26/04/1970 ஆனந்த விகடன் இதழில் `நான் ஏன் பிறந்தேன்?’ தொடரில் எம்.ஜி.ஆர் எழுதியது…

என் தாயாருக்கு ஓர் ஆசை இருந்தது. தான் சாகும்போது தன் சொந்த வீட்டில் சாகவேண்டும் என்ற ஆசை! அப்போது, என் அன்னை மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த நேரம். படுத்த படுக்கையில் இருந்தார். அவருடைய ஆசையை நிறைவேற்றுவது எப்படி என்ற கவலை, தீர்வே காண முடியாத பிரச்னையாக எங்கள் முன் நின்றது.

எங்களால் யாதொரு முடிவும் காண இயலவில்லை. ஆனால், அன்னையின் ஆசையை ஈடேற்ற வேண்டும் என்ற ஆர்வமும் மனத்துடிப்பும் பொங்கு கடலாக உள்ளத்தில் கிளர்ந்தெழுந்த வண்ணம் இருந்தது.

சொந்த வீடு வாங்கும் பிரச்னைக்கு முன்னதாக, இருக்கும் வீட்டிலிருந்து உடனே மாறவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது, நாங்கள் அடையாறில் ஒரு வீட்டில் குடியிருந்தோம். தாயின் உடல்நிலை காரணமாக, நகரத்துக்குள் இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படவே, அடையாறிலிருந்து லாயிட்ஸ் வீதிக்கு இருப்பிடத்தை மாற்றிக்கொண்டோம்.

மாதா மாதம் வாடகை தருவதாக நாங்கள் ஒப்புக்கொண்ட தொகை 250 ரூபாய். இவ்வளவு தொகை கொடுக்க எப்படி ஒப்புக்கொண்டோம் என்பது வேடிக்கைதான். ஏனென்றால், மாதம் நூறு ரூபாய் கூட நிரந்தர வருவாய் இல்லை.

தாயார் படுத்த படுக்கையாக இருந்தார். நடக்கவோ சரியாகப் பேசவோ இயலாது. என்றும், எந்த நேரமும் ஒரே ஒரு பிரச்னை மட்டும் அவர் மனத்தில் அலைபாய்ந்துகொண்டே இருந்தது.

எம்.ஜி.ஆர் எழுதிய `நான் ஏன் பிறந்தேன்?’

ஒரு சிறு குடிலாவது சொந்தமாக வாங்க வேண்டுமே என்ற பிரச்னைதான் அது. அன்னையின் நெஞ்சிலிருந்து வெளிவந்த இறுதி வேட்கையை நிறைவேற்ற உணர்ச்சி வேகம் எங்களை உந்தித் தள்ளியது. ஆனால், அப்போதைய நிலைமை என்ன? பணம் திரட்ட வாய்ப்புதான் என்ன? பதில் கூற முடியாது தவித்த பரிதாப நிலை எங்களைப் பார்த்து எள்ளி நகையாடியது.

வாடகையைத் தவறாது செலுத்திவிட்டாலே போதும் என்ற நிலையிலிருந்த எங்களுக்கு, `சொந்தவீடு’ என்பது எத்தனை ஏணிகள் வைத்தாலும் எட்ட முடியாத ஓர் ஆகாசக் கோட்டையாகவே இருந்தது. சிறிதளவுகூட நம்பிக்கை ஏற்படவில்லை.

வருமானம் குறைவு என்பது மட்டுமில்லை. அந்த வருமானத்துக்கும் உத்தரவாதம் கிடையாது. ஏதோ ஒரு தொகை வரும். எப்போது வரும் என்று தெரியாது. கிடைத்துக்கொண்டிருந்த வருமானம் திடீரென்று நின்றுவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இப்படிப்பட்ட நிலையில் ஒருநாள், வீட்டு உரிமையாளர் எங்களை அழைத்தார்.

“ரெண்டு வருஷமா வாடகை கொடுக்கறீங்க. இன்னும் ஏழெட்டு வருஷம் கழிச்சு கணக்கு பண்ணினா மொத்த கிரயத்தையே வாடகையா கொடுத்திருப்பீங்க. அதைவிட இப்பவே விலைக்கு வாங்கிட்டா வாடகை அவசியமிருக்காது. நல்லவங்களுக்கு வீட்டை கொடுத்தோம்ங்கிற மனநிம்மதி எனக்கும் ஏற்படும்” என்றார்.

மௌனத்தைத் தவிர வேறு எந்த முடிவையும் எங்களால் அறிவிக்க முடியவில்லை. “எப்படியாவது வாங்கிடுங்க. வேற யாருக்கும் கொடுக்கப்போறதில்லே. எத்தனை வருஷமானாலும் உங்களுக்குத்தான் அந்த வீடு” என்றார் ஏ.வி.ராமன்.

எங்களால் காலம் கடத்தப்பட்ட நிலையிலும், தமது வாக்கு மாறாமல் எங்களுக்கு அந்த வீட்டை சொந்தமாக்கினார்.

எம்.ஜி.ஆரின் `தாய் வீடு’

`சொந்த வீட்டில் சாகணும்’ என்று எங்கள் அன்னையார் ஆசைப்பட்டார்கள். அவர்கள் இறந்தபோது அந்த வீடு சொந்த வீடு இல்லை.

ஆனாலும் அவர்கள் இறந்த அந்த வீடு, அவர்களின் சொந்தவீடாக அதாவது எங்களின் `தாய் வீடாக’ ஆகிவிட்டது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.