இன்றளவும் எளிமையான அரசியல்வாதிக்கு முன்னுதாரணமாகக் காட்டப்படுவோரில் ஒருவர் தமிழக முன்னாள் அமைச்சர் கக்கன். அவரின் 111ஆவது பிறந்தநாள் இன்று.
 
சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்று சிறைவாசம் அனுபவித்தவரும், பத்து ஆண்டுகள் அமைச்சராக இருந்தவருமான கக்கனின் வீடு இது. இவரின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள மேலூர் காந்திஜி மாணவர் இல்லத்தின் தற்போதைய நிலை இது. காலம் அவரது இருப்பிடத்தைச் சிதைத்தாலும் அவரின் எளிமையும், மக்கள் பணியும் இன்றும் பேசப்படக்கூடியதே.
 
image
 
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தும்பைப்பட்டி கிராமத்தில் 1909 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி பிறந்தவர் கக்கன். எட்டாம் வகுப்பு வரையே படித்த இவர், வெள்ளையனே வெளியேறு, ஆகஸ்ட் புரட்சி போன்ற சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டவர். கக்கன், 1942 முதல் 1944 வரை 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர். 
 
தமிழகத்தில் 1946ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகவும், 1952ம் ஆண்டு மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட கக்கன், 1954 முதல் 1957 வரை தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பு வகித்தார். காமராஜர் தலைமையில் அமைந்த காங்கிரஸ் ஆட்சியில் 1957 முதல் 1967 வரை 10 ஆண்டுகள் பொதுப் பணித்துறை, காவல்துறை, சிறைத்துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட 12 துறைகளுக்கு அமைச்சராக இருந்தவர் கக்கன். 
 
image
 
இவர் அமைச்சராக இருந்தபோதுதான் மேட்டூர் மற்றும் வைகை அணைகள் கட்டப்பட்டன. இவர் விவசாய அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் இரண்டு வேளாண் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டன. 1967 சட்டமன்றத் தேர்தலில் மேலூர் தொகுதியில் போட்டியிட்ட கக்கன் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். 
 
1973 இல் அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற அவர் இறுதிக் காலத்தில் ஏழ்மையால் நோய்வாய் பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதியின்றி தரையில் படுத்து சிகிச்சை பெற்றார், அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் நேரில் வந்து கக்கனைப் பார்த்து நலம் விசாரித்ததுடன், மருத்துவர்களிடம் அவருக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். 
 
image
 
1981 டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி சென்னையில் கக்கன் காலமானார். அவரது நினைவாக அவர் பிறந்த ஊரான மேலூர் அருகே தும்பைப்பட்டியில் 2001ல் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் தியாகி கக்கனுக்கு மணிமண்டபம் திறக்கப்பட்டது. இவர் நாட்டுக்கு ஆற்றிய பணிகளைப் பாராட்டி, இந்திய அரசு கக்கனின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999ம் ஆண்டு வெளியிட்டுக் கௌரவப்படுத்தியது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.