கரூர் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆளுங்கட்சியினரோடு கூட்டமாகக் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ‘அமைச்சருக்கு ஊரடங்கு உத்தரவில் விதிவிலக்குக் கொடுக்கப்பட்டுள்ளதா?’ என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பாப்புலர் முதலியார் வாய்க்காலில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலகையே ஒருவழி பண்ணிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் அதன் வீரியத்தைக் கட்டுப்படுத்த, வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் எல்லா மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருள்களை வாங்க மட்டுமே மக்கள் வெளியில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

Also Read: `1 கோடி ரூபாயில் ஒரு ரூபாய்கூட செலவழிக்கவில்லை!’- செந்தில் பாலாஜியைக் கொதிக்கவைத்த `22 நாள்கள்’

‘கூட்டமாக எங்கும் மக்கள் கூட வேண்டாம்’ என்று காவல்துறை மூலம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தங்கள் கட்சியினரோடு கூட்டமாகப் போய் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கிருமிநாசினி தெளிக்கும் நவீனத் தானியங்கி இயந்திரங்களைத் தொடங்கி வைத்த நிகழ்வில் கூட்டமாகக் கலந்துகொண்டதாக சலசலப்பு எழுந்தது.

கிருமிநாசினி இயந்திரங்கள் தொடக்க விழாவில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இந்த நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது சொந்த நிதியில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாப்புலர் முதலியார் வாய்க்கால் விஸ்தரிப்புப் பணிகளை, கரூர் கிழக்கு ஒன்றியம் வாங்கல் கருப்பம் பாளையத்திலிருந்து செய்தார். இத்திட்டம் தொடங்கப்பட்டு, நெரூர் வட பாகம் ஊராட்சி ஒத்தக்கடை பகுதியில் வந்த தண்ணீரை, எம்.ஆர்.விஜயபாஸ்கரும், கிருஷ்ணராயபுரம் சட்ட மன்ற உறுப்பினர் கீதாவும் நேரில் சென்று மலர் தூவி வரவேற்றனர். இவர்களோடு, கரூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மதுசுதன், ஒன்றிய துணைத் தலைவர் தங்கராஜ், விவசாய சங்கத் தலைவர் நடேசன், செயலாளர் கனகராஜ், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், விவசாயப் பெருமக்கள் என்று பலர் கலந்துகொண்டனர். இதுவும் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர், “அமைச்சர் என்பதால் கொரோனா வைரஸ் பரவாதா என்ன?. அவர் நவீன கிருமிநாசினி தெளிப்பு இயந்திரங்கள் தொடக்க விழாவிலும் ஆளுங்கட்சினர் புடைசூழ கலந்து கொண்டார், சமூக விலகலைக் காற்றில் பறக்கவிட்டார். அதேபோல், அவர் தனது சொந்த நிதியில் பாப்புலர் முதலியார் வாய்க்காலைத் தூர் வாரி, அதில் தண்ணீர் வர வைத்தது பாராட்டத்தக்க செயல்தான். ஆனால், அதற்காக அந்த வாய்க்காலில் வரும் தண்ணீரை மலர் தூவி வரவேற்கிறேன் என்று ஏகப்பட்ட ஆளுங்கட்சி கரைவேட்டியினரோடு போய் கலந்துகொண்டது, ஊரடங்கு உத்தரவு தனக்குச் செல்லாது என்று அவர் சொல்லாமல் சொல்வது போல் உள்ளது.

பாப்புலர் முதலியார் வாய்க்காலில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தண்ணீர் வருவதை அவர் தனியாகப் போய் மலர்தூவி வரவேற்றிருக்கலாம். இப்படி அமைச்சர் தொடர்ச்சியாகப் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டால், பொதுமக்கள் எப்படி ஊரடங்கு உத்தரவைச் செயல்படுத்துவார்கள்?. அமைச்சர் இனியாவது ஊரடங்கு உத்தரவை மனதில் கொண்டு, தான் கலந்துகொள்ளும் கூட்டம், நிகழ்வுகளில் ஆளுங்கட்சியினரைத் தவிர்த்துவிட்டுச் செல்ல வேண்டும்” என்றார்கள்.

இதுகுறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் பேசினோம். “கிருமிநாசினி தானியங்கி இயந்திரங்கள் தொடக்க விழாவில் அதிகாரிகள் மட்டும் கலந்துகொண்டார்கள். பாப்புலர் முதலியார் வாய்க்கால் விவகாரத்தைப் பொறுத்தமட்டில் அமைச்சர் அங்கே போக விரும்பவில்லை. ஆனால், அங்குள்ள விவசாயிகள் அமைச்சரை வற்புறுத்தி அழைத்ததால், அமைச்சர் அந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

கிருமிநாசினி இயந்திரங்கள் தொடக்க விழாவில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கட்சியினர் தானாக வந்துவிட்டனர். அமைச்சர் சமூக விலகலை மிகச்சரியாகக் கடைப்பிடிக்கிறார். தேவையில்லாமல் எதிர்க்கட்சியினர் இதை ஊதிப் பெரிதாக்குகிறார்கள்” என்றார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.