மனிதனுக்கு எப்போதுமே அமானுஷ்ய எண்ணங்கள் மீதான ஆர்வம் அதிகம். தம் முன்னோர்களின் வழியாக அவன் அறிந்த செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து தெரிந்துகொள்ளும் எண்ணம் பலருக்கும் உண்டு. அப்படியான ஒரு செய்திதான் மனிதனுக்கு ஏழு பிறப்புகள் உண்டு என்று சொல்லப்படுவது. பல மதங்களில் மறுபிறப்பு குறித்த செய்திகள் நம்பப்படுகின்றன. நாம் செய்யும் நன்மை, தீமைகள் ஏழு பிறப்புக்கும் தொடரும் என்ற சொல்லாடலை பலமுறைக் கேட்டிருப்போம். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சமீபத்தில் கிடைக்கப்பெற்ற ஒரு ‘கல் திட்டை’ இதுகுறித்த ஒரு விவாதத்தை தற்போது உருவாக்கியிருக்கிறது.

பழனி அருகே கண்டறியப்பட்ட ‘கல் திட்டு’

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பகுதியில் உள்ள ‘ஆமை கரடு’ என்னுமிடத்தில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் சுமார் 3,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கல்திட்டைகள் கண்டறியப்பட்டன. இந்தக் கல்திட்டைகள் பழந்தமிழ் மக்களின் மறுபிறப்பு மற்றும் ஏழு பிறப்பு நம்பிக்கைகளைக் குறிப்பதாக உள்ளன என ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்திட்டை பற்றிய தகவலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜா ரவிவர்மா மற்றும் சிவகனி ஆகியோர் அளித்தனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி மற்றும் பழநி கல்லூரி பண்பாட்டுத் துறை பேராசிரியர் அசோகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி மற்றும் பேராசிரியர் அசோகனிடம் பேசினோம்.

“ஆயக்குடி பகுதியில் உள்ள ஆமை கரடு என்ற இடத்தில் இந்தக் கல்திட்டைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. வழக்கமான கல்திட்டைகள் அமைப்பிலிருந்து இவை முற்றிலும் மாறுபடுகின்றன. ஏற்கனவே இதே ஆமை கரடு பகுதியில் சங்க காலத்தைச் சேர்ந்த கல் வீடுகளும், புறாக்கூடு அமைப்பிலான கல்திட்டைகளும் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவை இப்பகுதியை ஆண்ட சங்ககால ஆய் வேளிர் அரசர்களின் நினைவிடங்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளன. கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஆய் அண்டிரன் வழியினரின் நினைவிடங்கள் இவை.

Also Read: தூத்துக்குடி காட்டுப் பகுதியில் 13 அடி உயர நடுகல்! – தொல்லியல் ஆர்வலர்கள் உற்சாகம்

தற்போது இந்த ஆமை கரடின் தெற்கு பகுதியில் புதிதாக சில கல் அமைப்புகள் கண்டறியப்பட்டன. இந்த அமைப்புகள் 10-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இங்கு உள்ளன. பாறையின் மேற்புறத்தில் உருண்டை வடிவிலான கல்லை வைத்து அதற்குமேல் ஒரு தேங்காய் அளவிலான கல் வைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் மேலும் ஒரு உருண்டை வடிவிலான கல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேங்காய் வடிவிலான கல் இரண்டு உருண்டை கற்களுக்கு நடுவில் சொருகி வைக்கப்பட்டதை போல் உள்ளது. இந்த அமைப்பு சுமார் 4 அடி உயரம் கொண்டுள்ளது. மேலே உள்ள உருண்டைக் கல் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதற்கான அடையாளத்துடன் காணமுடிகிறது.

அதேபோல் இந்தக் கல்திட்டைகளில் உள்ள ஒரு பலகை கல்லில் ஏழு, ஏழு கட்டங்களாக மொத்தம் 49 கட்டங்கள் பகுக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டங்கள் தமிழர்களின் மறுபிறப்பு மற்றும் ஏழு பிறப்பு நம்பிக்கையினை வெளிப்படுத்தும்விதமாக உள்ளது. தமிழர்களிடத்தில் ஏழு பிறப்பு நம்பிக்கை இருந்ததைத் அப்பர், சுந்தரமூர்த்தி நாயனார், ஆண்டாள் ஆகியோர் தத்தமது பாடல்களில் பதிவுசெய்துள்ளனர். இங்கு கிடைத்துள்ள 49 கட்டங்கள் உடைய கற்பலகை ஆய்வுக்குரியது. பைபிளில் இந்த 49 என்பது ‘முக்தி அல்லது விடுதலை’யின் எண்ணாகப் பாவிக்கப்படுகிறது. இதை ஜுப்ளி வருடம் என்பார்கள்.

கல்திட்டில் பகுக்கப்பட்டுள்ள கட்டங்கள்

பொதுவாகவே, உலகிலுள்ள ஏனைய மதங்கள் மறுபிறப்பை நம்புகின்றன. சைவ, வைணவ (இந்து) சமண, புத்த மதங்கள் மறுபிறப்பு கொள்கையுடைய மதங்கள். எனினும் இங்கு கிடைத்த ஏழு மற்றும் 49 கட்டங்கள் தற்கால மதங்களுடன் தொடர்புடையவையா என்பது ஆய்வுக்குரியது. இக்கட்டங்கள் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழர்களின் மறு பிறப்பு மற்றும் ஏழு பிறப்பு நம்பிக்கையினை குறிப்பதாகக் கருதலாம். இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும்” என்று நம்பிக்கையுடன் கூறினர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.