பல படைப்பாளிகளைப் போலவே தமிழ் சினிமாவில் ஒரு பயணியாக நுழைந்தவர் கே.பாலசந்தர்., ஆனால் அவர் பின்னாளில் தமிழ் சினிமாவின் வழிகாட்டியாக மாறினார். தனிமனித வாழ்வில் புனிதங்கள் என கொண்டாடப்பட்ட அனைத்தையும் தன் சினிமா வேள்வியால் கேள்விக்கு உள்ளாக்கி உடைத்தவர் அவர். அதனாலேயே அவர் பெரிதும் கொண்டாடப்பட்டார். அதன் காரணமாகவே அவர் தாக்குதல்களுக்கும் ஆளானார்.

ஜூலை 9 1930’ஆம் வருடம் தஞ்சை, திருவாரூர் பகுதியைச் சேர்ந்த நன்னிலத்தில் பிறந்தார் கே.பாலசந்தர். பட்டப்படிப்பை முடித்த கே.பாலசந்தர், முத்துப்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக தனது முதல் பணியை தொடங்கினார். பின் 1950 ஆம் ஆண்டு சென்னையில், அக்கவுண்டண்ட் ஜெனரல் அலுவலகத்தில் வேலை கிடைத்து, பணியாற்றத் தொடங்கினார். தமிழ்த் திரையுலகில் வசன கர்த்தாவாக தனது பயணத்தை துவங்கியவர் அவர். வெற்றி என்பதும், வளர்ச்சி என்பதும் ஒரு மனிதன் தன்னை ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு கொண்டு செல்வது மட்டுமல்ல. மாறாக அவன் தன்னையும், தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வது. அவ்வகையில் கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் நிறைய கலைஞர்களை அறிமுகம் செய்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை இந்திய சினிமாவிற்கு கண்டடைந்து கொடுத்தவர் இவர் தான் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.

image

1965ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் உருவான தெய்வத்தாய் திரைப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமானார் கே.பாலச்சந்தர். எம்.ஜி.ஆரின் அறிமுகம் இருந்தாலும் அவரை வைத்து ஒரேஒரு சினிமாவை கூட கே.பாலசந்தர் இயக்கவில்லை. என்ன காரணம் என பிறகு பார்ப்போம். பின்னாளில் இயக்குநர் சிகரமாக விஸ்வரூம் எடுத்த அவர் தமிழில் மட்டுமல்ல இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கினார். விமர்சனங்களைப் பற்றி சிறிதும் அச்சப்படாமல்., மனித உறவுகளுக்குள் இருந்து வந்த மரபுகளை தன் சினிமா கொண்டு முட்டி உடைத்தார். யாரும் பேசத் தயங்கிய விசயங்கள் குறித்தும் கூட சமரசமின்றி தன் பார்வையை முன்வைத்தார். சினிமாவில் கால்வைப்பதற்கு முன் பல நாடகங்களை எழுதி இயக்கினார்.

image

அதனால் தான் அவரது படங்களின் மேக்கிங் நாடகத் தன்மையுடன் இருக்கிறது என தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அவர் தனது கதைகளை அழுத்தமாக நம்பினார். தன் கதைகள் அழுத்தமான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் என உறுதியாக நம்பினார். அதனால் தான் அவர் தனது படங்களில் பெரிய பெரிய நடிகர்களைத் தவிர்த்து கதைக்கான நாயகர்களை மட்டும் தேர்வு செய்து வந்தார். ஆனால் அவரது படங்களில் நடித்தவர்கள் பலர் பின்னாளில் பெரிய நடிகர்களாக உருவாகினர். கே.பாலச்சந்தர் கதை எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் நடித்த பிறகு நாகேஷ் புகழின் உச்சத்திற்கே சென்றார். தனது கதைகளுக்கு பெரிய நடிகர்கள் தேவையில்லை என நம்பியதாலோ என்னவோ அப்போது உச்ச நட்சத்திரமாக இருந்த எம்.ஜி.ஆரை வைத்து இவர் ஒரு படம் கூட இயக்கவில்லை. ஆனால் நடிகர் திலகம் சிவாஜியை வைத்து ஒரு சினிமாவை இயக்கினார் கே.பாலசந்தர்., அத்திரைப்படத்தின் பெயர் “எதிரொலி”. உச்ச நடிகரான சிவாஜியை வைத்து அவர் இயக்கிய ஒரே படமும் அதுவே.

