எல்லையில், இந்திய – சீன ராணுவ வீரர்கள் மோதலுக்கு இணையாக இந்திய அரசியலில், பா.ஜ.க – காங்கிரஸ் தலைவர்களிடையேயான வார்த்தைப் போர் உக்கிரமாகி வருகிறது.

‘லடாக் எல்லை விவகாரம் குறித்து, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எச்சரித்து வந்தபோதும்கூட, அதில் கவனம்கொள்ளாமல், எதிர்க்கட்சிகளின் அரசாங்கங்களைக் கவிழ்க்கவும் உண்மையை மறைக்கவுமான வேலைகளை மட்டுமே செய்துவந்தது மத்திய பா.ஜ.க அரசு’ என்று குற்றம் சாட்டுகிறது காங்கிரஸ் கட்சி.

பா.ஜ.க தரப்பிலிருந்தோ, ‘நாட்டின் பாதுகாப்பு பிரச்னையில், தோள் கொடுத்து பலம் சேர்க்காமல், பிரதமரின் நடவடிக்கையை விமர்சிப்பதென்பது காங்கிரஸ் கட்சி செய்கிற அப்பட்டமான அரசியல்’ என்று பதிலடி கொடுத்துவருகிறார்கள். இதற்கிடையே, ‘சீன வீரர்கள் 40 பேர் பலி; இந்திய வீரர்கள் 20 பேர் பலி’ என்று கள நிலவரம் குறித்து அவ்வப்போது அப்டேட் செய்வதும், ‘பிரதமர் நேருவும்… சீனப் போரும்…’ என்று சமூக ஊடகம் வழியே, அக்கப்போர் நடத்திவருவதுமாக இரண்டு கட்சிகளைச் சேர்ந்த உள்ளூர்த் தலைவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்வது தனிக்கதை.

இந்தியா – சீனா

இந்தநிலையில், இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்கவும் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவும் இன்று (19-6-2020) அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய பா.ஜ.க அரசோடு தொடர்ந்து முரண்பட்டு – மோதல் போக்கைக் கடைப்பிடித்துவரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த அனைத்துக்கட்சி கூட்ட முடிவை வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத், ‘ நமது வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். சீன வீரர்கள் எத்தனைபேர் கொல்லப்பட்டனர்? உண்மை என்ன? நாடே பிரதமருக்கு ஆதரவாக நிற்கிறது. ஏதாவது பேசுங்கள்…’ என நாட்டின் குடிமகனாக உணர்வுபூர்வமான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு, உண்மையைத் தெரிந்துகொள்ளவுமான கேள்வியையும் முன்வைத்திருக்கிறார்.

கொரோனா பாதிப்புகள் ஒருபக்கம், போர்ப் பதற்றம் மறுபக்கம் என இக்கட்டான நிலையில் நாடு நின்றுகொண்டிருக்கும்போது, ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுக்கவேண்டியது அனைவரது பொறுப்பாக இருக்கிறது. இந்தவகையில், நாகரிகமான அரசியலை முன்னெடுத்துச் செல்வதில், ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி என இரு தரப்புக்குமே சம அளவிலான பங்கு இருக்கிறது.

Also Read: 1962 முதல் 2020 வரை இந்தியா – சீனா எல்லையில் என்ன நடந்தது? ஒரு விரிவான அலசல்!

இந்தநிலையில், இந்திய – சீன வீரர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில், ‘மத்திய பா.ஜ.க அரசு முன்னெச்சரிக்கையாக என்ன செய்திருக்கவேண்டும்’ என்பது குறித்துப் பேசும் தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, ”கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில், நமது வீரர்கள் 20 பேர் இறந்துவிட்டதாக ராணுவம் தெரிவிக்கிறது. இந்த மோதலும் அதைத்தொடர்ந்த உயிரிழப்புகளும் வருந்தத்தக்கவை. இந்தியாவைப்போன்ற ஒரு வளரும்நாடு, முன்னேற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நாடு, யுத்த வலையில் சிக்கிக்கொண்டால், அதனுடைய பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்படையும் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்.

பொதுவாகவே, சீனாவுக்கும் நமக்குமான புரிதல் என்பது பன்னெடுங்காலமாகவே சரிவர இல்லை என்பதுதான் உண்மை. இதைத்தான், மறைந்த முன்னாள் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், ‘பாகிஸ்தான் நமக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நாடு என்று இந்தியர்கள் பொதுவாகக் கருதுகிறார்கள். ஆனால், பாகிஸ்தானைவிடவும் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்தைத் தருகிற நாடு சீனாதான்’ என்று ஒருமுறை கூறியிருக்கிறார். அவரது இந்தக் கருத்திலும் உண்மை இருக்கிறது. எனவே, இதுகுறித்தும் நாம் கவனம் எடுத்துக்கொள்வது அவசியம்.

