கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவருவதன் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், மத்திய, மாநில அரசுகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதில், மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வோர், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், மாஸ்க் அணிந்து சானிடைஸர்களை உடன் வைத்துக்கொண்டும் உடற்பயிற்சியில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு, அந்த அனுமதி மறுக்கப்படுவதோடு மட்டுமில்லாமல், அரசால் அறிவிக்கப்படாத பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குடியிருப்பு அசோசியேஷன்கள் அறிவுறுத்தலின்படி, பாதுகாவலர்களால் குடியிருப்பு வாசிகளுக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு, அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், நோயாளிகள் பலர் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், காவல் நிலையம் வரை பல பஞ்சாயத்துகள் செல்வதாகவும் சொல்லப்படுகிறது.

Apartments

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வாசி ஒருவர் நம்மிடம் பேசியபோது…

“இதய பாதிப்புடைய என் தாயார், எனது அப்பார்ட்மென்ட்டில் இருந்து 10 நிமிட தொலைவில் உள்ள பகுதியில் தனியாக வசித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக, அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுடன் பேச முடியாமல் அவர் தனிமையில் இருப்பதால், என் வீட்டுக்கு கூட்டிவந்தேன். அப்போது, அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டிகள் எனது காரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். என்னுடன் தாயார் இருந்ததைக் கண்ட செக்யூரிட்டிகள், அப்பார்ட்மென்ட் அசோசியேஷனின் உத்தரவின் பேரில் எங்களை சுமார் மூன்று மணி நேரம் உள்ளே அனுமதிக்காமல் அலைக்கழிப்பு செய்தனர். ஏன் எங்களைக் காக்க வைக்கிறீர்கள் எனக் கேட்க, எங்களுடன் கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். எனது தாயாரை மட்டுமல்லாமல், குடியிருப்பு வாசியான என்னையும் வளாகத்துக்குள்ளே வரக் கூடாது எனக் கூறி கதவை இழுத்து சாத்திவிட்டனர்.

காவல்துறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தேன். உடனடியாக, கண்ணகி நகர் துணைக் காவல் ஆய்வாளர் அப்பார்ட்மென்ட்டுக்கு வந்து விசாரணை நடத்தினார். இரு தரப்பின் கருத்துகளையும் கேட்டவர், எனது தாயாரை அனுமதிக்காமல் இருப்பது அப்பார்ட்மென்ட் அசோசியேஷனின் முடிவு என்றார். ஆனால், குடியிருப்பு வாசியான என்னை உள்ளே அனுமதிக்காமல் இருப்பது எல்லை மீறும் செயல் எனக் கண்டித்து, என்னை உள்ளே அனுமதிக்க வழிவகை செய்துவிட்டுச் சென்றார்.

Apartments

பல மணி நேரம் எங்களை அலைக்கழிப்பு செய்தது மட்டுமில்லாமல், மீண்டும் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் விதமாக, அப்பார்ட்மென்ட் அசோசியேஷன் சார்பாக எனது வீட்டை தனிமைப்படுத்துவதாக அறிவித்தனர். மேலும், அப்பார்ட்மென்ட் வாட்ஸ்அப் குழுவில், அந்நிய நபர்கள் வந்து சென்றுள்ளதால், வளாகத்தின் பாதுகாவலில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் செக்யூரிட்டிகள் வேலைக்கு வர மறுக்கிறார்கள் எனவும் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். மேலும் என்னிடம், `உங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கு என்ன ஆதாரம்’ என விவாதித்ததோடு, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினரிடமிருந்து சான்றிதழ் பெற்று வர வற்புறுத்துகிறார்கள்.

நான் அப்பார்ட்மென்டில் வாடகைக்கு வசித்துவருகிறேன். அசோசியேஷனிலிருந்து என் வீட்டு உரிமையாளருக்கு போன் செய்து, நாங்கள் மற்ற குடியிருப்புவாசிகளுக்கு இடைஞ்சல் ஏறப்டுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். இதனால், வீட்டு உரிமையாளர் எங்களைக் காலிசெய்யச் சொல்லிவிடுவாரோ என்கிற பயமும் எங்களுக்கு உள்ளது.

