தமிழகத்தில் நிலாக்காலங்கள் எல்லாம் விழாக்காலங்களே. ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியையொட்டித் திருவிழாக்கள் கொண்டாடுவது தமிழர் மரபு. அவ்வாறு அவர்கள் கொண்டாடிய பௌர்ணமித் திருவிழாக்களில் முக்கியமானது சித்ரா பௌர்ணமி.

கோலாகலமாகக் கொண்டாடப்படும் இந்தத் திருவிழா, நதிக்கரை நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கலாம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். பல்வேறுபட்ட ஆன்மிக வழிபாடுகளுக்கும் உகந்த இந்தச் சித்திரை முழுநிலவு நாளின் சிறப்புகள் குறித்துப் பேராசிரியர் சண்முகத் திருக்குமரன் அவர்களிடம் கேட்டோம்.

ஆன்மிகச் சொற்பொழிவாளர் சண்முகத் திருக்குமரன்

“தற்போது வரையிலும் ஆற்றங்கரைப் பகுதியில் மக்கள் கூடுகிற பெருவிழாவாக சித்திரைப் பௌர்ணமி திகழ்கிறது. வைகைப்படுகை முழுவதிலும் இருக்கிற பல்வேறு அழகர் பெருமாள் ஆற்றில் இறங்கி இந்த நாளில் அருள்பாலிப்பார். மழைவளம், நிலச்செழிப்பு ஆகியவற்றைத் தருகிற தெய்வம், அழகர். வைணவர்கள் தங்கள் குலதெய்வ வழிபாடுகளை இந்தச் சித்ரா பௌர்ணமியில்தான் விசேஷமாக மேற்கொள்வார்கள். இப்படிப் பெருமாளோடு தொடர்புடையதாக சித்ரா பௌர்ணமி சிறப்புகள் அநேகம்.

எமலோகத்தில் எமதர்மராஜனின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொள்கிற சித்ரகுப்தன் அவதரித்ததும் சித்ரா பௌர்ணமியில்தான். எனவே, ஒவ்வோர் ஆண்டும் இந்த நாளில் சித்ரகுப்தனை வழிபடுவது சிறப்பாக நடைபெறும். மற்ற நாளில் இவரை வழிபடுவதைக் காட்டிலும் அவரது அவதார தினமான சித்ரா பௌர்ணமியில் அவரை வழிபட்டால் நம் பாவ புண்ணியங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்வார் என்பது ஐதிகம். தமிழகத்தில் கடம்பூர், தேனி கோடாங்கிபட்டி உள்ளிட்ட 14 ஊர்களில் சித்ரகுப்தனுக்கு ஆலய வழிபாடு நடைபெறுகிறது.

சிவலிங்கம்

Also Read: “திருவிழாவுல `வராரு அழகர்’ பாட்டுப் போட்டுட்டா… ஆத்தி ஆட்டம் அடங்காதுய்யா!” – மதுரக்காரன் மனசு

கோடாங்கிபட்டியில் சித்திர புத்திர நாயனாராய் அருள்பாலிக்கிறார். இத்தனை திருத்தலங்களிலும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சித்ரகுப்தர் கோயில்தான் மிகவும் சிறப்பானதாகத் திகழ்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சித்ரகுப்தனை சித்ராபௌர்ணமியன்று வீட்டில் பூஜை பொருள்களை வைத்து மனதார நினைத்து வழிபட்டால் நமது பாவக் கணக்குகள் சரிவரத் தீர்க்கப்படும் என்பது ஐதிகம். சித்ரா அன்னங்கள் படைத்து வழிபடுதல் இந்த நாளின் சிறப்பு. சித்ரகுப்தனுக்கு சித்ரா அன்னங்கள் படைத்து வீட்டில் உள்ளோர் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து உண்ணுதல் வேண்டும்.

