நிறவெறி மீதான தாக்குதலும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்களும் காலங்காலமாகத் தொடர்கிறது. சாதி, மதம், மொழி, இனம், நிறம், ஏழ்மை என்று ஊருக்கு ஊர் மனிதனை மனிதன் வெறுத்து ஒதுக்குவதற்கான காரணங்கள்தான் வெவ்வேறு வடிவில் உள்ளதே தவிர, ஒட்டுமொத்த பிரச்னைக்கும் தீர்வெல்லாம் ஒன்றுதான். அது சில அன்பாலான இதயங்கள் இன்றுவரை இதுபோன்ற அநீதிகளுக்கு எதிராக வாதாடியும் போராடியும் வருவதுதான்.

ஜார்ஜ் ஃப்ளாய்ட்

கடந்த சில நாள்களாக அமெரிக்காவில் துவங்கி உலகெங்கும் பேசப்பட்டு வரும் நிறவெறிக்கு எதிரான போராட்டத்துக்கு காரணமாக அமைந்தது ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் (46) ஜீரணிக்க முடியாத படுகொலைதான். ஆம், ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் உடற்கூறாய்வு அறிக்கையும் இதைக் கொலை என்றே சொல்கிறது. கடந்த 25-ம் தேதி வெள்ளையின போலீஸ் அதிகாரி ஒருவரால் கறுப்பினத்தைச் சேர்ந்தவரான ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவர் மிக மோசமான முறையில் தாக்கப்பட்டு இறந்ததைக் கண்டு கொதித்தெழுந்த மக்கள் ஊரடங்கு காலமென்றும் பாராமல் நீதி கோரி போராடி வருகின்றனர்.

கெய்டன் அமோவோ , மோயோ பதுன் சீன் ஹில்

ஜார்ஜின் இந்தத் துயர மரணத்தை எதிர்த்துப் போராடும், பால்ய காலந்தொட்டே நண்பர்களாக இருந்து வரும் மூவரின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி அநேக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கறுப்பின இளைஞர்களான கெய்டன் அமோவோ, மோயோ பதுன் மற்றும் வெள்ளையினத்தவரான சீன் ஹில் ஆகிய மூவரும்தான் அந்த வைரல் முகங்கள்.

இந்தப் புகைப்படம் வைரல் அடிக்க அப்படி என்னதான் விசேஷம் என்று பார்த்தால், மூவரில் ஒருவரான சீன் ஹில் ஏந்தி நிற்கும் பதாகையில் உள்ள வாசகம்தான். சீன் ஹில் ஏந்தி நின்ற பதாகையில் “I’m not black but I see U. I’m not black but I hear. I’m not black but I will Fight 4 u.” என்று எழுதப்பட்டுள்ளது. தான் கறுப்பினத்தவனில்லை என்றாலும் அவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையைப் பார்த்தும், அவர்களில் துயர ஓலங்களைக் கேட்டும், அவர்களுக்காகப் போராடத் துடிக்கும் அந்த மனிதாபிமானம்தான் ஒட்டுமொத்த சமூக ஊடகங்களையும் இந்தப் புகைப்படம் நோக்கி ஈர்த்திருக்கலாம்.

இதனிடையில் கெய்டன் அமோ, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த 2006-ல் பிறந்தநாள் நிகழ்வொன்றில் எடுக்கப்பட்ட இந்த மூன்று போராளிகளின் மழலை முகங்களும் ஒரு மில்லியனுக்கும் மேலான லைக்குகளைக் குவித்துள்ளது. கெய்டன் அமோவோ, “சீனின் பெற்றோர்கள் தன்னை அவர்களின் பிள்ளைகள் போன்று கவனித்தார்கள். பள்ளியில் கால்பந்து விளையாடும்போது நான் நிறவெறியை எதிர்கொண்டு இருக்கிறேன். ஆனால், அப்போதே சீன் எனது பக்கம்தான் இருந்தான். இப்போதும்” என்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.