கே.பாலசந்தர் இயக்கிய முதல் திரைப்படம் ‘நீர்க்குமிழி’. இந்த பெயரே பலருக்கும் வித்யாசமாக இருந்தது. 1965ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. அதே ஆண்டில் ஆயிரத்தில் ஒருவன்,எங்க வீட்டுப் பிள்ளை,காக்கும் கரங்கள் ஆகிய படங்கள் உருவானது. இப்படங்களின் பெயர்களிலேயே நாயக பிம்பம் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். இவற்றுக்கு இடையில் நீர்க்குமிழி என்ற பெயரில் ஒரு சினிமா உருவாகிறது. அன்றைய சூழலில் இந்தப் பெயரே பேசு பொருளாக இருந்தது. “நீ முதல் முதல்ல ஒரு சினிமா எடுக்குற., அதுக்கு நீர்க்குமிழினா பேரு வைக்கிறது…? நீர்க்குமுழி நிலை இல்லாதது.” என அவரது நெருங்கிய வட்டாரங்கள் செண்டிமெண்ட் அச்சுறுத்தல்களை கே.பி’க்கு கொடுத்தனர். ஆனால் “இது நான் உருவாக்கிய நாடகத்தின் பெயர்., அதனை திரைப்படமாக மாற்றும் போது அதே பெயரை வைப்பது தானே நியாயம்” என தனது முடிவில் உறுதியாக நின்றார் கே.பாலசந்தர்.

image

பலரும் நம்பியதைப் போல படம் நீர்க்குமிழியாக உடைந்து விடவில்லை. வற்றாத கடலாக திரையுலகில் புதிய அலைகளை உருவாக்கியது. மரபுகளை முறியடித்தவர் என முன்பு கூறினோமல்லவா அதனை தனது படத்திற்கு பெயர் வைப்பதிலிருந்தே துவங்கினார் கே.பாலசந்தர். கே.பாலசந்தரின் “ராகினி ரெக்ரியேஷன்” என்ற குழுவில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகர் நாகேஷ். அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட நாடகம் தான் “நீர்க்குமிழி”. நீர்க்குமிழி திரைப்படத்தை இயக்குவதற்கு முன் யாரிடமும் உதவியாளராக வேலை செய்யாதவர் கே.பாலச்சந்தர். அவரது நாயகர்களில் நாகேஷ் மேல் அவருக்கு தனிப் பிரியம் இருந்தது. திரைப்பட பாடலாசிரியர் ஆலங்குடி சோமு தயாரித்து, கே.பாலசந்தர் இயக்கிய திரைப்படம் “பத்தாம் பசலி”. அதில் நாயகனாக நாகேஷ் நடித்தார்.

தன் வாழ்நாளில் 100 திரைப்படங்களை இயக்கியவர் கே.பாலச்சந்தர். கே.பாலசந்தரின் திரைப்படங்களை பட்டியலிடுவதா, அதற்காக அவர் வாங்கிய விருதுகளை பட்டியலிடுவதா என நமக்கு குழப்பமே வந்துவிடும் அளவிற்கு தனது படைப்புகளுக்காக விருதுகளை வாங்கிக் குவித்தார். 1968 எதிர் நீச்சல், அதே ஆண்டில் தாமரை நெஞ்சம், 1978 தப்புத்தாளங்கள், 1980 வறுமையின் நிறம் சிவப்பு, பின் அதே ஆண்டில் அக்னி சாட்சி, 1989 புது புது அர்த்தங்கள், 1991 வானமே எல்லை, 1993 ஜாதி மல்லி ஆகிய திரைப்படங்களுக்காக தமிழக அரசின் மாநில விருதைப் பெற்றார் கே.பாலசந்தர்.

image

மேலும் தமிழ்நாடு அரசு மற்றும் பாண்டிச்சேரி அரசிடமிருந்து கலைமாமணி’ ‘அண்ணா விருது’ ‘எம் ஜி ஆர் விருது’ கலைஞர் விருது’ ஆந்திர அரசிடமிருந்து ‘நந்தி விருது’ ஆகிய விருதுகளையும் அவர் பெற்றார். 1969 இரு கோடுகள், 1975 அபூர்வ ராகங்கள், 1981 தண்ணீர் தண்ணீர், 1984 அச்சமில்லை அச்சமில்லை,1988 தெலுங்கு திரைப்படமான ருத்ர வீணா, 1991 ஒரு வீடு இரு வாசல் ஆகிய தன் திரைப்படைப்புகளுக்காக தேசிய விருதைப் பெற்றார். 1987-ல் இந்திய அரசால் ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு சத்யபாமா பல்கலைக் கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது., அதன் பிறகு 2007ஆம் ஆண்டு சென்னை பல்கலைக் கழகமும் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. 1974 அவள் ஒரு தொடர்கதை, 1975 அபூர்வ ராகங்கள், 1978 தெலுங்கில் உருவான மரோ சரித்ரா, 1980 வறுமையின் நிறம் சிவப்பு, 1981 தண்ணீர் தண்ணீர், 1981ஆம் ஆண்டு இந்தியில் இவர் இயக்கிய ஏக் துஜே கேலியே, 1984 அச்சமில்லை அச்சமில்லை, 1985 சிந்து பைரவி, 1989 புது புது அர்த்தங்கள், 1991 வானமே எல்லை ஆகிய திரைப்படங்கள் ஃபிலிம் பேர் விருதைப் பெற்றன. 1995-ல் ‘வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

image

இதில் சிந்து பைரவி படம் குறித்து நிறையவே பேசலாம்., ஒரு பாடகர் தன் ரசிகையாக வரும் சுஹாசினி மீது காதல் கொள்கிறார்., அதில் ஏற்படும் தோல்வியால் அவர் தனது தடம் மாறி குடிகாரனாகிறார்., பிறகு அவர் மீண்டும் தன்னை அப்பெண்ணின் உதவியால் மீட்டு கச்சேரிகள் செய்யத் துவங்குகிறார். திருமணத்திற்கு பிறகு வரும் காதலை ஜஸ்டிஃபை செய்யும் கே.பாலசந்தர் தான்., இறுதியில் தனது கருத்தை தனது கதையின் முடிவில் சுக்குநூறாக உடைத்தும் விடுவார். அது தான் கே.பி. டச்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் இளையராஜாவை மட்டுமே நம்பி இருந்த காலம் அது., நடிகர்களின் கால் சீட் இருக்கா என்ற கேள்விக்கு இளையராஜாவின் கால் சீட் இருக்கு என பதில் சொன்னால் படம் கன்பார்ம்., அந்த அளவிற்கு இளையராஜா புல் ஃபார்மில் இருந்தார்., ராக தேவன் இசையில் என்று தான் படத்தின் போஸ்டர்களே ஒட்டப்படும்., பல சுமாரான படங்களைக் கூட இளையராஜா வெற்றிப் படமாக்கினார். அப்போது பல இயக்குநர்கள் இளையராஜாவிடம் சரணடைந்து இருந்தனர்.

image

ஆனால், கே.பாலச்சந்தர் தனது சினிமாக்களில் இளையராஜாவை பயன்படுத்தாமல் தவிர்த்துவந்தார். ஆனால் அவரும் ஒரு கட்டத்தில் இளையராஜாவிடம் வந்தடைந்தார். அது தான் சிந்து பைரவி., இது குறித்து இயக்குநர் கரு.பழனியப்பன் ஒரு மேடையில் பேசியிருந்தார். “கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டு, இளையராஜாவுக்கு சவால்விடும் ஒரு கதை உருவாக்கிய பிறகே இளையராஜாவிடம் செல்ல வேண்டும்” என கே.பி பிடிவாதமாக இருந்தார் என்றும் சொல்லப்பட்டது. சிந்துபைரவியின் சூழல்களை கேட்ட பிறகு ‘இவரை தேடியல்லவா நாம் சென்றிருக்க வேண்டும்’ என எண்ணி இசையமைத்தார் இளையராஜா., எந்த இயக்குநரையும் எளிதாக பாராட்டாத இளையராஜா ‘இது மாதிரி பாட்டெல்லாம் யாருக்கு நான் போடுவது, இது மாதிரி சிச்சுவேஷன் கொண்டு வந்தால் போடலாம்’ என்று கே.பாலசந்தரை பாராட்டியுள்ளார்.

ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் சாதித்தவர் கே.பாலசந்தர், இவர் ரோஜா, அண்ணாமலை போன்ற படங்களை கவிதாலயா மூலம் தயாரித்தார்., இயக்குநராக இவர் பல கலைஞர்களை அறிமுகம் செய்தது குறித்து பார்த்தோம், அதே போல இவர் தயாரித்த ரோஜா திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் பின்னாளில் ஆஸ்கர் விருது பெற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்., அந்த அளவிற்கு கே.பாலசந்தர் சினிமாவில் தொட்டதெல்லாம் பொன்னானது.

image

தனக்கு மட்டுமே கதை சொல்லும் பாணி சிறப்பாக இருக்கிறது. தான் மட்டுமே கதை சொல்வேன் என நினைக்காமல் நல்ல கதைகள் கொண்ட வேற்று மொழிப் படங்களையும் தமிழுக்கு கொண்டு வந்து கொடுத்தார் கே.பாலசந்தர். நடிகை சௌகார் ஜானகி நாயகியாக நடித்து, தயாரித்து, கே.பாலசந்தர் இயக்கிய திரைப்படம் “காவியத் தலைவி”. “உத்தர் பல்குனி” என்ற பெங்காலி திரைப்படத்தின் தமிழாக்கமே இத்திரைப்படம். சௌகார் ஜானகியைப் போல ஜெமினிகணேஷனும் தான் ஹீரோவாக நடித்து தயாரித்த ஒரு படத்தை பாலச்சந்தர் தான் இயக்க வேண்டும் என அழைத்தார். “நான் அவனில்லை” என்ற அப்படம் நாராயணி பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கப்பட்டது.

கதாபாத்திரம் என்றால் திரையில் அவசியம் தோன்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை., அப்படித் தோன்றாமலேயே ஒரு கதாபாத்திரத்தைப் பற்றி மக்களை பேச வைக்க முடியும் என நிரூபித்தவர் கே.பி., அதற்கு உதாரணமாக 1968-ம் ஆண்டு, டிசம்பர் 12-ம் தேதி வெளியான கே.பியின் படமான எதிர்நீச்சலை குறிப்பிடலாம். இப்படத்தில் மாடி வீட்டு மாதுவாக நாகேஷ் நடித்திருப்பார். ஒண்டிக் குடித்தனத்தில் வாழும் நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் பற்றிய இக்கதையில் இருமல் தாத்தா என்ற ஒரு கதாபாத்திரம் வரும். இக்கதாபாத்திரம் ஒரு ப்ரேமில் கூட திரையில் தலை காட்டாது ஆனாலும் இப்போது வரை இருமல் தாத்தா கதாபாத்திரம் பலருக்கும் பரிட்சயம். இன்னொரு உதாரணத்தையும் கூறலாம் கே.பாலசந்தர் எழுதி இயக்கிய நாடகம் “புஷ்பலதா”. மூன்று கல்லூரி மாணவர்கள் புஷ்பா, லதா என்ற இரண்டு பெண்களைப் பற்றி விமர்சிப்பதைத்தான் நாடகாமாக எழுதியிருந்தார். ஆனால் நாடகம் முடியும்வரை புஷ்பாவும் வரமாட்டாள் லதாவும் வரமாட்டாள். விறுவிறுப்பான காட்சி அமைப்புகளை உருவாக்கி இயக்கியிருந்த இந்த நாடகம் கே.பாலசந்தருக்கு நல்ல பேரையும் புகழையும் பெற்றுத் தந்தது. இப்படியாக பரிட்சார்த்த முயற்சிகள் பலவற்றையும் கே.பாலசந்தர் தன் படங்களில் செய்து காட்டினார்.

