சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பயணிக்கத் தொடங்கிய கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் பரவி அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கிக் தவிக்கும் உலக நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நோய்த் தாக்குதலுக்கு இதுவரை மட்டும் 650-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் 20,000-க்கும் மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கோவிட் -19 ரக நோய்க்கிருமி நம்மிடத்தே அறிமுகமாகி நான்கு மாதங்களே ஆகும் நிலையில், இந்த உயிர்க்கொல்லி நோய்க்கு இதுவரை எந்தவித மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கே வருடக்கணக்கில் ஆகும் என்று மருத்துவத்துறை வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டுவரும் நிலையில், இந்த நோய்ப் பரவலுக்கு ஒரே தீர்வாக உலக சுகாதார நிறுவனமும் மருத்துவர்களும் பரிந்துரைப்பது, ‘சமூக விலகல்’. சமூக இடைவெளியைப் பின் பற்றுவதனால் மட்டுமே நோய்ப் பரவலைத் தடுக்க முடியும் என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திவருகின்றனர்.

கொரோன

இந்தியாவில், கடந்த சில வாரங்களாக வேகம் எடுக்க ஆரம்பித்துள்ள கொரோனா வைரஸ், நோய்த் தொற்று பாதிப்பு உள்ளவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு சமூகப் பரவல் வாயிலாகவும் பரவிவருகிறது. அதன் காரணமாக, நோய்த் தொற்றின் பரவலைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. வெளியில் மக்கள் நடமாட்டத்தைத் தடுத்து வீட்டுக்குள் மக்களை முடக்கியது. ஆனாலும் நோய் தாக்கத்தின் வீரியம் குறைந்தபாடில்லை என்பதால், ஊரடங்கை மேலும் அடுத்த மாதம் 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

நாட்டின் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை மாநில வாரியாகக் கணக்கிடப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகபட்சமாக இந்த நோய்த் தாக்குதலுக்கு 250-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை டிஜிபி தில்பாக் சிங், “ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பாகிஸ்தான் தனது பயங்கரவாத குழுக்களின் மூலம் கோவிட்-19 வகை நோயைப் பரப்ப முயல்வதாக” பாகிஸ்தான் அரசை கடுமையாகச் சாடியிருக்கிறார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ஜம்மு- காஷ்மீர் டி.ஜி.பி தில்பாக் சிங், “இந்தியாவில் கொரோனா நோயின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமாக இருப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியிலும், இந்த நோயின் காரணமாக இது வரை 5 பேர் இறந்துள்ளனர். நோய் தீவிரத்தை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசும் சுகாதாரத் துறையும் போராடிவரும் நிலையில், பாகிஸ்தான் தனது பயங்கரவாத அமைப்புகளின் மூலம் ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு கொரோனா நோய்க்கிருமியைப் பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. ஒட்டுமொத்த உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான் அரசு மட்டும் இந்தியாவிற்கு எதிரான நாச வேலைகளில் களம் இறங்கியிருப்பது வேதனை அளிக்கிறது.

டி.ஜி.பி தில்பாக் சிங்

பாகிஸ்தான் அரசு, தனது சொந்தச் செலவில் பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சி அளித்து, இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க முயன்றுவருகிறது. தரவுகளின்படி பார்க்கையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்றுவரும் பலருக்கும் கொரோனா நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அப்படி கொரோனா பாதிக்கப்பட்டவர்களை ஜம்மு-காஷ்மீர் பகுதிக்குள் அனுப்பி, ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும் நோய்க்கிருமியைப் பரப்பிவிட வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால், அதற்கு நாங்கள் ஒருபோதும் இடம் அளிக்கப்போவதில்லை.

அவர்களின் சதித் திட்டங்களை முறியடித்து, ஜம்மு-காஷ்மீர் மக்களைப் பாதுகாத்து, அமைதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. உலகமே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகக் களம் இறங்கியிருக்கும் தருணத்தில், பாகிஸ்தான் மட்டும் இந்தியாவை அழிப்பதிலேயே குறியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.