பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

விமானம் தரையிறங்குவதற்கான அறிவிப்பு வந்ததை அடுத்து லலிதா சீட் பெல்டை இறுக்கினாள். அருகில் அவளின் எட்டு வயது மகன் ஹரி தூங்கிக் கொண்டிருந்தான். பின் இருக்கையில் அவள் கணவன் கோபால் கைகளை நீட்டி சோம்பல் முறித்தான். நீண்ட பயணத்தின் களைப்பு அவர்கள் மூவரின் முகங்களிலும் தெரிந்தது. லலிதா ஹரியை தூக்கத்தில் இருந்து எழுப்பினாள். அரைத் தூக்கத்தில் ஹரி,

“இறங்கப் போறோமா அம்மா?” என்றான்.

“ஆமா. திருச்சி ஏர்போர்ட் வந்துருச்சு. எழுந்திரு. சீட் பெல்ட் போட்டுக்கோ.” என்றாள் லலிதா.

Representational Image

“அப்போ பாட்டி வீட்டுக்குப் போனதும் வாழை இலையில சாப்பிடலாமா?” என்றான் ஹரி ஆர்வமாக.

சிரித்துக்கொண்டே லலிதா, “இப்போ திருச்சி தான்டா வந்துருக்கு. நாம இப்போ லைட்டா டிபன் சாப்பிட்டுவிட்டு, ஒரு கால் டாக்சி புக் பண்ணி சரியா 6 மணிக்கெல்லாம் கோட்டையூர் போயிருவோம். நைட் டின்னருக்கு பாட்டி வீட்டுக்குப்போய் வாழை இலையில சாப்பிடலாம்” என்றாள். அமெரிக்காவில் இருந்து புறப்பட்டதில் இருந்து ஹரிக்கு ஒரே கனவு, வாழை இலையில் சாப்பிடுவதுதான்.

ஐந்தாண்டுகளுக்கு முன்னாள் ஹரி மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது கோட்டையூருக்கு கடைசியாக வந்தார்கள். லலிதாவின் அப்பா இறந்த நேரம் அது. அதன் பின்னர் எத்தனையோ முறை அவள் மாமா அழைத்தும் அவளுக்கு ஊருக்கு வர விருப்பமில்லை. ஐந்தாண்டுகள் கழித்து ஹரியைத் தன் உறவினர்களிடம் காட்ட வேண்டும், ஹரிக்கும் தன் பூர்வீகம் தெரிய வேண்டும் என்பதற்காக இப்போது ஊருக்கு வந்துள்ளனர்.

Representational Image

ஹரிக்கு தன் சொந்த ஊரைப் பற்றி எந்த நினைவும் இல்லை. கடைசியாக அவன் வந்தபோது அவன் மூன்று வயதுக் குழந்தை. அதனால் அந்த ஊர் எப்படி இருக்கும் அங்கே இருக்கும் மக்கள் எப்படி இருப்பார்கள், அவர்கள் என்ன சாப்பிடுவார்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தான். லலிதாவும்தான் சிறு வயதில் கோட்டையூரில் வளர்ந்தது, காரைக்குடியில் படித்தது என்று பல கதைகள் கூறி வந்தாள். அவற்றில் ஹரியை மிகவும் ஈர்த்தது வாழை இலையில் சாப்பிடுவது. ஓர் இலையில் வைத்துச் சாப்பிடுவதை அவனால் ஊகிக்க முடியவில்லை.

“எப்படி மம்மி இலையில் வச்சு சாப்பிட முடியும். கீழே சிந்தாது?” என்று கேட்டுக்கொண்டே இருந்தான்.

உண்மையில் அவன் வாழை இலையைப் பார்த்ததே கிடையாது. லலிதாவும் இன்டர்நெட்டில் பல வாழை இலைப் படங்களைக் காட்டினாள். ஆனால், ஹரியால் அதை உணர முடியவில்லை.

சலித்துப்போன லலிதா, “சரிடா ஊருக்குப் போனதும் உனக்கு வாழை இலையில சாப்பாடு போடச் சொல்றேன்” என்று கூறி வைத்திருந்தாள். அன்றிலிருந்து ஹரிக்கு வாழை இலையில் சாப்பிடுவது வாழ்நாள் லட்சியமாகிவிட்டது.

