“நல்ல காலத்திலேயே என்கிட்ட யாரும் கடலை பாக்கெட் வாங்க தயங்குவாங்க. இதுல, கொரோனா வேறு வந்து, என் பொழப்புல மண் அள்ளிப் போட்டுட்டு. தினமும் நாலு பாக்கெட் வித்தாலே ஆச்சயர்யம். இதுக்காக, தினமும் 20 கிலோமீட்டர் நடக்கிறேன். ஆனால், 50 ரூபாகூட வருமானம் வராது. இதனால், பலவேளைகள்ல எனக்கு மதிய சாப்பாடு, வெறும் டீதான் தம்பி” என்று தொண்டையை அடைக்கும் துக்கத்தோடு பேசுகிறார் சுந்தர்ராஜ்.

சுந்தர்ராஜின் கடலை வியாபாரம்

Also Read: `எப்போ நல்ல வாழ்க்கை வரும்னு தெரியல!’ – கலங்கவைக்கும் குளித்தலை இளைஞர்

65 வயது நிரம்பிய பெரியவரான சுந்தர்ராஜ், மனைவி கலாவதியோடு கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் வசிக்கிறார். மாத வாடகை ரூ. 3,000 கொடுத்து, ஒரு வாடகை வீட்டில், ஏழ்மை, சோகம், கவலை, அளவில்லாத பசி உள்ளிட்டப் பிரச்னைகளோடு, ‘கூட்டு குடித்தனம்’ நடத்தி வருகிறார். கடையில் ஒரு கிலோ வறுத்தக் கடலையை ரூ.120 கொடுத்து வாங்கி வந்து, மனைவியோடு சேர்ந்து அதை 20 பாக்கெட்களாகப் போடுகிறார்.

சுந்தர்ராஜ்

அதை ஒரு பிளாஸ்டிக் ட்ரேயில் அடுக்கி வைத்துக்கொண்டு, ‘எல்லா சாலைகளும் ரோம் நோக்கி’ என்பதுபோல், வேலாயுதம்பாளையத்தைச் சுற்றியுள்ள எல்லா சாலைகளிலும் கடலை விற்க நடக்கத் தொடங்கிவிடுகிறார் சுந்தர்ராஜ். தினமும் காலை 10 மணிக்கு கிளம்பினால், இரவு 7 மணிவரை நடந்தே போய் வியாபாரம் பார்க்கிறார். ரொம்ப அதிசயமாக சிலநாள்கள் ரூ.200-க்குகூட விற்கிறது. ஆனால், பலநாள்களில் ஒரு பாக்கெட் கடலைகூட விற்காமல் போய்விடுவதாக வருத்தமாகச் சொல்கிறார் சுந்தர்ராஜ்.

வேலாயுதம்பாளையத்தில் கடலை விற்றுக்கொண்டிருந்த சுந்தர்ராஜிடம் பேசினோம்

“எங்களுக்கு முருகன்னு ஒரு பையன். அவன் பெட்ரோல் பங்குல வேலை பார்க்குறான். அவனுக்கு பாப்பாத்திங்கிற பெண்ணை திருமணம் செய்து வச்சோம். கொஞ்சநாள்லேயே என் பையனோட சண்டைப் போட்டுட்டு, பொறந்த வீட்டுக்குப் போயிட்டு அந்தப் பொண்ணு. அதனால், `நல்ல பொண்ணா எனக்கு திருமணம் பண்ணி வைக்கல’னு எங்களோட சண்டைப் போட்டுட்டு போய் இப்போ தனியா இருக்கான். நான் என்னோட 30 வயசு வரைக்கும், ஹோட்டலுக்கு சப்ளை பண்ற வேலைக்குப் போனேன். அங்க கொடுத்த சம்பளம் கட்டுப்படியாகாததால், அதன்பிறகு நாமக்கல் பேருந்துநிலையத்தில் பயணிகளிடம் இஞ்சிமரப்பா விக்க ஆரம்பிச்சேன். ஏதோ பொழப்பு நடந்துட்டு வந்துச்சு. என்னோட சொந்த ஊரான பரமத்தி வேலூர்ல வாடகை வீட்டுல தங்கியிருந்தோம். அங்க வாடகை அதிகமானதால், கடந்த அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வேலாயுதம்பாளையத்துக்கு வந்து, வீடு வாடகை புடிச்சு தங்கினோம். இங்கிருந்து நாமக்கல் பேருந்துநிலையம் போய் இஞ்சிமரப்பா வித்துக்கிட்டு இருந்தேன்.

