இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மூன்றாம்கட்ட ஊரடங்கின் முதல் நாளிலேயே பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு காரணங்களுக்காகத் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை

இந்தியாவில், கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அனைத்து அரசு அதிகாரிகளும் கொரோனா தடுப்புப் பணியில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள். சவாலான பல பணிகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டுவருகிறது. சென்னையில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். மேலும், வெளிமாநிலங்களில் இருக்கும் தமிழக மக்களை மீட்கும் பணியிலும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு விஷயத்தில் அனைத்து அதிகாரிகளின் பங்களிப்பும் மிகப் பெரியது. ஊரடங்கால் நாடே வீட்டுக்குள் இருக்க, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் தொடர்ந்து இயங்கிவந்தனர். இந்த நிலையில், ஹரியானா மாநில பெண் ஐஏஎஸ் அதிகாரியான ராணி நாகர், தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

ராஜினாமா கடிதம்

2014 – பேட்ஜை சேர்ந்த ராணி, தற்போது ஹரியானா மாநிலம் காப்பகத்துறை இயக்குநராகவும், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் கூடுதல் இயக்குநராகவும் உள்ளார். நேற்று, அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநில தலைமைச் செயலருக்கு அனுப்பினார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தின் நகலை நாட்டின் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், ஹரியானா ஆளுநருக்கும், முதல்வருக்கும் இ-மெயில் மூலம் அனுப்பி வைத்தார்.

தனது ராஜினாமா கடிதத்தை அவர் தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டார். அதில், `அரசாங்கப் பணியில் தனிப்பட்ட பாதுகாப்பு காரணமாகவே இந்த ராஜினாமா முடிவு’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். ராஜினாமா செய்த அடுத்த சில மணி நேரத்திலே அவர் சண்டிகரில் இருந்து கார் மூலம் தனது சொந்த ஊரான காஸியாபாத் நகருக்கு தனது சகோதரியுடன் பயணமானார். இது தொடர்பான தகவல்களை அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தான் முறையாக பாஸ் பெற்று பயணிப்பதாகவும் அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருக்கிறார்.

ராணி நாகர் ஐஏஎஸ், 2018 -ம் ஆண்டில் கூடுதல் தலைமைச் செயலாளர் நிலை அதிகாரத்தில் இருக்கும் அதிகாரி ஒருவரால் தான் துன்புறுத்தப்படுவதாக அளித்த புகாரால் பரபரப்பாக பேசப்பட்டார். அப்போது, மாநில அரசு இது தொடர்பாக விசாரணை நடத்தியது. எனினும் அதில் குற்றசாட்டுகள் நிரூபிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ராணி நாகர்

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பாதுகாப்பை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்த தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க கூட்டணிமீது கடும் விமர்சனங்களை காங்கிரஸ் வைத்திருக்கிறது.

Also Read: `ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் தலைமையில் சிறப்புக் குழு’ – சென்னையில் வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, “பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு இல்லை என ராஜினாமா செய்திருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அரசுப் பணியில் இருக்கும் அதிகாரி ஒருவரே பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, தனது பதவியை ராஜினாமா செய்கிறார் என்றால், மாநிலத்தில் யார்தான் பாதுகாப்பாக இருக்கிறார்கள்? இது உங்கள் அரசின் மீதான நம்பிக்கையின்மையைக் காட்டவில்லையா… உங்கள் தோல்விக்கு இந்த ஆதாரம் போதுமானாதாக இல்லையா?” என்று கடுமையாக விமர்சித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.