலின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். கூடவே உடலின் செல்களுக்கும் ஆக்ஸிஜன் அதிகமாகக் கிடைக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சைக்கிளிங் செய்பவர்களின் நுரையீரலை அவ்வளவு சுலபமாக தொற்றுநோய் கிருமிகள் தொட்டுவிட முடியாது.

சைக்கிளிங் செய்ய வேண்டிய நேரம்!

அதிகாலை நேரத்தில் சுத்தமான ஆக்ஸிஜன் அதிகம் கிடைக்கும் என்பதால் இதுதான் சைக்கிளிங் செய்வதற்கு மிகச்சரியான நேரம்.

cycling

சைக்கிளிங் செய்யக்கூடாத நேரம்!

காலை, மாலை என எப்போது வேண்டுமானாலும் சைக்கிளிங் செய்யலாம். செய்யக்கூடாத நேரம் என்று எதுவும் கிடையாது. உங்களுடைய செளகர்யம்தான். ஆனால், சைக்கிளிங் செய்கிற நேரத்தில் பாதி வயிறாவது காலியாக இருக்க வேண்டும்.

ஏன் சாப்பிட்டவுடனே சைக்கிளிங் செய்யக்கூடாது?

சாப்பிட்டு ஒன்றரைமணி நேரம் கழித்துதான் சைக்கிளிங் செய்ய வேண்டும். சாப்பிட்ட உடனே சைக்கிளிங் செய்தீர்களென்றால், உடலின் ரத்த ஓட்டமானது கால்களுக்கும் குறிப்பாக தொடைகளுக்கும் அதிகமாகப் பாய ஆரம்பித்துவிடும். இதனால் உணவு செரிமானத்தில் பிரச்னை ஏற்பட்டுவிடும்.

obesity

சைக்கிளிங் மூலம் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?

உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்றாலோ, அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க வேண்டுமென்றாலோ தினமும் ஒரு மணி நேரம் சைக்கிளிங் செய்ய வேண்டும். அரைமணி நேரம் ஓட்டிவிட்டு சோர்வாகி விட்டீர்களென்றால், லாக்டெளன் நேரத்தில் போட்ட எக்ஸ்ட்ரா எடை குறையாது

சைக்கிளிங் செய்வதற்கு வயது கட்டுப்பாடு இருக்கிறதா?

எதுவுமே கிடையாது. சைக்கிள் ஓட்டத் தெரிந்த பேரன், பேத்தியில் ஆரம்பித்து, ஆர்வம் இருக்கிற தாத்தா, பாட்டிவரை யார் வேண்டுமானாலும் சைக்கிளிங் செய்யலாம்.

kidscling

ஜாகிங்கைவிட சைக்கிளிங் நல்லது… ஏன் தெரியுமா?

ஜாகிங் செய்யும்போது, பாதங்கள் தரையில் தட் தட் என்று அதிரும்போது கால் மூட்டுகள், இடுப்பின் இணைப்புகள், கழுத்துப்பகுதி போன்றவற்றில் அதிர்வு ஏற்படும். இதனால் ஏற்கெனவே இந்தப் பகுதிகளில் வலி இருப்பவர்களுக்கு வலி இன்னும் அதிகமாகும். ஆனால், சைக்கிளிங்கில் இந்த மாதிரி அதிர்வுகள் கிடையாது. அதனால், மூட்டுவலி இருப்பவர்களும் சைக்கிளிங் செய்யலாம். மூட்டுவலி பிரச்னைகள் இல்லாதவர்களுக்கு இனிமேல் வராமலும் தடுக்கும் சைக்கிளிங்.

இவர்கள் சைக்கிளிங் செய்யக்கூடாது… ஏன்?