சுந்தர்ராஜ்

கடந்த இரண்டு வருஷத்துக்கு முன்பு, அப்படி வேலை முடிஞ்சு, வேலாயுதம்பாளையம் வந்து, பைபாஸ்ல நடந்து வீட்டுக்குப் போயிட்டு இருந்தேன். அப்போ வேகமா வந்த ஒரு கார்காரன், என்மேல மோதினான். தலையில் பலத்த அடி. உயிர்பிழைச்சதே அதிசயம். அக்கம்பக்கத்துல இருந்தவங்க கார்காரனை மடக்கியதால், அவன் செலவுல கரூர்ல உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆபரேஷன் பண்ணினாங்க. உயிர்பிழைச்சாலும், சரியா நடக்க முடியலை. முன்னமாதிரி தெளிவா பேச முடியலை. புத்தியும் அடிக்கடி பேதலிச்சாப்புல ஆயிரும். அதனால், இஞ்சிமரப்பா விக்கிற தொழிலை விட வேண்டிய சூழல்.

Also Read: புதுக்கோட்டை: ரொம்ப வருஷக் கனவு நிறைவேறிடுச்சு! – அமெரிக்கவாழ் தமிழரால் நெகிழும் குடும்பம்

வருமானத்துக்காக கடந்த ஒருவருஷமா இப்படி வறுத்தக் கடலையை வெளியில் வாங்கி, அதைத் தனித்தனி பாக்கெட்டுகளில் அடைச்சு, அதை ஊர் ஊராக நடந்தே போய் விற்க ஆரம்பிச்சேன். ஒருநாளைக்கு 150 வரை வருமானம் வந்துச்சு. இங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரத்துல உள்ள என்னோட சொந்த ஊரான பரமத்தி வேலூரில் போய் ரேஷன் கடைசியில் அரிசி பருப்பு வாங்கிட்டு வருவேன். அதை வச்சு, நானும், என் பொண்டாட்டியும் உசிரு பொழச்சு வந்தோம். ஆனா, இந்த கொரோனா நோய் வந்து, எங்க நிலைமையை சின்னாபின்னமாக்கிட்டு. பத்தடி நடந்தா மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குது. ஆனா, ரெண்டு உசிரு பொழச்சு கிடக்க வருமானம் பார்க்கணுமேனு நடையாய் நடந்து கடலை பாக்கெட்டுகளை தினமும் விற்க போய்வருகிறேன். ஆனால், யாரும் என்கிட்ட கடலை பாக்கெட் வாங்கமாட்டேங்குறாங்க. என்மேல பரிதாபப்பட்டு தொடர்ந்து கடலை பாக்கெட்டுகள் வாங்கும் மனிதர்கள்கூட, கொரோனாக்கு பயந்து இப்போ என்கிட்ட கடலை பாக்கெட்டுகள் வாங்கிறதில்லை.

கடலை வியாபாரம்

இதனால், பலநாள் வெறுங்கையோடதான் வீட்டுக்குப் போறேன். மதிய சாப்பாடாக வெறும் டீயைதான் குடிச்சுக்கிறேன். ரேஷன் அரிசி பொழப்புல மத்த வேளைகள்ல வயிறு நிறையுது. ஆனா, ரேஷன் அரிசி வாங்க மாசம் ஒருதடவை 10 கிலோமீட்டர் தூரம் நடந்துபோகணும். என் மனைவிக்கு உடம்புல ஏகப்பட்ட வியாதி. வாரம் ஒருதடவை அவளை டாக்டர்கிட்ட காண்பிக்கணும். அதனால்தான், கடலை விற்கப்போறேன். இதற்கிடையில், இரண்டு மாசமா வாடகை வேற கொடுக்க முடியலை. எதிர்காலத்தை நினைச்சா, கண்ணைக்கட்டி காட்டுல விட்டாப்புல இருக்கு. `அந்த எமனுக்காச்சும் எங்க மேல இரக்கம் வந்து எங்களை சீக்கிரம் மேலே அழைச்சிக்குவான்’னு பார்த்தா, இந்தப் பாவப்பட்ட ஜென்மங்களுக்கு அதுக்கும் கொடுப்பினை இல்லை தம்பி” என்று கூறி, உடல் குலுங்கி அழுகிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.