கொரோனா என்கிற உயிர்க் கொல்லி நோயிலிருந்து விடுபட… உயிர் காக்கும் ஊரடங்கில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் சூழலில், கொரோனாவைக் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட் விலை விவகாரம் நீதிமன்றத்தில் வந்து நிற்கிறது. ”24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளும் திருப்பி அனுப்பப்படுவதால் எந்தவொரு செலவும் கிடையாது” எனச் சொல்லி விட்டார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

ரேபிட் கிட் மர்மங்கள்

”நெருக்கடியான நேரத்தில் அரசியல் செய்யலாமா?” என எதிர்க்கட்சிகளைப் பார்த்து கேள்வி எழுப்பும் முதல்வர் எடப்பாடியை நோக்கி “நெருக்கடியான நேரத்தில் முறைகேடுகள் செய்யலாமா?” என எதிர்க் கணைகள் வீசப்படுகின்றன.

கொரோனாவால் ஏற்படும் பொருளாதார இழப்பைச் சமாளிக்க அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கியிருக்கிறது அரசு. இதுதவிர கட்டடத் தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், தீப்பெட்டி தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிவாரணங்களுக்காக 3,280 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நிவாரணப் பொருள்களில் ஜெயலலிதா ஸ்டிக்கர்…

பேரிடர் காலங்களிலும் சுரண்டும் ஆட்சியாளர்கள் உலகம் முழுவதுமே பரவிக்கிடக்கிறார்கள். தமிழகம் மட்டும் விதிவிலக்கல்ல. முந்தைய ஜெயலலிதா ஆட்சியின் இறுதிக் காலத்தில் சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. அந்தப் பேரிடர் காலத்திலும் தனியார் வழங்கிய நிவாரணப் பொருள்களில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டியவர்கள் அ.தி.மு.க-வினர். தன்னார்வலர்கள் வழங்கிய உணவுப் பொருள்களை எல்லாம் எங்களிடம் தாருங்கள் என அடித்துப் பிடுங்கிய காட்சிகள் எல்லாம் அன்றைக்குச் சந்தி சிரித்தன.

செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்துவிட்டதால் 2015-ம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட அந்தப் பேரிடரில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து 289 பேர் பலியானார்கள். 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின.

சென்னை வெள்ளம்

Also Read: #COVID19: ஊர் அடங்கட்டும்; உலகம் இயங்கட்டும்… தப்பிப் பிழைக்கும் தந்திரம் இதுவே!

பேரிடர் காலத்திலும்கூட ஊழல் உறைவிடம் கொள்கிறது. சென்னை வெள்ளத்தில் அத்தனை விஷயங்களைத் தோலுரித்துக் காட்டியது இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை. ‘சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெள்ள மேலாண்மை மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்ளுதல்’ என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டது இந்தியத் தணிக்கைத் துறை.

தணிக்கை அறிக்கை

வெள்ளம் சூழ்ந்த வீடுகளின் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையில் ஜெயலலிதா அரசு அன்றைக்கு நிவாரணம் வழங்கியது. சென்னையில் 13,15,000, திருவள்ளூரில் 5,97,826 காஞ்சிபுரத்தில் 5,99,843 என மொத்தம் 25,12,669 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது எனக் கணக்கு சொன்னார் வருவாய் நிர்வாக ஆணையர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் கணக்கிடும் பணியை வெளி மாவட்டங்களைச் சேர்ந்த அரசுப் பணியாளர்கள் மேற்கொண்டார்கள். அவர்கள் எடுத்த தவறான கணக்கெடுப்பின் காரணமாகத் தகுதியுள்ள பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் 70.41 கோடி ரூபாய் குறைவு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட வீடுகளைக் கணக்கெடுப்பதற்காக வரிசையாக எண்ணிடப்பட்ட 16.70 லட்சம் கணக்கெடுப்பு ஃபாரங்களைச் சென்னை கலெக்டர் (சுந்தரவல்லி) வழங்கியிருந்தார். 12,87,735 பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. கலெக்டர் அலுவலகம் வழங்காத படிவங்கள் மூலம் கணக்கெடுக்கப்பட்ட 662 நபர்களுக்கும் வட்டாட்சியர்கள் 33.65 லட்சம் ரூபாய் வழங்கினார்கள்.

சுந்தரவல்லி

இதில், கொடுமை என்னவென்றால் இந்த 662 நபர்களில் 146 பேர் கலெக்டர் அலுவலகம் வழங்கிய கணக்கெடுப்பு படிவங்களின் அடிப்படையிலேயும் உதவித் தொகை பெற்றவர்கள். இந்த 662 நபர்களில் 424 பேர்தான் உண்மையான தகுதியுள்ள பயனாளிகள் எனக் கண்டறியப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்தில் தென்னேரி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 155 குடும்பங்களுக்கு அரசின் நிவாரணப் பணம் வழங்கப்பட்டது. இதில் 128 குடும்பங்களின் குடும்ப விவரங்களும் மற்றும் ரேஷன் அட்டை நகல்களும் இல்லை. அது தொடர்பான படிவம் 20-ஐ அந்தக் குடும்பங்களிடமிருந்து பெறவில்லை. இந்த 128 குடும்பங்களுக்கு 5.25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதற்கான உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த இயலவில்லை என்றது தணிக்கை அறிக்கை.