கே.எஸ்.அழகிரி

1962-ம் ஆண்டில் நடைபெற்ற இந்திய – சீனப் போருக்குப் பிறகு இரண்டு நாடுகளிடையேயும் பெரிதாக எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் சுமுகமான சூழல்தான் நிலவிவந்தது. இதை நல்ல புரிதலுடன் கூடிய உறவென்றும் சொல்லலாம்; அல்லது மோதிக்கொள்ளக்கூடிய அளவில் இல்லாத உறவு இருந்தது என்றும் சொல்லலாம். ஆனால், இதையெல்லாம் தாண்டி இப்போதைய பிரதமர் மோடி, சீனப் பிரதமரை நம் நாட்டுக்கே – அழைத்துவந்தார்; இரு தேசங்களிடையே பல ஒப்பந்தங்களும் கையொப்பமாகின. இப்படியொரு சூழலில், கல்வான் பள்ளத்தாக்கில் இரு தரப்பினரும் மோதிக்கொள்வதற்கான காரணம் என்ன?

இந்தியா – சீனா இடையே இந்த அளவுக்கு நெருக்கமும், புரிதலும், உடன்பாடும் இருக்கிறபோது எல்லையில் எப்படி பிரச்னை வருகிறது?… அப்படியென்றால், ஏற்கெனவே இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியபோது, எல்லைப் பிரச்னைகள் பற்றிப் பேசவில்லையா?… வெறும் வியாபாரங்கள் அல்லது தொழில்கள் பற்றி மட்டுமே பேசினார்களா?… இவையெல்லாம் மக்களுக்கு எழுகிற அடிப்படையான சந்தேகங்கள். எனவே, இந்தச் சந்தேகங்களைப் பற்றி பேசியாகவேண்டியது நமது கடமை.

சமீபகாலமாகவே, ‘எல்லையில் நமக்கும் சீனாவுக்கும் இடையே மோதல்கள்’ என்ற செய்திகள் வந்தபோதே, ராகுல்காந்தி தனது சுட்டுரையில் (ட்விட்டர்) இதுகுறித்து பலமுறை கோடிட்டுக் காட்டியிருந்தார். அதாவது, ‘எதனால் இந்த மோதல்கள் வருகின்றன… இரண்டு ராணுவங்களும் இது சம்பந்தமாகப் பேசியிருக்கிறார்களா… ராஜிய ரீதியில் இதைப்பற்றிய விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றனவா, வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள் இதுகுறித்துப் பேசியிருக்கிறார்களா, சீனாவில் அமைந்துள்ள நமது தூதரகம் இந்தப் பிரச்னைகள் குறித்து என்ன நினைக்கிறது…’ என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அந்தச் சுட்டுரைகளில் எழுப்பியிருந்தார்.

ராகுல்காந்தி

ஆனால், இந்த நாட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், எதிர்க்கட்சிகள் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் மத்திய பா.ஜ.க அரசோ அல்லது பிரதமர் மோடியோ எந்தப் பதிலும் அளிப்பது இல்லை. ராகுல்காந்தி எழுப்பியிருந்த இந்தக் கேள்விகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அப்போதே நமது பிரதமரும் இந்தப் பிரச்னையில் உரிய கவனம் செலுத்தியிருந்தால், பல்வேறு விவரங்கள் நமது கவனத்துக்கு வந்திருக்கும்; இப்போது நிகழ்ந்துள்ள இந்த உயிர் பலிகளும்கூட தவிர்க்கப்பட்டிருக்கும்.

இப்போது, இரு நாட்டு ராணுவங்களும் அவரவர் பழைய எல்லையை நோக்கிப் பின்வாங்கியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதாவது, 48 மணி நேரத்தில் இரு ராணுவங்களும் தங்களது பழைய இருப்பிடத்துக்கே செல்லமுடியும் என்று சொன்னால், அந்தளவுக்கு 48 மணி நேரத்தில் ஒரு சுமுகத்தை ஏற்படுத்த முடிந்திருக்கிறது என்று சொன்னால், ஏன் 48 மணி நேரத்துக்கு முன்பே இந்த சுமுக நிலையைக் கொண்டுவந்திருக்க முடியாது… என்ற கேள்வியும் எழுகிறது.

