“கொரோனா ஊரடங்கின் காரணமாக, ரீடிங் எடுக்க ஊழியர்கள் வர இயலாத காரணத்தால், பல இடங்களில் கடந்த மார்ச் – ஏப்ரல் மாதத்துக்கு, முந்தைய மாதக் கட்டணத்தையே கட்டலாம்” என மின்சார வாரியம் தெரிவித்திருந்தது. அப்படி, “கடந்த மாதக் கணக்கீட்டுத் தொகையின்படி மின் கட்டணம் செலுத்திய, நுகர்வோர்களுக்கு அடுத்த மின் அளவீடு கணக்கெடுக்கப்படும் போது, மின் கணக்கீடானது இரண்டு இருமாத (அதாவது 4 மாதங்கள்) மின் அளவீட்டிற்கு மேற்கொள்ளப்படும். அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட மின் அளவீட்டுக்கான தொகையில், முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது சரி செய்யப்படும்” எனவும் மின்சார வாரியம் தெரிவித்திருந்தது.

Also Read: மூன்று மடங்கு, நான்கு மடங்கு மின் கட்டணப் புகார்கள்… உண்மைநிலைதான் என்ன?

இந்தநிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின்கணக்கீட்டு முறை தன்னிச்சையானது மற்றும் நியாமமற்றது அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறி தேசிய மக்கள் சக்திக் கட்சியின் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நாளை (ஜூன் 15) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருக்கிறது.

உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் தாக்கல் செய்திருக்கும் மனுவில், “மின்சார வாரியம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்பயன்பாட்டைக் கணக்கிட்டு நுகர்வோரிடம் கட்டணம் வசூலித்து வருகிறது. பயன்பாட்டின் அடிப்படையில் 100 யூனிட்டுகளுக்குக் குறைவாக மின்பயன்பாடு கொண்டோருக்கு அரசு முழுமையாக மானியம் அளிக்கிறது. அதன்பிறகு 101 முதல் 200 யூனிட்டுகள் வரையில் ஒரு கட்டணமும் 201 முதல் 500 யூனிட்டுகள் வரை ஒரு கட்டணமும் 500 யூனிட்டுகளுக்கு மேல் ஒரு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. முதல் 100 யூனிட்டுகளுக்கு மானியம் அளித்தது போக மீதமிருக்கும் யூனிட்டுகளுக்கு கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

மின்சாரம்

லாக்டௌன் காரணமாக மின்சார வாரிய ஊழியர்கள் பல்வேறு நுகர்வோரின் மின் கணக்கீடு தொடர்பாக மீட்டர் கணக்கெடுக்க வரவில்லை. அதனால், மின்நுகர்வோர் முந்தைய மாதக் கட்டணத்தையே செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், மே அல்லது ஜூன் மாதங்களில் மீட்டர் கணக்கீடு எடுக்கப்பட்ட பின்னர், நுகர்வோர் செலுத்திய தொகை கழித்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மே அல்லது ஜூன் மாதத்தில் எடுக்கப்படும் மீட்டர் கணக்கீடு சரிசமமாகப் பிரிக்கப்பட்டு தலா இரண்டு மாதங்களுக்கான யூனிட் பயன்பாடாகக் கருத்தில் கொள்ளப்படும் என்ற மின்வாரியத்தின் முடிவால் நுகர்வோர் கூடுதலாக மின்கட்டணம் செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்’’ என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: `ஏ.சி, கூலர்கள், மின் விசிறி பயன்பாடு எப்படி இருக்க வேண்டும்?’ – அரசின் வல்லுநர் குழு பரிந்துரை

