அரசு வழங்கும் அரிசியை மக்களுக்கு வழங்க கோரிக்கை!

மாவட்ட ஆட்சியருடன் ஜமாத் நிர்வாகிகள்

தற்போது கொரானோ தாக்கத்தின் விளைவாக ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் பள்ளிவாசல்களில் தயார் செய்ய வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு மாற்றாக அந்தந்த பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் பச்சரிசியை ஜமாத் நிர்வாகிகள் பெற்று அதை அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்கு நேரில் விநியோகிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து ஆலோசனை நடத்திய ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தினர், பச்சரிசியை வீடுகளுக்குப் பிரித்து வழங்குவதன் மூலம் வீடுகளில் நோன்புக் கஞ்சி தயார் செய்ய இயலாது. அரிசி மட்டுமே அரசு வழங்கி வரும் நிலையில் நோன்புக் கஞ்சிக்குத் தேவையான மற்ற துணைப் பொருள்கள் இல்லாமல் வீடுகளில் கஞ்சி தயார் செய்ய இயலாத நிலை உள்ளது. எனவே, இந்த ஆண்டு நோன்புக் கஞ்சிக்காக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 417 டன் பச்சரிசியை அனைத்து முஸ்லிம் ஜமாத்துகள் சார்பில், ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கிடும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து!

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி பெற்றுள்ளதாக தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர்கள் அறிவித்துள்ளனர். கண்டுபிடிப்பு அடுத்த கட்டத்துக்கு செல்லும்பட்சத்தில், தடுப்பூசி மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம் என்றும், அமெரிக்காவின் தடுப்பு மருந்து நிறுவனத்தோடு இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம் என்று எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரான சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியது..!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 18,985-லிருந்து 19,984 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 603-லிருந்து 640ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,260-லிருந்து 3,870 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 5,218 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனா பாதிப்பால் 251 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 722 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.77 லட்சத்தைக் கடந்துள்ளது.

8 லட்சம் பாதிப்பு; 45,000-ஐ நெருங்கும் இறப்பு! #Corona

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், இந்த வைரஸுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 45,000-ஐ நெருங்கியுள்ளது. திங்கள் கிழமை இரவு முதல் செவ்வாய் கிழமை இரவு வரை மட்டும் அங்கு 40,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.