மதுரை அருகே உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு ஊரடங்கு உத்தரவை மீறி அதிகளவில் கூட்டத்தை கூட்டி இறுதி சடங்கு நடத்தியதாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி கிராமத்தின் செல்லாயி அம்மன் ஜல்லிக்கட்டு காளை கடந்த 12-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.
இதைத்தொடர்ந்து உயிரிழந்த காளை அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதி சடங்கு நடத்தப்பட்டது. இதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடி ஜல்லிக்கட்டு காளைக்கு அஞ்சலி செலுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி இறுதி சடங்கு நடத்தி பொதுமக்களை அதிகளவில் ஒன்று திரட்டியதாக கிராமத்தின் நிர்வாகிகள் மலைச்சாமி, வடிவேலு, ராஜ்குமார், பிரேம் குமார், கண்ணன் உள்ளிட்ட 7 பேர் மீது ஊரடங்கு உத்தரவை மீறியது, நோய் தொற்றை பரப்பும் வகையில் செயல்பட்டது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM