1940-க்கு முன்பு வரை திருநெல்வேலி என்றால் நெல்லையப்பர் கோயில்தான் அடையாளமாக இருந்து வந்தது. அதன் பிறகு திருநெல்வேலிக்கு இருட்டுக்கடை அல்வாவும் ஒரு இனிப்பான அடையாளமாக இணைந்து கொண்டது. 

உலகின் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது பொருட்களை சந்தைப்படுத்த லட்சக்கணக்கான கோடிகளை செலவு செய்கின்றன. ஆனால் மண்மணம் மாறாத திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சர்வதேச அளவில் பலருக்கும் பரிட்சயமான ஒன்று. அந்த அளவிற்கு அதன் தரமும் சுவையும் இருந்து வருகிறது. 

image

1940-களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் துவங்கப்பட்டு இப்போது அவருடைய மூன்றாம் தலைமுறை வாரிசுகளால் நடத்தப்படுகிறது இந்த அல்வா கடை. திருநெல்வேலியைச் சேர்ந்த சொக்கம்பட்டி ஜமீன்தார் வடமாநிலத்திற்கு யாத்திரை சென்ற போது அங்குள்ள ஒரு குடும்பத்தினர் தயாரித்த அல்வாவை சுவைத்ததாகவும்., அந்தச் சுவையில் மயங்கிய அவர், அந்த வடஇந்தியக் குடும்பத்தை திருநெல்வேலிக்கு அழைத்து வந்து குடியமர்த்தியதாகவும், அவர்களே தற்போதைய இருட்டுக்கடை அல்வா உரிமையாளர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அதே நேரம் ராஜஸ்தானைச் சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் பிழைப்புக்காக அந்த காலத்தில் தெற்கு நோக்கி வந்ததாகவும். அவரது வாரிசுகள்தான் இன்று இருட்டுக்கடை அல்வா கடையினை திருநெல்வேலியில் நடத்தி வருவதாகவும் சொல்கிறார்கள். இந்த பிஜிலி சிங் தான் ஜமீன்தார் அழைத்து வந்த நபர் என்றும் கூறப்படுகிறது.

image

உலகம் முழுக்க பல வகையான அல்வாக்கள் கிடைக்கின்றன. பாதாம் அல்வா, மஸ்கோத் அல்வா, பீமபுஸ்டி அல்வா என பல வகை அல்வாக்கள் உண்டு. ஆனால் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவிற்கு மட்டும் இந்த சுவை எப்படி வந்தது என்பதே மிகப்பெரிய ஆச்சர்யம். இந்த இருட்டுக்கடை அல்வா தயாரிப்பிற்காக அவர்கள் பயன்படுத்தும் கோதுமையினை கையால் தான் அரைக்கிறார்களாம். மிஷின் பயன்படுத்துவதில்லையாம்., மேலும் தாமிரபரணித் தண்ணீர் கலந்து செய்யும்போது மெருகேற்றம் அடையும் இதன் சுவை எந்நாளும் நாவில் தித்திக்கும். 

image

1940களில் மின்சார விளக்குகள் இல்லாமல் நெல்லையப்பர் கோயில் அருகில் துவங்கப்பட்ட இந்த இருட்டுக் கடை பிற்காலத்தில் தொழில்நுட்பங்கள் வளர்ந்த பிறகும் தன்னை புதிதாக மாற்றிக் கொள்ளவேயில்லை. இன்றும் கூட ஒரு சிறிய 40 வாட்ஸ் பல்ப் மட்டுமே இக்கடையில் எரிகிறதாம். கால் கிலோ, அரைக்கிலோ, ஒரு கிலோ என பொட்டலங்கள் போடப்பட்டு தயார் நிலையில் இருக்கும் இந்த அல்வாவை வாங்க மாலை நேரத்தில் கூட்டம் அலை மோதுகிறது. மாலையில் சிலமணி நேரம் மட்டுமே இயங்கும் இந்த இருட்டுக்கடை அல்வாவை வாங்கிச் சுவைக்க பலரும் வரிசையில் காத்திருப்பர். 

image

இத்தகைய புகழ்பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஹரி சிங்கிற்கு கடந்த சில நாள்களாக உடல் தொந்தரவு இருந்து வந்துள்ளது. இதனால் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹரி சிங் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஹரி சிங் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்த பலரும் தங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தே இந்த இருட்டுக்கடை அல்வாவை சுவைத்து மகிழ்ந்திருப்பர். இதனால் ஹரிசிங்கின் தற்கொலையை பலரும் உணர்வுப்பூர்வமான பேரிழப்பாக கருதுகின்றனர். தங்கள் பால்ய காலத்தில் சுவைத்த இருட்டுக் கடை அல்வாவை எண்ணி கண்கலங்குகின்றனர் பலர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.