Representational Image

திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கோட்டையூர் சென்றனர். வழி எங்கும் அந்தச் செட்டிநாட்டு செம்மண் பூமியின் நிறமும் ஆங்காங்கே நீர் தேங்கியுள்ள குளங்களும் கோயில் கோபுரங்களும் ஹரிக்கு விசித்திரமாக இருந்தன. கோட்டையூரில் அவர்கள் வீட்டு வாசலில் கார் வந்து நின்றது. பழைமையான செட்டிநாட்டு வீடு. வாசலே அந்த மக்களின் மனதைப்போல பெரிதாக இருந்தது. வாசலில் ஐந்தாறு பேர் அமர்ந்திருந்தனர். கார் வந்து நின்றவுடனே ஓடி வந்து கதவைத் திறந்தார் பெரியவர் ஒருவர்.

“லலிதா, நல்லா இருக்கியாம்மா? வாங்க மாப்பிள்ளை உள்ள வாங்க” என்று கையைப் பிடித்து அழைத்துச் சென்றார்.

அம்மா பின்பு ஒட்டிக்கொண்டு வந்த ஹரி அம்மாவின் காதுகளில் முணுமுணுத்தான்,

“அம்மா அமெரிக்கால நாம ஒருத்தர் வீட்டுக்குப் போனா காலிங் பெல்லை அடிச்சதும் தானே வெளிய வருவாங்க. இங்க நாம வர்றதுக்கு முன்னாடியே வாசல்ல உக்காந்துருக்காங்க?”

“ஹரி, இங்கெல்லாம் நாம எப்ப வருவோம்ன்னு காத்துக்கிட்டு இருக்காங்கடா” என்றாள் லலிதா.

Representational Image

“அப்ப ஏன் அம்மா நாம இத்தன நாள் வரல்ல?”

இந்தக் கேள்விக்கு லலிதாவிடம் பதில் இல்லை. அதற்குள் அங்கே ஓடி வந்த வயதான பெண்,

“அம்மாடி எம்புட்டு நாளாச்சு உங்களப் பாத்து. அப்பன் ஆத்தா போயிட்டா நாங்கெல்லாம் இல்லையா உனக்கு?” என்று உரிமையாகக் கோவித்துக்கொண்டாள். பின் ஹரியைப் பார்த்து,

“என் தங்கபிள்ள, நான் தான்ய்யா உன்‌ பாட்டி” என்று கட்டி அணைத்துக்கொண்டாள்.

பின் இதமான வெந்நீரில் குளித்துவிட்டு மூவரும் உணவருந்த வந்தனர். ஹரி நீண்ட நாள் எதிர்பார்த்த அந்தத் தருணம் வந்தது. ஒரு சுருட்டுப்பாயை விரித்து அதன் முன் மூன்று வாழை இலைகள் போடப்பட்டு இருந்தன. உண்மையில் ஹரி வாழை இலையை இத்தனை பெரியதாக நினைக்கவில்லை. அதன் முன்னால் அமர்ந்தான். முதலில் ஓர் ஓரத்தில் ஒரு துளி உப்பு வைக்கப்பட்டது. அது எதற்கு என்று கேட்க நினைத்தான். ஆனால், அதற்கு முன்பு வரிசையாக வைக்கப்பட்ட பதார்த்தங்களில் அவன் இலை முக்கால் வாசி நிறைந்துவிட்டது.

Representational Image

அதில் தோசையைத் தவிர ஹரி வேறெதையும் இதுவரை பார்த்ததுகூட இல்லை. அவன் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பாட்டி அவன் அருகில் உட்கார்ந்தாள்,

“என்னய்யா, இதெல்லாம் என்னன்னு தெரியலையா?” என்று கூறி அவன் அருகில் கால் நீட்டி உட்கார்ந்துகொண்டாள். சாதம் வைக்க வந்த பெண்ணிடம்,

“இரு டி. உடனே சோத்தைக் கொட்ட வந்துட்டா. இன்னைக்கு என் பேரனுக்கு நான்தான் பரிமாறுவேன். புள்ள, பொறுமையா ரசிச்சு ருசிச்சு சாப்பிடட்டும்” என்று கூறி ஹரி பக்கம் திரும்பினாள்.

