இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 1,06,750 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கையும் மூன்றாயிரத்தைக் கடந்துள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நான்காம் கட்டமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்த காலத்திலேயே வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகளும் செய்யப்பட்டுள்ளதால் வைரஸ் பரவல் குறித்த அச்சம் அதிகமாகியுள்ளது. இந்தநிலையில் நேபாளப் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி, `சீனாவையும் இத்தாலியையும் விட இந்தியாவில் பரவும் வைரஸ் மிகவும் ஆபத்தானது’ எனக் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா

நேபாளத்தின் புதிய தேசிய வரைபடத்தை வெளியிட்டு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய கே.பி.ஷர்மா ஒலி, “இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நேபாளத்துக்குள் வருபவர்களால்தான் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவிலிருந்து முறையான பரிசோதனைகளைச் செய்யாமல் மக்களை அழைத்துவரும் சில கட்சித் தலைவர்கள் மற்றும் உள்ளுர்ப் பிரதிநிதிகள்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். வெளியிலிருந்து மக்கள் வந்துகொண்டே இருப்பதால் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது. சீனா மற்றும் இத்தாலியில் உள்ள வைரஸைவிட இந்திய வைரஸ் மிகவும் ஆபத்தாக உள்ளது. அதிகமான மக்கள் அங்கு இந்தத் தொற்றுநோய்க்கு ஆளாகியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

நேபாளத்தில் இதுவரை 400-க்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர் என்றும் இரண்டு பேர் பலியாகியுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read: கட்டமைப்புத் திட்டங்களில் இணைந்து செயல்பட இந்தியா-நேபாளம் முடிவு!

நேபாளப் பிரதமரின் இந்தப் பேச்சு இந்திய அதிகாரிகளை அதிருப்தியடையச் செய்திருப்பதாகத் தெரிகிறது. அதே உரையில்தான் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி, `என்ன விலை கொடுத்தாவது இந்திய நிலப்பரப்பின் ஒருபகுதியாக இருக்கும் கலாபானி – லிம்பியாதூரா-லிபுலேக் பகுதிகளை நேபாளுக்குக் கொண்டு வருவோம்’ என்றும் பேசியிருந்தார். அண்மையில், நேபாள அமைச்சரவை இந்தப் பகுதிகளை உள்ளடக்கிய புதிய அரசியல் வரைபடத்துக்கு ஒப்புதலும் அளித்தது. இந்தியாவும் நேபாளமும் 1,800 கிமீ எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளன. 1818-ம் ஆண்டு பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சியாளர்களுடன் போடப்பட்ட சுகாலி என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் லிபுலேக் பகுதி தங்களுடையது என நேபாளம் உரிமை கோரி வருகிறது.

இந்தியா-நேபாளம்

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் 1962-ம் ஆண்டு நடந்த போருக்குப் பிறகு இந்தியத் துருப்புகள் நிறுத்தப்பட்டுள்ள லிம்பியாதூரா மற்றும் கலாபானி பகுதிகளை நேபாளம் உரிமை கோரி வருகிறது. உத்தராகண்டில் உள்ள லிபுலேக் பாஸை கைலாஷ் மான்சரோவர் வழிதடத்துடன் இணைக்கும் சாலையை, இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த மே மாதம் 8-ம் தேதி திறந்துவைத்தார். நேபாள அரசு இதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. இதற்கு வெளியுறவுத்துறை, “உத்தரகாண்ட் மாநிலத்தின் பிதோரகர் பகுதி வழியாகச் செல்லும் சாலை முழுமையாக இந்தியாவின் எல்லைக்குள் உள்ளது” என்று கூறியது.

Also Read: கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நேபாளம் சென்ற மேலும் 96 இந்தியர்கள் மீட்பு

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.