காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், ஹந்த்வாரா பகுதியில் ஒரு வீட்டுக்குள் நுழைந்த தீவிரவாதிகள், அந்த வீட்டில் இருந்தவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர். இந்தத் தகவல் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைக்கவே, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் காஷ்மீர் போலீஸ் ஆகிய பாதுக்காப்புக் குழுவினர், கூட்டு முயற்சியில் இறங்கினர்.

Handwara

உடனடியாக, குறிப்பிட்ட அந்த வீடு சுற்றிவளைக்கப்பட்டதுடன் முழுமையாகக் கண்காணிக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த மற்ற மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பிணைக் கைதிகளாக இருக்கும் மக்களை மீட்க ராணுவம் மற்றும் போலீஸ் அடங்கிய குழு வீட்டுக்குள் நுழைந்தது. அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் கடும் சண்டை நடந்தது.

பிணைக் கைதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். எனினும் கடுமையான இந்தத் தாக்குதலில், 2 ராணுவ அதிகாரிகள், 2 ராணுவ வீரர்கள், ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர். பயங்கரவாதிகள் தரப்பில் 2 பேர் உயிரிழந்தனர். கர்னல் அந்தஸ்து ராணுவ அதிகாரி அஷுடோஷ், மேஜர் அந்தஸ்து அதிகாரி அனுஜ் சூத், ராணுவ வீரர்கள் ராஜேஷ், தினேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ஷகீல் காஜி ஆகியோர் பலியானவர்கள் என ராணுவம் தெரிவித்தது. “நாட்டின் மக்களைப் பாதுகாக்க அயராது உழைத்த வீரர்களின் குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். பாதுகாப்புப் படை வீரர்களின் வீரமரணம், நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்னல் அஷுடோஷ் ஷர்மா

ஹந்த்வாராவில் உயிர்த் தியாகம் செய்த கர்னல் அஷுடோஷ் ஷர்மாவின் மனைவி பல்லவி அஷுடோஷ், தனது கணவர் உயிரிழந்துவிட்ட காரணத்தால் நினைவுகூரப்படுவதைக் காட்டிலும் அவரின் தைரியத்துக்காக நினைவு கூரப்படுவதை தான் விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் துணிச்சலான செயலுக்கு இரண்டு முறை பதக்கங்கள் பெற்றிருக்கிறார், கர்னல் அஷுடோஷ் ஷர்மா.

பல்லவி, “அவருக்கு அவரது சீருடை மீது அதீத காதல் இருந்தது. அவரது டீம் தான் முதலில் எல்லாமே. அதற்குதான் எப்போதும் முன்னுரிமை வழங்குவார். எனக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பை தாங்கவும் முடியாது… ஈடுகட்டவும் முடியது. என்றாலும் தனது டீமுக்காக அவர் செய்த செயல்களை நினைத்தும் நாட்டின் குடிமக்களுக்காக அவரது பணியை நினைத்தும் நான் எப்போதும் பெருமைகொள்வேன்” என்றார்.

பல்லவி

இந்தியா டுடே ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், பல்லவி தனது கணவர் குறித்து மேலும் பேசுகையில், “அவர் என்னிடத்தில் எப்போதும் `நான் தீவிரவாதிகளைக் கொன்றுவிட்டுதான் வீட்டுக்கு வருவேன்’ எனச் சொல்வதுண்டு. ஆம், இப்போதும் அவர் தீவிரவாதிகளைக் கொன்றுவிட்டுதான் வீடு திரும்புகிறார், மூவர்ணக்கொடியால் போர்த்தப்பட்டு திரும்புகிறார்” என்றார்.

தொடர்ந்து பேசிய பல்லவி, “தன் உயிரைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் அவர் எடுக்கும் முடிவுகளுக்குப் பின்னால், அவர் இல்லாமலும் நான் குடும்பத்தை திறம்பட வழிநடத்துவேன் என நம்பிக்கை அவருக்கு இருக்கும். அவர் என்னிடம், `நான் 1,500 பேரின் நலனை கவனிக்க வேண்டும். அது எனது கடமை. நமது குடும்பத்தை நீ சிறப்பாக கவனித்துக்கொள்வாய் என நம்புகிறேன்’ எனச் சொல்லியிருக்கிறார்.

எங்கள் மகள், தனது தந்தையை ஒரு கொள்கையுள்ள மனிதராக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் தனது வேலையையும் நாட்டையும் நேசித்த ஒரு மனிதராக நினைவில் கொள்ளப்பட வேண்டும். அவர் முகத்தில் எப்போதும் புன்னகை இருக்கும். அவர் என்னை ஒரு செலிபிரிட்டி போல் நடத்துவார். அவருடனான வாழ்வில் எனக்கு எந்த வருத்தமும் இருந்ததில்லை” என்றார்.

Handwara attack

இந்தத் தாக்குதலில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட லஷ்கர்- இ – தொய்பா இயக்கத்தின் கமாண்டர் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இந்த கமாண்டர் நடக்கு, காஷ்மீர் எல்லைப் பகுதியில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார் எனக் கூறப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.