சித்திரை மாதம் சித்தர்கள் மாதம் என்பார்கள். சித்தர்களின் ஜீவசமாதிகளை இந்த மாதத்தில் வழிபட்டால் அவர்களின் அருள் மற்றைய நாள்களைவிடவும் அதிகமாகவே கிடைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, சித்ரா பௌர்ணமியில் சித்தர்கள் வழிபாடு செய்வார்கள். நாகையில் கோரக்கர் வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

9 கோடி சித்தர்களோடு ஆழ்ந்து உறங்கும் கோரக்கர்! – சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்- அமானுஷ்யத் தொடர்-5

Also Read: தலைவிதியை மாற்றுவார், எம பயம் போக்குவார் காலபைரவர்! #Kalabairavashtami

திருவண்ணாமலை சித்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என நம்பப்படுவதால் மாதப் பௌர்ணமியையும் கடந்து சித்திரை மாதப் பௌர்ணமியில் லட்சம்பேர் கிரிவலம் செய்வதற்கு வருவார்கள். சித்தர்களை மனதில் நினைத்து வழிபட்டு வலம்வந்தால் சகல நன்மைகளும் வாழ்வில் ஏற்படும் என்பது பக்தர்களின் திண்ணமான நம்பிக்கை. சித்ரா பௌர்ணமி சிறப்புகள் சிலப்பதிகாரத்திலும் பரிபாடலிலும்கூடக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன” என்றார்.

சித்ரா பௌர்ணமியன்று பெருமாளை வீட்டிலேயே வழிபடுதல் குறித்து அழகர்கோயில் அம்பி பட்டரிடம் கேட்டோம். “தம் பாசுரத்தில் ‘வாயினால் பாடி மனதினால் சிந்தித்து…’ என ஆண்டாள் பாடுவாள். அதேதான் பெருமாள் வழிபாட்டுக்கும். மற்ற நாள்களில் பெருமாள் தலங்களுக்குச் சென்று வழிபட்டு வரலாம். ஆனால், தற்போது அசாதாரண சூழல் நிலவி வருவதால் ஆலயங்களுக்குச் செல்வது இயலாத நிலையில் சித்ரா பௌர்ணமிக்கு வீட்டிலேயே வழிபாடு செய்யலாம்.

அழகர்கோயில் அம்பி பட்டர்

பூஜையறையில் சுவாமி படங்களுக்குப் பூஜைகள் செய்து வணங்கலாம். அன்றைய தினம் முழுவதிலும் பெருமாளின் திவ்ய நாமங்களை நாமாவளி செய்துகொண்டிருந்தாலே போதுமானது. சிறப்பாக ஒன்றும் தேவையில்லை. பெருமாளை மனதினால் சிந்திப்பதே அவனை நேரிடையாகச் சென்றடையும். நல்லது அல்லாதவற்றை சிந்திக்கவோ செய்யவோ பேசவோ கூடாது. அப்பழுக்கற்ற தூய உள்ளங்களில் பெருமாள் நிச்சயம் உறைவார்.

மதுரையில் சித்திரைத்திருவிழா இந்தாண்டு ரத்தாகியிருந்தாலும் சுந்தரராஜபெருமாள் கள்ளழகராக மதுரைக்குத்தான் வரவில்லை. ஆனால், அத்தனை பக்தர்கள் உள்ளங்களிலும் வந்து குடிகொண்டிருக்கிறானே. அவனையே நாளும் சிந்தித்திருப்போம். நமது வேண்டுதலுக்குச் செவி சாய்த்து பெருமாள் நமக்காக அடுத்தமுறை வருவார். வழக்கம்போல நமக்கு அருளையும் ஆனந்தத்தையும் தருவார்.

அம்பி பட்டர், கருட வாகனத்தில் கள்ளழகர்

Also Read: `ஏழு நாள் அழகர் உற்சவம் ஒரே நாளில்… எளிமையான மீனாட்சி கல்யாணம்!’ -சம்பிரதாய சித்திரைத் திருவிழா!

அருள்மிகு சுந்தரராஜ பெருமாளின் திருநாமங்களை மனதில் நினைத்திருப்போம். அடுத்த சித்ரா பௌர்ணமிக்குப் பெருமாள் நிச்சயம் வந்து அருள்பாலிப்பார். அவரை எதிர்கொண்டு வரவேற்க அனைவரும் காத்திருப்போம்” என்றார்.

சித்ரா பௌர்ணமியன்று வீட்டுப் பூஜையறைகளில் சித்ரா அன்னங்கள் படைத்து உலகாளும் பெருமாளையும், பாவக் கணக்குத் தீர்க்கும் சித்ரகுப்தரையும் சித்தர்களையும் மனதார வணங்கி அருள்பெறுவோம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.