எனவே, இந்தியா – சீனா இடையிலான இந்தப் பிரச்னை என்பது, சாதாரண பிரச்னையல்ல. ஏற்கெனவே 1962-ல் நமது தேசம் இதை அனுபவித்திருக்கிறது என்ற நிலையில், நமது இந்திய அரசாங்கம் இதையெல்லாம் மனதில்கொண்டு, உரிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மட்டுமல்ல… பொதுவாகவே பிரதமர் என்பவர் வெளிப்படையாகப் பேசுதல் வேண்டும். அது, கொரோனாவாக இருந்தாலும் சரி; புலம்பெயர்த் தொழிலாளர் விஷயமாக இருந்தாலும் சரி; பொருளாதார விஷயங்களானாலும் சரி; பிரதமர் என்பவர் செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும், எதிர்க்கட்சிகளோடு நிறைய பேச வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்தால்தான் நமக்கும் எல்லா விஷயங்களும் புரியவரும். இல்லையென்றால், 2 அரசாங்கங்களுக்கிடையே நடைபெறும் விஷயங்கள் பெரும்பாலானவர்களுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை என்பதை நமது பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவர நான் விரும்புகிறேன்” என்றார் கோரிக்கையாக.

பொன் ராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து மத்திய பா.ஜ.க அரசு மீது வைக்கப்படும் புகார்களுக்கு விளக்கம் கேட்டு, தமிழக பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்….

”பாகிஸ்தானை விடவும் சீனா நம்பகத்தன்மை இல்லாத நாடு அல்லது நம்பகத்தன்மை கொண்ட நாடு என்பதெல்லாம் வேறு விஷயம். நம்மைப் பொறுத்தவரையில், எல்லை நாடுகளோடு நட்போடு இருப்பதுதான் முதல் அம்சம். இந்த நட்பு என்பது, நாம் மட்டுமே ஒரு கையால் தட்டிக்கொண்டிருப்பது அல்ல. இரண்டு கைகளுமே சேர்ந்து தட்டினால்தான் ஓசை. எனவே, இரண்டு நாடுகளுமே இணைந்துவந்தால்தான் அவை நட்பு நாடுகளாக இருக்கமுடியும்.

Also Read: `288 சோதனைச் சாவடிகள்; பழைய இ-பாஸ் கேன்சல்!’ – சென்னையில் கடுமையாக்கப்படும் ஊரடங்கு

அண்டை நாடுகளோடு நட்பு பாராட்ட முதல் ஆளாக நாமே கை கொடுக்கக்கூடத் தயாராக இருக்கிறோம். அதேநேரம் நட்புக்கு விரோதமாக அவர்கள் செயல்படத் தயாரானால், அவர்களைவிடவும் வேகமாகச் செயல்பட நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை நாங்கள் ஏற்கெனவே நிரூபித்திருக்கிறோம். எனவே, 1962-ல் சீனப் போரினால், காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட சூடு என்பது அவர்களுடைய அனுபவம். அந்தத் துயரத்திலிருந்து மீண்டு வர முடியாமலேதான் முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் காலம் முடிந்துபோனது. அந்தமாதிரியான சூழ்நிலை இனி நிச்சயமாக இருக்காது. ஏனெனில், நாம் நட்புக்குக் கை கொடுப்போம். ஆனால், அந்த நட்பைப் பாராட்டத் தவறினால், கொடுக்கக்கூடிய நம் கை எப்படி மாற வேண்டுமோ அப்படி மாறும். எனவே, யாரும் எங்களுக்குப் பாடம் எடுக்கவேண்டிய அவசியம் கிடையாது. பிரதமர் நரேந்திர மோடி, எல்லாம் தெரிந்தவர். அவருக்குப் பாடம் எடுக்கக்கூடிய அளவுக்கு இன்றைக்கு யாருமே இல்லை.

நரேந்திர மோடி

நாமாக இருப்பது மௌனம். பிறரை அடிமைப்படுத்தி அல்லது அச்சப்படுத்திப் பேச விடாமல் இருக்கச் செய்வதென்பது கோழைத்தனம். இவற்றில் பிரதமர் மோடியினுடைய மௌனம், எப்படிப்பட்ட மௌனம் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். அடுத்து, பிரதமர் மோடி பேச ஆரம்பிக்கும்போது, அவருடைய வார்த்தைகள் என்பது செயல்படும் அம்சமாகவே இருக்கும் என்பதை ஏற்கெனவே அனுபவபூர்வமாக உலகம் பார்த்திருக்கிறது. எனவே, பிரதமர் மோடியின் மௌனத்தில், ஆயிரம் அர்த்தங்கள் இருக்க முடியும். எனவே, மன்மோகன்சிங் மௌனத்தைப் போலவோ அல்லது மற்றவர்களின் மௌனத்தைப் போலவோ அல்ல பிரதமரின் மௌனம்” என்றார் சூசகமாக.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.