தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பி.கண்ணன், இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் 67 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கண்ணன், தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பீம்சிங்கின் மூன்றாவது மகன். இவரின் சகோதரர்தான் எடிட்டர் லெனின். ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘காதல் ஓவியம்’, ‘நாடோடித் தென்றல்’, ‘கிழக்கு சீமையிலே’, ‘கருத்தம்மா’ உள்ளிட்ட பல பாரதிராஜாவின் படங்களுக்கு கண்ணன்தான் ஒளிப்பதிவாளர். கண்ணனின் ஒளிப்பதிவுகள் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் என்கிறார்கள் இயக்குநர்கள்.

69 வயதான கண்ணன், இதய நோய்க்கான சிகிச்சையில் இருந்து வந்திருக்கிறார். ஆனால், சிகிச்சை பலனின்றி காலமானார். தற்போதைய தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணன்

“ஒளிப்பதிவாளர் கண்ணன் மாதிரி ஒரு எளிமையான மனிதரைப் பார்க்க முடியாது. அவர், அவ்ளோ பெரிய சாதனையாளர்னு வெளியே காட்டிக்கவே மாட்டார். நான் கல்வி நிறுவனம் ஆரம்பிச்ச சமயத்துல, கண்ணன் சார்தான் ஒளிப்பதிவுத் துறைக்கு ஹெச்.ஓ.டி. ரொம்ப சப்போர்டா இருந்தார். எதுக்குமே அலட்டிக்காத மனிதர். ஒளிப்பதிவு படிக்கிற பசங்க ஏதாவது சந்தேகம் கேட்டா, ரொம்ப ஆர்வமா பதில் சொல்வார். ரொம்ப நல்ல ஆசிரியர். அவர் டென்ஷனாகி பார்த்ததேயில்லை. தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கு அவ்ளோ பண்ணியிருக்கார். எல்லா ஒளிப்பதிவாளருக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும். இப்போ அவர் இறப்பு கேள்விப்பட்டதும் ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. ஒளிப்பதிவுத் துறை பெரிய ஜாம்பவானை இழந்துடுச்சு” என்றார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

பி.கண்ணனிடம் நீண்ட காலம் உதவி ஒளிப்பதிவாளராக இருந்த நடிகர் இளவரசுவிடம் பேசினோம். “‘மண்வாசனை’ படத்துல இருந்து ‘தமிழ்செல்வன் ஐ.பி.எஸ்’ வரைனு 23 படங்கள் அவர்கிட்ட வொர்க் பண்ணேன். இளையராஜா சார்தான் பாரதிராஜா சார்கிட்ட இவரை அறிமுகம் செஞ்சு வெச்சவர். அதுக்குப் பிறகு, பாரதிராஜா சாருடைய பல படங்களுக்கும் கண்ணன் சார்தான் ஒளிப்பதிவாளர். ‘புதிய வார்ப்புகள்’ தெலுங்கு வெர்ஷன் ‘கொத்த ஜிவிதலு’தான் பாரதிராஜா சார் கூட கண்ணன் சாருக்கு முதல் படம்.

நடிகர் இளவரசு

Also Read: “இந்த இரவில் நாம் வேறெங்கோ, வேறொன்றாகவோ வாழலாமா?” – HBD ஜி.வி.பிரகாஷ்

எனக்கு எல்லாமே கண்ணன் சார்தான். ஒவ்வொரு ஸ்டேஜிலும் என்னை தட்டிக்கொடுத்து பண்படுத்தினது எல்லாமே சார்தான். என் அப்பாவைவிட கண்ணன் சார்தான் என் வாழ்க்கையில பெரிய உறுதுணையா இருந்திருக்கார். சினிமாவைத் தாண்டி நிறைய பேசுவார். இலக்கியம், இயற்கை, பறவைகள், விலங்குகள் இதுல எல்லாம் அவருக்கு பெரிய ஆர்வம். நல்ல ரசனையாளர். நான் அவர்கிட்ட பேசும்போது, ‘உனக்கான பாடி லாங்குவேஜ் நல்லாயிருக்கு. நீ நடிக்கப் போ. எப்போவேணாலும் ஒளிப்பதிவு பண்ணலாம். ஆனா, வாய்ப்பு வரும்போது நடிச்சுக்கணும்’னு சொல்லி என்னை நடிக்க அனுப்பிவிட்டது கண்ணன் சார்தான்.

நான் அடிக்கடி சார்கிட்ட பேசுவேன். அவருடைய இயல்பே, எவ்வளவு சிரமமான சூழல் வந்தாலும் ஜோக் அடிச்சி சிரிச்சிட்டே இருக்கிறதுதான். வியாழக்கிழமைதான் சார்கிட்ட கடைசியா பேசினேன். ‘ஒண்ணும் பிரச்னையில்லப்பா. சரியாகி வந்துடுறேன்’னு சொல்லிட்டு உள்ள போனார். ஆனா, இப்படி ஒரு செய்தி வரும்னு யாரும் எதிர்பார்க்கலை. முக்கியமான ஒளிப்பதிவாளர்கள் நிறைய பேர் சங்க வேலைகள் வேண்டாம்னு கொஞ்சம் ஒதுங்கி இருந்தபோது, சங்கம் வேற மாதிரி போயிடுச்சு.

B.Kannan

அப்புறம் சார்தான்… பி.சி.ஶ்ரீராம் சார், ராஜீவ் மேனன் எல்லோர்கிட்டேயும் பேசி மறுபடியும் சங்கத்தை முறையா வழிநடத்தினார். எதையுமே பொறுமை இழக்காமல் கையாளுறவர். அவருடைய சுயமரியாதையைக் கொண்டுவந்து அநாவசியமா பொருத்திப்பார்க்க மாட்டார். ரொம்ப நல்ல மனுஷன். 19 வயசுல வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன். அப்போ இருந்து இப்போவரை எனக்கு இவர்தான் எல்லாம். ஆனா, அவர் இனிமேல் என்கூட இல்லைனு நினைக்கும்போது ரொம்ப ரொம்ப வேதனையா இருக்கு” என்றார் வருத்தத்துடன்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.