இதுவரை எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருந்தவர்கள், திடீரென்று தங்கள் 40 வயதில் இதையெல்லாம் செய்ய ஆரம்பிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தையும், ரத்த அழுத்தத்தையும், மருத்துவரிடம் பரிசோதித்துப் பார்த்து நார்மல் என்றால் மட்டுமே சைக்கிளிங் செய்ய வேண்டும். ஏனென்றால், உங்களுக்குத் தெரியாமல் சின்னதாக இதயத்தில் ஏதேனும் பிரச்னை இருந்தால், திடீரென சைக்கிளிங் செய்யும்போது பாதிப்பு ஏற்படுத்தலாம். இதேபோல், ரத்த அழுத்தம் அதிகமாக இருந்து, அது தெரியாமல் நீங்கள் திடீரென சைக்கிளிங் செய்ய ஆரம்பித்தால் பக்கவாதம் போன்ற பிரச்னைகளும் வரலாம். வயது 40-க்கும் குறைவு என்றாலும் அதிகப்படியான உடல் எடை கொண்டவர்கள் புதிதாக சைக்கிளிங் செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என்றால், மருத்துவரை ஆலோசித்துவிட்டு சைக்கிளிங் செய்ய ஆரம்பியுங்கள்.

முதல்நாளே ஒரு மணி நேரம் ஓட்டலாமா? கூடவே கூடாது. முதல் நாள் 10 நிமிடம், அடுத்த நாள் 15 நிமிடம், அதற்கடுத்த நாள் 20 நிமிடம் என படிப்படியாக சைக்கிளிங் நேரத்தை அதிகரியுங்கள். இதையும், ஆரம்ப நாள்களில் காலையில் அரைமணி நேரம், மாலையில் அரைமணி நேரம் என்று பிரித்தும் செய்யலாம்.

Also Read: சைக்கிள் வெச்சிருந்தாலே அலட்சியப் பார்வை.. இப்போ? -வாசகரின் ஃபிட்னஸ் சீக்ரெட் #MyVikatan

கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் இப்படி சைக்கிளிங் செய்யுங்கள்!

அதிகப்படியான உடல் பருமன் அல்லது கொலஸ்ட்ரால் பிரச்னை இருப்பவர்கள் அரை மணி நேரம் மட்டும் சைக்கிளிங் செய்தீர்களென்றால் பலன் கிடைக்காது. ஏனென்றால் முதல் 20 நிமிடங்கள் சைக்கிளிங் செய்வதற்கான எனர்ஜிக்கு, உடல் தன்னிடம் இருக்கிற அதிகப்படியான சர்க்கரைச் சத்தை எடுக்கும். அதன்பிறகும் தொடர்ந்து நீங்கள் சைக்கிளிங் செய்யும்போதுதான், உடலானது கொழுப்பைக் கரைத்து தனக்கான எனர்ஜியை எடுக்க ஆரம்பிக்கும்.

கொரோனா நேரத்தில் சைக்கிளிங்… பாதுகாப்பு டிப்ஸ்!

சைக்கிளிங்

Also Read: அவலும் நானும்… 19 கிலோ குறைத்த ரகசியம் பகிரும் பாடலாசிரியர் விவேக்!

* ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதால் ஏற்கெனவே சைக்கிளிங் செய்துவந்தவர்கள் மட்டுமல்லாது, ஃபிட்னஸில் ஆர்வமிருப்பவர்களும் சைக்கிளிங் ஆரம்பிப்பார்கள். அப்படி ஆரம்பிக்கையில் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். சைக்கிள் ஓட்டும்போது மாஸ்க் அணிவது சிரமமாக இருந்தால், நீங்கள் பிரேக் எடுக்கிற நேரத்திலும் மற்றவர்களுடன் பேசும்போதும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.

* சைக்கிளை வழக்கமாகத் துடைப்பதோடு நின்றுவிடாமல் உங்கள் கைகள் படுகிற ஹேண்டில்பார் போன்ற இடங்களை சானிட்டைஸ் செய்யுங்கள்.

* கைகளுக்கு க்ளவுஸ் அணிவது கட்டாயம்.

* கூட்டமாக சைக்கிளிங் செல்பவர்கள் ஸ்நாக்ஸ் மற்றும் தண்ணீரை இன்னும் சில மாதங்களுக்கு பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது.

* சைக்கிளிங் முடிந்து வீடு திரும்பியவுடன் உடனே குளித்து விடுங்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.