மேலும், எங்கள் குடியிருப்பில் வசிக்கும் சிலர், மூட்டு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறுவை சிகிச்சைகளை சமீபத்தில் செய்துள்ளனர். அவர்கள், கட்டாயம் நடைப்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று மருத்துவர்களின் அறிவுரை இருக்கிறது. ஆனால், அதற்கும் அசோசியேஷன் சார்பாக தடைவிதித்துள்ளனர். மேலும், `டெரஸ்’ பகுதியையும் அடைத்துவைத்துள்ளனர். இதனால் நடைப்பயிற்சி செய்யாமலும், வீட்டுக்கு உள்ளேயே முடங்கிக்கிடப்பதாலும் குழந்தைகள், முதியவர்கள் உட்பட அனைவரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதே நிலை நீடித்தால், இந்த ஊரடங்கு முடிவதற்குள், எங்கள் அப்பார்ட்மென்ட்டில் உடல் நீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு பல நோயாளிகள் உருவாகிவிடுவார்கள் என்று நினைக்கிறேன். எங்கள் அப்பார்ட்மென்ட்டில் மட்டுமல்ல, சென்னையில் இன்னும் பல அப்பார்ட்மென்ட்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. சென்னை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களைப் போன்ற குடியிருப்புவாசிகளின் வேண்டுகோள்” என்று படபடவெனப் பேசி முடித்தார். அவர் பேச்சிலிருந்தே அவர் எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

இந்நிலையில், இந்தப் பிரச்னை குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் பேசினோம்.

“மாநகராட்சி நிர்வாகம் மூலமாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் இடங்களைத் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்து, கண்டிப்பான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அந்தப் பகுதிகளில் மக்களின் நகர்வு என்பது முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா தொற்று ஏற்படாத மற்றும் பாதிப்பு குறைவான பகுதிகளில் மக்கள் அன்றாடத் தேவைகளுக்காக வெளியே வந்து செல்வதில் எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. அதேபோல, அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு என தனியாக எந்த ஊரடங்கு விதிகளும் இல்லை. பொதுவான விதிகளே அவர்களுக்கும் பொருந்தும். உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்போர், அவர்களின் குடியிருப்பு வளாகத்திலேயே மாஸ்க் அணிந்தும், சானிடைஸர்களை அடிக்கடி பயன்படுத்திக்கொண்டும் அவற்றை மேற்கொள்ளலாம்.

Also Read: `வீட்டு அடித்தளத்தில் முன்னரே உணவு சேமித்துவிட்டோம்..!’ – கொரோனா பற்றி மெலிண்டா கேட்ஸ்

தற்போது குறிப்பிட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்திருக்கக் கூடிய சம்பவம், அவர்களின் நிர்வாகப் பிரச்னையைக் காட்டுகிறது. கொரோனா பாதுகாப்பு காரணத்துக்காக வெளியிலிருந்து வருவோர்களை அனுமதிப்பதில்லை என்பது குடியிருப்பு அசோசியேஷன்களின் முடிவு என்றாலும்கூட, அந்தக் குடியிருப்பு வாசியை உள்ளே அனுமதிக்காமல் அலைக்கழிப்புச் செய்தது அவரின் தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகவே பார்க்க முடிகிறது. இதுகுறித்து அவர்களிடம் உரிய விசாரணை நடத்தப்படும்.

Chennai corporation commissioner prakash

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களிடமிருந்து, இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எங்கள் கவனத்துக்கு வருகின்றன. இவற்றைத் தீர்க்கும் விதமாக, மாநகராட்சி சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டுவருகின்றன. யாருக்காவது ஏதாவது பிரச்னை இருந்தால் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ளலாம்” என்கிறார், ஆணையர் பிரகாஷ்.

கட்டுப்பாட்டு அறை எண்: 1077

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.