நாகரிக மாற்றம் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பலருக்கும் மாறிவிட்டது எனலாம்.

குறிப்பாக, கொரானா பரவலைத் தடுக்க அமலில் உள்ள ஊரடங்கால் செல்போன் பயன்பாடு மக்களிடையே கடுமையாக அதிகரித்துள்ளது. வீடுகளில் முடங்கி இருக்கும் ஆண்கள், பெண்கள் என அனைவரும் டிக் டாக் உள்ளிட்ட பல பொழுதுபோக்கு செயலிகளை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலிகள் சமூகத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன எனலாம்.

இந்த நிலையில் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு டிக்டாக் செயலி உட்பட சீன நிறுவனங்களின் பின்புலம் உள்ள சுமார் 59 செயலிகளுக்குத் தடை விதித்தது. இதனால், டிக்டாக் பிரியர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.

பத்மபிரியா

தங்களது திறமைகளை டிக் டாக் செயலியின் வழியாகப் பலரும் வெளிப்படுத்தி வருவதாகக் கூறினாலும், இதனால் பல குடும்பங்களிலும் பிரச்னைகள் ஏற்பட்டுள்ள செய்திகளையும் உயிர்களுக்கே ஆபத்தாக முடிந்த சம்பவங்களையும் கடந்து வந்துள்ளோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், டிக் டாக் மீதான ஈர்ப்பு பலரிடையேயும் அதிகரித்துதான் வந்தது.

இந்த நிலையில் திடீரென டிக் டாக் செயலிக்குத் தடை விதித்ததால் அதில் இயங்கி வந்தவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது என்றே கூறலாம். இதுதொடர்பாகச் சேலத்தைச் சேர்ந்த பத்மபிரியா, “டிக் டாக் செயலி மிகப்பெரிய அளவில் எங்களுக்கு பொழுதுபோக்காக இருந்தது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் எங்களால் நடிக்க முடியாது. எங்களுடைய திறமையை டிக் டாக் வழியாக வெளிப்படுத்துவதில் தப்பில்லை என்றே நினைக்கிறோம்” என்று கூறினார்.

டிக் டாக்

தொடர்ந்து அவர் பேசும்போது, “டிக் டாக்கிலும் நல்ல விஷயங்கள் அதிகமாகவே உள்ளன. அதை மட்டுமே நாம் பார்க்க வேண்டும். தனித்தனியாக டிக் டாக் செய்வதால்தான் பிரச்னை ஏற்படுகிறது. குடும்பமாகச் செய்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. டிக் டாக் செயலியைத் தடை செய்தது மன வருத்தத்தை அளிக்கிறது. எனவே, தடையை நீக்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும். எல்லா விஷயங்களிலும் பிரச்னை இருக்கிறது. முடிந்த அளவு நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். டிக் டாக் செயலிகள் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் உருவாகி இருக்கும் பட்சத்தில், சிலர் தடைக்கு எதிராகப் பேசி வருவதும் பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.

Also Read: டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை… உங்கள் கருத்து? #VikatanPoll

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.