சென்னை வெள்ளம்

”வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு வீட்டுக்கு வீடு கணக்கெடுப்பு தேவை என விதிமுறைகள் வகுத்து அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. அதில் சொல்லப்பட்ட விதிமுறையை மீறி இந்தத் தொகை வழங்கப்பட்டது” எனச் சொன்னது தணிக்கை அறிக்கை.

கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் நிவாரண நிதியுதவி அளிக்கப்பட வேண்டும். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் கணக்கெடுப்பு ஏதும் இல்லாமல், 8,354 நபர்களுக்கு 4.17 கோடி பண உதவியை வழங்கினார்.

கஜலட்சுமி

” ‘சிலர் தங்கள் விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்திலும் முதல்வரின் தனிப்பிரிவிலும் நேரடியாக அளித்திருக்கலாம்’ என கலெக்டர் (கஜலட்சுமி) சொன்னார். இந்தப் பதில் கற்பனையானது. பதிவேடுகள் அடிப்படையில் இல்லாதது. அதனால், அதனை ஏற்க முடியாது. இதனால் காஞ்சிபுரம் கலெக்டர் 8,354 நபர்களுக்கு 4.17 கோடி பண உதவியை வழங்கியதில் உரிய கவனத்தைச் செலுத்தத் தவறினார்” எனக் குற்றம் சாட்டியது தணிக்கை அறிக்கை.

அரசால் கணக்கெடுக்கப்பட்ட தகுதியுள்ள பயனாளிகளுக்குப் பண உதவியைச் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் மின்னணு தொகை பரிமாற்றம் மூலம் வழங்கினார்கள். இப்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்கள் பராமரித்த மின்னணு தரவினை பகுப்பாய்வு செய்யப்பட்டபோது பயனாளிகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பண உதவி அளிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

சென்னை வெள்ளம்

சென்னையில் 28,934 பயனாளிகள் பல முறை தொகையைப் பெற்றனர். அதாவது ஒரே பயனாளி 2 முதல் 8 முறை தொகையைப் பெற்றிருக்கிறார்கள். இப்படி 28,934 பயனாளிகளுக்குக் கூடுதலாக வழங்கப்பட்ட தொகை 15.4 கோடி ரூபாய் (1514.60 லட்சம்).

இதே போலக் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 38,712 பயனாளிகள் பலமுறை தொகையைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு 2 முதல் 35 முறை பணம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த 38,712 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட கூடுதல் தொகை 21.49 கோடி ரூபாய் (2149.60 லட்சம்).

பல முறை தொகை வழங்கப்பட்ட அட்டவனை

Also Read: கொரோனா நோயிலும் கொள்ளை லாபம்… ரேபிட் கிட் விலை உயர்ந்தது ஏன்!?

திருவள்ளூர் மாவட்டத்தில் 26,507 பயனாளிகள் இரண்டு முறை உதவித் தொகையைப் பெற்றிருக்கிறார்கள். இதற்காக அந்தப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட கூடுதல் தொகை 5.74 கோடி ரூபாய் (574.36 லட்சம்).

இந்த மூன்று மாவட்டங்களுக்கும் சேர்த்து 94,153 விண்ணப்பங்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் தொகை மட்டும் 42.38 கோடி ரூபாய்.

சென்னை கிண்டி வட்டத்தில் பலமுறை தொகை வழங்கியதாக மின்னணு தரவுகள் சுட்டிக்காட்டிய 1,856 விண்ணப்பங்களைக் கைமுறையாகக் கூர்ந்தாய்வு செய்தது தணிக்கை துறை. அதில் கிடைத்த முடிவுகள் இது.

கிண்டி தரவுகள்

ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில் தொகை வழங்கியது ஒரு பக்கம் என்றால் தகுதியானவர்களுக்கு நிவாரணம் போய்ச் சேராத கொடுமையும் நடந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் 3,447 முழுமையாக சேதமற்ற குடிசைகளுக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9,290 குடிசைகளுக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ‘முழுமையாக சேதமுற்றது’ எனக் கணக்கெடுக்கப்பட்ட வீடுகளுக்காக 12,737 குடும்பங்களுக்குக் குறைவாக வழங்கப்பட்ட தொகை 6.37 கோடி ரூபாய். வருவாய்த் துறை செய்த இந்த தவற்றால் 12,737 தகுதியுள்ள குடும்பங்களுக்கு 6.37 கோடி ரூபாய் மறுக்கப்பட்டது.

கொரோனா காலத்தில் நடக்கும் கோல்மால்கள் அடுத்த தணிக்கை அறிக்கையில் அம்பலத்துக்கு வரலாம். அல்லாமல் கடந்த காலத் தவறுகள் மீண்டும் ஏற்படாமல் தவிர்த்தால் மக்களுக்கு அதைவிட மகிழ்ச்சி ஏது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.