கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவிவரும் சூழலில், கொரோனா வைரஸுக்கு உட்பட்டிருக்கிறோமா என நம்மை நாமே சுய தணிக்கை செய்துக் கொள்ளும் முறை, இந்தியாவின் கொரோனா தொடர்பான மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் உள்பட பல வசதிகள் அடங்கிய ஆரோக்கிய சேது எனும் செயலியை மத்திய அரசு, கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், இந்த செயலி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சமீபத்திய ட்விட்டர் பதிவு அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது.

ட்விட்டர்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவில், அரோக்கிய சேது செயலி கொரோனாவுக்கு எதிராக அதிநவீன கண்காணிப்பு அமைப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் செயலி அறிமுகபப்டுத்தப்பட்ட போது, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது போன்களில் இதை கட்டாயம் தரவிறக்கம் செய்திருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது தொலைபேசியில் இந்த செயலியை தரவிறக்கம் செய்யாத பட்சத்தில், அந்த நிறுவனத்தின் தலைவரே அதற்கு பொறுப்பாவார் என மத்திய அரசு தெரிவித்திருந்ததை குறிப்பிட்டுள்ளார்

ஆரோக்கிய சேது செயலியின் தகவல் பராமரிப்பு தனியாருக்கு அளிக்கப்பட்டிருப்பதோடு, மத்திய அரசின் மேற்பார்வையின்றி இருப்பதால், தகவல் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது. தொழில்நுட்பம் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் என்றாலும் கூட, குடிமக்களின் உரிமையின்றி அவர்களை கண்காணிப்பது மூலமாக அவர்களை அச்சுறுத்தக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

ஆரோக்கிய சேது

மேலும், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், ஆரோக்கிய சேது செயலி பயன்படுத்துவதற்கு தேவையான தகவல்களை விட, அதிகமான தகவல்களை பயனாளர்களிடம் இருந்து பெறுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஜிபிஎஸ் மூலமாக இருப்பிடத் தகவல்களை பயன்படுத்துவது கவலைக்குரியதாக இருப்பதாக தன்னிடம் நிபுணர் குழு கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், நிதி ஆயோக் ஜிபிஎஸ் மூலம் குடிமக்கள் கண்காணிக்கப்படுவது, கொரோனா வைரஸின் புதிய ஹாட்ஸ்பாட்டை கண்டறிய பயன்படுவதாக கூறுவதாகவும், ஆனால், தனிப்பட்ட இருப்பிடத் தகவல்களாகப் பெறாமல் மொத்தமான தரவுகளாகப் பெறுவதாக கூறுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Also Read: `டெல்லியைத் திறக்கும் நேரம் வந்துவிட்டது; கொரோனாவுடன் வாழப் பழகிவிட்டோம்!’ – அரவிந்த் கெஜ்ரிவால்

இதனிடையே, ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு ட்விட்டரில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார். அதில், `ராகுல்காந்தி தினமும் ஒரு பொய்யை கூறிவருவதாகவும், ஆரோக்கிய சேது செயலி கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த துணை’ என கூறியுள்ளார். இந்த செயலி, வலுவான தகவல் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டுள்ளது. குடிமக்களின் அனுமதியின்றி அவர்களை ஜிபிஎஸ் மூலம் அரசு கண்காணிக்காது. வாழ்நாள் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபடுவோருக்கு, தொழில்நுட்பத்தை எவ்வாறு நன்மைக்காக பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், உலக அளவில் பாராட்டுகளைப் பெற்று வரும் செயலியாக ஆரோக்கிய சேது இருக்கிறது. அதில், தனியாருக்கு எந்தவிதத் தகவலும் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்தியாவைப் புரிந்துகொள்ளாத தனது நண்பர்களுடன் பகிரும் ட்வீட்களை நிறுத்த ராகுல் காந்திக்கு போதுமான நேரம் இருப்பதாகவும், ரவிசங்கர் பிரசாத் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

மேலும், பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ராகுல் காந்தி ஆரோக்கிய சேது செயலி குறித்து ஒன்றும் அறியாதவர். தவறான தகவல்கள் மற்றும் பொய்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதன் மூலம் மிகவும் பொறுப்பற்றவராக இருக்கிறார். ஆரோக்கிய சேதுவில் மத்திய அரசு பல இடங்களில் அறிவியல் ரீதியாக தகவல் பாதுகாப்பு குறித்த அச்சங்களை நீக்கியுள்ளது. இந்த செயலி கோவிட்-19 கொரோனா வைரஸுக்கு எதிராக ஒவ்வொருவரும் தனிப்பட்ட மெய்காப்பாளராக உள்ளது. இதை ராகுல் காந்தி புரிந்துக் கொள்ள மறுக்கிறார். தொற்றுநோய் ஏற்பட்டுள்ள காலத்தில், குழப்பத்தை பரப்புவதும், கொரோனாவுக்கு எதிரான தேசத்தின் போராட்டத்தை தடுத்து நிறுத்துவதுமே காங்கிரஸின் ஒரே நோக்கமாக இருக்கிறது. தொற்றுநோயை அரசியல் வாய்ப்பாக பயன்படுத்துவதை காங்கிரஸ் தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.