image

இவர் இயக்கிய மற்றும் தயாரித்த இரு கோடுகள், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ருத்ரவீணா, ஒரு வீடு இரு வாசல், ரோஜா ஆகிய படங்களுக்கு மொத்தம் 8 தேசிய விருதுகள் கிடைத்தன. இதில் தண்ணீர் தண்ணீர் தேசிய விருதைப் பெற்றாலும்., அது “Our daily bread” என்ற அமெரிக்க திரைப்படத்தின் தழுவல் என விமர்சிக்கப்பட்டது. இப்படம் 1931’ல் வெளியானது. உலக சினிமா பிதாமகன் கிங் விதோர் அதனை இயக்கி இருந்தார்., தண்ணீர் தண்ணீர் 1981’ல் வெளியானது. அதனை கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். இவ்விரு படங்களின் கதை காட்சிகள் கதாபாத்திர வடிவமைப்பு என பலவும் ஒத்துப் போயின. இப்படியான விமர்சனங்களுக்கும் தப்பாதவர் கே.பாலசந்தர்.

சினிமாவில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் கே.பாலசந்தரின் கைகள் ஓங்கியிருந்தன. சின்னத்திரையில் இவர் இயக்கிய தொடரான கையளவு மனசு பட்டி தொட்டி எங்கும் பிரபலம். இத்தொடரில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் பிரகாஷ்ராஜும் நடித்திருந்தார். மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்த தாயொருவள் தன் பிள்ளைகளை கையறு நிலையில் தத்துக் கொடுக்கும் உணர்வு பூர்வமான கதை தான் கையளவு மனசு., இந்தத் தொடரின் டைட்டில் பாடல் அப்போதே வைரல் ஹிட். கே.பாலசந்தர் உறவின் முரண்களை மட்டுமல்ல, மனித உணர்வுகளை மட்டுமல்ல நகைச்சுவையிலும் பின்னி எடுத்தார். ஆள்மாறாட்ட கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தில்லுமுல்லு திரைப்படத்தை விடவும் அதற்கு பெரிய உதாரணம் வேண்டாம்.

image

கே.பி தன் வாழ்வில் ஆசைப்பட்ட அனைத்தையும் செய்து முடித்தாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும். ஒரு படைப்பாளி அத்தனை எளிதில் திருப்தி அடைந்து விடமாட்டான் என்பதே உண்மை., என்றாலும் நம் அனைவருக்கும் தெரிந்த அவரது ஆசையொன்று நிறைவேறாமல் போனது., ரஜினி கமல் இருவரையும் ஒரே திரைப்படத்தில் இணைத்து நடிக்க வைக்க வேண்டும் என அவர் விரும்பினார். ஆனால் அது இறுதிவரை நிறைவேறவில்லை. இயக்குநர் சிகரம், தமிழ் சினிமாவின் வெற்றி ஆளுமை., மரபுகளை உடைத்து மாயம் செய்த அற்புத கதை சொல்லி கே.பாலசந்தரை அவரது 90வது பிறந்த நாளான இன்று நினைவு கூர்வோம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.