#TakeChallangeGive100 ட்விட்டரில் வலம்வரும் இந்த ஹேஷ்டேக் இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகள் உருவாக்கியது. இந்த லாக் டெளன் காலத்தில் இந்த ஹேஷ்டேக் சேலஞ்சை ஏற்றுக்கொள்ளும் நபர்கள் தங்கள் உடலைக் கொஞ்சம் ஃபிட்னஸாக வைத்துக்கொள்ளலாம் அதேவேளையில் அவர்கள் அளிக்கும் சிறிய நிதியானது பட்டினியால் வாடும் மக்களின் பசியைப் போக்குவதாகவும் இருக்கும் என்கின்றனர் ஹாக்கி வீராங்கனைகள்.

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியினர் இந்த ஃபன் ஃபிட்னஸ் சேலஞ்ச் மூலம் நிதிதிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் திரட்டப்படும் நிதி குறைந்தபட்சம் ஆயிரம் குடும்பங்களின் பசியைப் போக்கும் என வீராங்கனைகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இவர்களின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் பேசுகையில், “நாட்டில் நிறைய மக்கள் உணவுகள் இன்றி தவித்து வருவதாக செய்தித்தாள்களிலும், சமூகவலைதளங்களிலும் செய்திகள் வெளியாகின்றன. இந்த நேரத்தில் கஷ்டப்படும் மக்களுக்கு நாம் உதவ வேண்டும் என நினைத்தோம்.

ராணி ராம்பால்

ஆன்லைன் பிட்னஸ் சேலஞ்ச்தான் இதற்கு சிறந்த வழி என முடிவு செய்தோம். இந்த லாக் டெளன் நாள்களில் மக்கள் வீடுகளில் முடங்கியிருக்காமல் சுறுசுறுப்பாக இருக்க கேட்டுக்கொள்கிறோம். இந்த முயற்சியின் மூலம் 1000 குடும்பங்களுக்கு எங்களால் உணவு அளிக்க முடியும் என நம்புகிறேன். சில நாள்களுக்கு முன்பு என் தந்தையிடம் பேசும்போது, `நீ ஹாக்கி விளையாடுறதுனால நாம் இன்னைக்கு நல்ல நிலைமையில இருக்கோம். இல்லையென்றால் நாமும் உணவுக்கு கஷ்டப்படக்கூடிய சூழலில்தான் இருப்போம்’ என்றார்.

அவரது இந்த வார்த்தை என்னை எதோ செய்தது. என் இதயம் ஒரு கணம் நின்றுவிட்டது. இன்று அணியில் இருக்கும் நிறைய வீராங்கனைகள் வறுமையின் பிடியில் சிக்கி பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்தவர்கள்தான். உணவு கிடைக்கவில்லை என்றால் அந்த வலி எப்படி இருக்கும் என எனக்குத் தெரியும்.

தொழிலாளர்களுக்கு நிதி திரட்டும் மகளிர் ஹாக்கி டீம்

நான் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ஹாக்கிதான். நான் ஹாக்கிக்குதான் நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால், எல்லோருக்கும் அப்படியில்லையே” என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் வசூலாகும் நிதியை டெல்லியைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிவுசெய்துள்ளனர். உணவு மற்றும் ரேஷன் பொருள்கள் மட்டும் இல்லாமல் அவர்களுக்குத் தேவையாக சோப்பு மற்றும் கிருமிநாசினிகளை வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.

சவிதா

துணை கேப்டன் சவிதா பேசுகையில், “ஒவ்வொரு நாளும் புதிய டாஸ்க் தருவோம். யார் வேண்டுமானாலும் இந்த சேலஞ்சை ஏற்றுக்கொள்ளலாம். இந்த ஃபிட்னஸ் சேலஞ்ச் ஏற்றுக்கொள்ளும் நபர்கள் 100 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை நன்கொடையாக அளிக்கலாம். இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியில் இருக்கும் நிறைய வீராங்கனைகள் வறுமையான சூழலில் இருந்து வந்தவர்கள்தான்.

உணவு மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகளுக்கு நாங்களும் கஷ்டப்பட்டிருக்கிறோம். நாங்கள் இன்று அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நிலையில் இருக்கிறோம். ஏழை மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் பிற பொருள்கள் கிடைக்க எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வோம்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.