கோவிட்- 19 நோயை எதிர்த்துப் போராட, மருந்துகளும் தடுப்பூசி கண்டுபிடிப்புகளும் உலக அளவில் ஆராய்ச்சிக் கட்டத்தில் உள்ள நிலையில், பிளாஸ்மா தெரபி எனப்படும் குருதி நீர் சிகிச்சைக்கு (Plasma therapy) நல்ல பலன் கிடைத்துள்ளது வரவேற்கத்தக்கது. தற்போது, இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சையின்மூலம் ஒருவர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவந்துள்ளது, மேலும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

கொரோனா

டெல்லியைச் சேர்ந்த 49 வயது நபர், ஏப்ரல் 4-ம் தேதி, கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவாசக் கருவி உதவியுடன், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில், அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. அதையடுத்து, அவர் குணமடைந்து தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வெளியில் வந்துள்ளார். அவருக்கு இரண்டு முறை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர் தொற்றிலிருந்து மீண்டுள்ளது உறுதியாகியுள்ளது.

Also Read: கொரோனாவைக் குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சை… அமெரிக்காவின் முன்னெடுப்பு முயற்சி!

பிளாஸ்மா சிகிச்சை என்பது நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்களிடமிருந்து குருதி நீர் எடுத்து, ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு செலுத்தி செய்யப்படும் சிகிச்சை. தொற்றில் இருந்து மீண்டவர்களிடம் உள்ள வைரஸ் எதிர்ப்புப் புரதம் (Antibody), பாதிப்பு உள்ளவர்களின் உடலில் வைரஸை எதிர்த்துப் போராடும். இதன்மூலம், அவர்கள் அந்தத் தொற்றிலிருந்து மீள முடியும்.

கொரோனா வைரஸ்

டெல்லி, கேரளா, மகாராஷ்டிரா ,குஜராத் போன்ற மாநிலங்களில் பிளாஸ்மா சிகிச்சை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .இதை கொரோனா வைரஸுக்கான சிகிச்சை முறையாக அறிவிப்பதற்கு முன்னர், அதன் செயல்திறனை அறிவதற்காக இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன .

Also Read: சம்பளம் வாங்காமல் கொரோனா சிறப்பு வார்டில் வேலை! -கேரள செவிலியரின் துணிச்சல்

டெல்லியில் குணமான நபருக்கு சிகிச்சையளித்த மருத்துவர், “பிளாஸ்மா சிகிச்சை, நோயாளி குணமாவதைத் துரிதப்படுத்தியது. அவர் குணமானதற்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம் என்பதால், அவர் 100 சதவிகிதம் பிளாஸ்மா சிகிச்சையால்தான் குணமடைந்தார் என்று கூற இயலாது” என்று கூறினார்.

மருத்துவர்

இந்த சிகிச்சைக்கு பிளாஸ்மாவை தானமாகத் தர சம்பந்தப்பட்ட நபர்கள் முழு மனதுடன் முன்வர வேண்டும் என்பதால், அவர்களின் சம்மதத்தைப் பெறுகிற முயற்சிகளும் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கின்றன.

பிளாஸ்மா சிகிச்சை விரைவில் நடைமுறைக்கு வந்தால், கொரோனா வைரஸின் தீவிர பாதிப்பில் உள்ளவர்களைக் காப்பாற்ற முடியும். கொரோனா பீதி உச்சம் தொட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், டெல்லி சம்பவம் சின்ன ஆறுதலையும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.