மேலும், மனுவில் தனது வீட்டு மின்கணக்கீடு தொடர்பான உதாரணத்தையே மனுதாரர் மேற்கோள் காட்டியிருக்கிறார். “லாக்டௌனுக்கு முன்பாக நான் 480 யூனிட் மின்சாரம் பயன்படுத்திய நிலையில், அதற்குக் கட்டணமாக ரூ.1,070 கட்டினேன். முதல் 100 யூனிட்டுக்கு முழுமையான மானியம், 101 முதல் 200 யூனிட்கள் வரையில் யூனிட்டுக்கு ரூ.2 கட்டணம் மற்றும் 201 முதல் 480 யூனிட்டுகள் வரையில் 500 யூனிட்டுக்குக் கீழ் பயன்பாடு உள்ள காரணத்தினால் யூனிட்டுக்கு ரூ.3 என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டது. அதன்பின்னர், லாக்டௌன் காலத்தில் மீட்டர் கணக்கீடு பதிவு செய்யப்படவில்லை. அதனால், அடுத்த மின்கட்டணமாக முந்தைய கட்டணமன ரூ.1,070 மீண்டும் கட்டினேன்.

தமிழ்நாடு மின்சார வாரியம்

பின்னர், கணக்கெடுக்கப்பட்டபோது நான் 1,240 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாகக் காட்டியது மின்மீட்டர். இதனால், அது சரிசமமாகத் தலா 620 யூனிட்டுகளாகப் பிரிக்கப்பட்டு அதற்குரிய தொகை கணக்கிடப்பட்டது. இந்தக் கணக்கீட்டால், 500 யூனிட்டுக்கும் அதிகமாக நான் பயன்படுத்தியதாகக் கணக்கிடப்படுகிறது. அதனால், ரூ.2,572 மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. முதல் 100 யூனிட்டுகளுக்கு முழுமையான மானியம், 101 முதல் 200 யூனிட்டுகள் வரை ரூ.3.5, 201 முதல் 500 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.4.60 என்ற அடிப்படையிலும் 501 முதல் 620 யூனிட்டுகள் வரை யூனிட்டுக்கு ரூ.6.60 என்ற அடிப்படையிலும் கணக்கீடு மேற்கொள்ளப்பட்டது. இதனால், இரண்டு முறை சேர்த்து மொத்தமாக ரூ.5,144 மின்கட்டணமாக செலுத்த வேண்டும் என மின்சார வாரியம் கூறியது. முந்தைய மின்கட்டணமாக நான் செலுத்திய ரூ.1.070-ஐக் கழித்துக் கொண்டு மீதத் தொகையைச் செலுத்தும்படி மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மின் பயன்பாடு கணக்கிடப்படாத முதல் இரண்டு மாத காலத்துக்கு மின்வாரியம் 480 யூனிட்டுக்கான கட்டணத்தையே பெற்றிருக்க வேண்டும். அடுத்த இரண்டு மாத காலத்துக்கு 760 கட்டணத்தைப் பெற்றிருக்க வேண்டும். மின்சார வாரியம் அதைச் செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் குறைந்தபட்சம் முதல் இரண்டு மாத காலத்துக்காவது மின்பயன்பாடு 500 யூனிட்டுக்குக் கீழான வகையில் எனது கட்டணம் கணக்கிடப்பட்டிருக்கும். மின்சார வாரியம் சரிசமமாகப் பங்கிட்டதால் கூடுதலாக ரூ.578 மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மொத்தத் தொகையில் 12.66 சதவிகிதமாகும்’’ என்றும் மனுதாரர் குறிப்பிட்டிருக்கிறார்.

சென்னை உயர் நீதிமன்றம்

அதேபோல், 100 முதல் 500 யூனிட்டுகள் வரை மின்பயன்பாடு கொண்ட ஆயிரக்கணக்கான மின் நுகர்வோர் கூடுதலாக மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதேநேரம், 500 யூனிட்டுகளுக்கு அதிகம் பயன்படுத்துவோருக்கு இதனால், எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அவர்கள் வழக்கமாகக் கட்டணம் மின்கட்டணத்தையே செலுத்துவார்கள். அதனால், இந்த மின்கணக்கிடும் முறையால் பாதிக்கப்படப் போவது 100 முதல் 500 யூனிட்டுகள் வரை மின்பயன்பாடு கொண்ட நுகர்வோர்களே’’ என்றும் மனுதாரர் சுட்டிக் காட்டியிருக்கிறார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.