தஞ்சாவூரில் ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக வந்த ஆட்டோ ஓட்டுநர்களை போலீஸார் தடுத்ததால் இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. `சோத்துக்கு வழி செய்யுங்க என மனு கொடுக்க வந்த எங்களை மறைத்தது மனிதாபிமானமற்ற செயல்’ என ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

ஆட்டோ டிரைவர்கள்

கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பல்வேறு தரப்பினரும் வேலையிழந்து பெரும் பாதிப்புகுள்ளாகியிருப்பதுடன்,வருமானமின்றியும் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்தி வருகிறது. கிட்டத்தட்ட பல மாவட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்ட நிலையில் பஸ், ஆட்டோ போக்குவரத்துக்கு மட்டும் அனுமதிக்கவில்லை.

இந்தநிலையில், தஞ்சாவூரில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும், ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு ஆட்டோவை இயக்குவதற்கு அனுமதி வழங்கி தங்களைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் முன் திரண்டனர்.

போலீஸார்

ஆனால், அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீஸார் அவர்களை மனு அளிக்க விடாமல் தடுத்தனர். அத்துடன் கலெக்டர் அலுவலக மெயின் நுழைவு வாயிலுக்கு அருகில் கூட அனுமதிக்கவில்லை. இதையடுத்து போலீஸாருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்ததுடன் தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாகப் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர், ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரையும் கைது செய்த போலீஸார் தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் சிலரிடம் பேசினோம். “தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 20,000 ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ள நிலையில் அனைவருமே கொரோனா ஊரடங்கால் ஆட்டோவை இயக்கி 50 நாள்களுக்கு மேல் ஆகிறது. தினமும் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே நாங்க எங்க குடும்பத்தை நடத்தி வந்தோம்.

போலீஸ் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள்

இது பேரிடர் என்பதை உணர்ந்து இதுவரை நாங்களும் ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம். தற்போது அரசு ஊரடங்கைத் தளர்த்தி வரும் நிலையில் ஆட்டோ ஓட்டுவதற்கும் அனுமதி கொடுக்க வேண்டும் என கலெக்டர் கோவிந்தராவிடம் மனு கொடுக்க வந்தோம். ஆனால், வல்லம் டி.எஸ்.பி சீதாராமன் தலைமையிலான போலீஸார் எங்களைத் தடுத்தனர். `சார்,நாங்க கேட் வரைக்கும் சென்று எங்கள் நிலையைக் கூறி மனு கொடுத்து விட்டுத் திரும்பி விடுகிறோம்’ என்றோம்.

ஆனால், கேட் வரைக்கும் கூட எங்களை அனுமதிக்கவில்லை `சோத்துக்கு வழி செய்யுங்கள்’ என்று கூற வந்த எங்களை தடுப்பது எந்த விதத்தில் நியாயம்? இது நாள் வரை எப்படியோ நாள்களை நகர்த்தி விட்டோம். இனி ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வீட்டில் அடுப்பு எரிவதற்கு வாய்ப்பில்லை. ஓடாமல் சும்மாவே கிடப்பதால் ஆட்டோக்களும் பழுது ஏற்படுகிற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆட்டோ டிரைவர்கள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எங்களையும் அக்கறையுடன் கவனத்தில் கொண்டு உரிய பாதுகாப்புடன் ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நாங்கள் பிழைக்க முடியும். எங்கள் வாழ்கை ஓடும்’’ என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.