சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸானது இன்று உலகளவில் பரவி அனைத்து நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 10 லட்சம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். 56,000-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்தே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவின் மீது வைரஸ் தொடர்பான கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். இதனால், ட்ரம்பும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். அமெரிக்காவில் உள்ள மிசவுரி மாகாணம் ஒன்று சீனாவின் மீது வழக்கு தொடர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் – அமெரிக்கா

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் ட்ரம்ப் பேசுகையில், “சீனாவிலிருந்து வைரஸ் பரவியது தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். சீனாவின் செயல்களால் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை. ஆரம்பத்திலேயே இந்த வைரஸை அவர்கள் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என நம்புகிறோம். விரைவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தால், உலகம் முழுவதும் பரவி இருக்காது” என்றார். வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு இழப்பீடாக ஜெர்மனி 165 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கேட்டதாக வெளியான செய்தி குறித்து ட்ரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜெர்மனி கேட்கும் தொகையைவிட அதிகமான தொகையைக் கேட்க உள்ளோம். இறுதித் தொகை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. நிச்சயம் கணிசமான தொகையைத்தான் கேட்போம். அமெரிக்காவுக்கும் உலகிற்கும் ஏற்பட்ட சேதம் இது” என்று கூறினார்.

Also Read: `அது வெறும் காய்ச்சல் அல்ல… அமெரிக்கா மீதான அட்டாக்..!’ – ட்ரம்ப் காட்டம் #Corona

முன்னதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறைச் செயலர் மைக் பாம்பியோ, கொரோனா வைரஸ் அதிகளவில் பரவியதை பெய்ஜிங் சரியான நேரத்தில் தெரிவிக்கத் தவறியதாகவும் இந்த வைரஸால் ஏற்படும் சுவாசப் பிரச்னை எவ்வளவு ஆபத்தானது என்பதை சீனா மூடி மறைத்துவிட்டதாகவும் அமெரிக்கா உறுதியாக நம்புகிறது என்றார். மேலும், வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவேரோ, “சீனா தரம் குறைந்த சோதனைக் கருவிகளை அமெரிக்காவுக்கு அனுப்புகிறது. இதன்மூலம் சீனா லாபம் ஈட்டுகிறது” என்று குற்றம் சாட்டினார்.

கோவிட் 19 – சீனா

சீனாவின் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்த அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூவா சுனியிங், “கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்னைகளில் அரசியல் விளையாட்டை நிறுத்துங்கள். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களைக் காப்பாற்ற உங்களது சக்தியைச் சேமிப்பது நல்லது” என்று கூறினார். எனினும் அமெரிக்கா, ஜெர்மனி உட்பட பல நாடுகள் சீனாவின் மீது வைரஸ் பரவுவது தொடர்பான கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். விமர்சனம் செய்யும் நாடுகள் பலவும் சீனாவிடம் இழப்பீடு கேட்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

Also Read: `சீனாவுக்குள் விசாரணை; ட்ரம்ப் முன்னிறுத்தும் நிபுணர்கள் குழு!’ -கொரோனா விவகாரத்தில் முற்றும் மோதல்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.