“அய்யா அரி, முதல்ல இனிப்புல இருந்து ஆரம்பிக்கணும். இது பேரு வெள்ள பணியாரம், இது கந்தரப்பம், இது கும்மாயம். ஒண்ணொண்ணா எடுத்துச் சாப்பிட்டுப் பாரு” என்றாள்.

ஹரி ஒவ்வொன்றையும் வாயில் வைக்கும்போது சுரந்த எச்சிலில் அவை தானே வழுக்கிக்கொண்டு வயிற்றில் விழுந்தன. பின்பு சுடச்சுட இட்லியும் அதற்கு கறிக் குழம்பும் கோஸ்மல்லியும் தரப்பட்டன. பின் முறுகலான ஒரு தோசை. பலகாரம் முடித்தவுடன் சோறு பரிமாறப்பட்டது. அதன் மேல் நாட்டுக்கோழி குழம்பு ஆடையாகப் போர்த்தப்பட்டது. மீன் வறுவலும் இறால் தொக்கும் உடன் பரிமாறப்பட்டன. சிறிய பறவையின் கால்கள் பொரித்து வைக்கப்பட்டிருந்தன.

Representational Image

“அது என்ன பாட்டி?” என்றான் ஹரி.

“அது காடை ரோஸ்ட்ய்யா” என்று கூறி அதில் நான்கு துண்டுகளை எடுத்து இலையில் வைத்தாள் பாட்டி.

ஹரிக்கு இப்போதே நெஞ்சுவரை நிரம்பிவிட்டது. ஆனால், பாட்டி விடுவதாக இல்லை” வளர்ற புள்ள இது மாதிரி நாலு வேளை சாப்பிடணும். இந்தா… ரசம் சாதமும் முட்டை ஆம்லெட்டும் வச்சுக்க. ரசம் சாப்பிட்டாலே போதும் எந்த ஜீரண மருந்தும் தேவையில்ல” என்று கூறி இலையில் இரண்டு ஆம்லெட்டுகளை வைத்தாள்.

ஹரிக்கு மூக்கிலும் கண்ணிலும் கண்ணீர் ஓடியது. இருந்தாலும் உணவின் சுவையும் பாட்டியின் அன்பும் அவனை போதும் என்று சொல்ல விடவில்லை. அவன் ஒவ்வொன்றையும் சாப்பிட்டு முடிக்கும் வரை பாட்டி அவனை அவசரப்படுத்தவில்லை. ஒன்றை சாப்பிட்டு முடித்த பிறகே மற்றொன்றைப் பரிமாறினாள். இதுவரை அவன் அம்மாகூட இப்படி ஒவ்வொன்றாகப் பரிமாறியதில்லை. ஒவ்வோர் உணவின் தனித்தனி சுவையும் நன்றாக இருந்தது.

Representational Image

இலையில் வைத்து எப்படிச் சாப்பிடுவது என்ற சந்தேகத்தோடு வந்தவனுக்கு ஓர் இலையில் இத்தனை உணவுகளைப் பரிமாற முடியுமா என்று ஆச்சர்யமாக இருந்தது. சாப்பிட்டு முடித்து இலையைத் தூக்கிக்கொண்டு ஓடினான் ஹரி. அதை எதிர்பார்க்காத பாட்டி, “அய்யா, இருய்யா இலைய நான் எடுக்குறேன்” என்று கூறி கைகளை ஊன்றி எழுவதற்குள் ஹரி அந்த இலையைச் சுத்தமாகக் கழுவி எடுத்து வந்து,

“பாட்டி இதுல சாப்பிடுறது நல்லா இருக்கு. தினமும் எனக்கு இதுலயே சாப்பாடு தாங்க” என்றான்.

அவன் செயலைப் பார்த்து அனைவரும் சிரித்தனர். ஹரிக்கு என்னவோ போல் ஆயிற்று.

ஆனால், பாட்டி எல்லோரையும் அதட்டி,

“ஏய். சிரிக்காதீக. அய்யா அரி, இந்த இலைய ஒரு தடவதான் பயன் படுத்தணும். பாட்டி ஒவ்வொரு வேளைக்கும் உனக்கு புது வாழை இலையில விருந்து போடுறேன்” என்றாள்.

சற்றே குழம்பிய ஹரி, “யூ மீன் யூஸ் அண்ட் த்ரோ” என்றான்.

– விஜி குமரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.