முன்பு எப்போதுமில்லாத அளவுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) கடும் விமர்சனத்தை கொரோனா விவகாரத்தில் சந்தித்துள்ளது. சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருவதாக அமெரிக்கா பகிரங்கமாகவே குற்றம் சாட்டியுள்ளது. உலக சுகாதார அமைப்புக்கு வழங்கவுள்ள நிதியையும் முடக்கப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். உலக சுகாதார அமைப்புக்கு ஆண்டுக்கு ரூ. 16,000 கோடி நிதியாக சர்வதேச நாடுகள் வழங்குகின்றன. அதிகபட்சமாக, அமெரிக்கா 281 மில்லியன் டாலர்களையும் பிரிட்டன் 205 மில்லியன், ஜெர்மனி 154 மில்லியன் டாலர்ளையும் நிதியாக வழங்குகின்றன. ஆசியக் கண்டத்தில் ஜப்பான், அதிகபட்சமாக 86 மில்லியன் டாலர்களை அளிக்கிறது. இது தவிர , ‘பில் அண்டு மெலிண்டா கேட்ஸ்’ அறக்கட்டளை, ஆண்டுக்கு 228 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாகத் தருகிறது. அரசு சாராத அமைப்புகளில் பில்கேட்ஸ் அறக்கட்டளைதான், உலக சுகாதார அமைப்புக்கு அதிக நிதியை வழங்குகிறது. பில்கேட்ஸ் அறக்கட்டளையும் அமெரிக்காவைச் சார்ந்ததுதான்.

சர்வ வல்லமை பொருந்திய நாடு என்று சொல்லிக்கொள்ளும் சீனா, உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதி எவ்வளவு என்று அறிந்தால் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிடுவீர்கள். ஆண்டுக்கு 6 மில்லியன் டாலர்களைத்தான் சீனா நிதியாக அளிக்கிறது. இது தவிர, சீனாவைச் சேர்ந்த மருத்து உற்பத்தி நிறுவனங்களான பீஜிங் தியான்தயன் பயாலஜிக்கல் நிறுவனம் மற்றும் ஸினோவாக் பயோடெக் நிறுவனங்கள், ஆண்டுக்கு 92,000 அமெரிக்க டாலர்களை உலக சுகாதார நிறுவனத்துக்கு நிதியாக வழங்குகின்றன. சீனாவுடன் ஒப்பிடுகையில், ஆப்பிரிக்காவின் காங்கோ நாடுகூட ஆண்டுக்கு 24 மில்லியன் அமெரிக்க டாலர்களை உலக சுகாதார நிறுவனத்துக்கு நிதியாக அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிக நிதியை ஒதுக்குவது அமெரிக்காதான். ராணுவம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்கும் சீனா, மிகக் குறைந்த தொகையையே உலக சுகாதார அமைப்புக்கு ஒதுக்குகிறது.

Also Read: தொழில்துறை சந்திக்கும் பாதிப்புகள்! – மிரட்டும் கொரோனா நெருக்கடி!
வல்லரசு நாடு என்றாலும் கொரோனா முன் அமெரிக்காவால் தாக்குபிடிக்க முடியவில்லை. ‘விரைவில் கண்ணுக்குத் தெரியாத எதிரி ஒழிக்கப்படுவான்’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியே கூறிவந்தாலும், ‘அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு லட்சம் பேர் இறப்பார்கள்’ என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்தச் சூழலில்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தொடர்ந்து சீனா மீதும் உலக சுகாதார அமைப்பு மீதும் பாய்ந்து கொண்டிருக்கிறார். சீனாவுடன் சேர்ந்து கொரோனா பற்றிய உண்மைத் தகவல்களை உலக சுகாதார அமைப்பு மறைத்து விட்டது என்பது ட்ரம்ப் வைத்துள்ள குற்றச்சாட்டு. இதுகுறித்து ட்விட்டரில்,’ உலக சுகாதார அமைப்புக்கு நாங்கள்தான் அதிக நிதியளிக்கிறோம். இருந்தும் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பை மறுசீரமைப்பு செய்ய வேண்டியது உள்ளது’ என்று ட்ரம்ப் வெளிப்படையாகவே எச்சரித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பிடம் அமெரிக்கா முட்டிமோதிக் கொண்டிருக்க, இந்தியா இந்த விவகாரத்தில் அமைதியாகவே இருந்துவருகிறது. கொரோனா விஷயத்தில் சீனாவை குற்றமும் சாட்டவில்லை. உலக சுகாதார அமைப்பிடம் கோபத்தையும் காட்டவில்லை. ஆனால், ஒரு விஷயத்தில் இந்தியா தெளிவாக இருந்தது. கொரோனா விஷயத்தில் உலக சுகாதார அமைப்பு கூறிய வழிமுறைகளைவிட, இந்திய மருத்துவ கவுன்சில் கொடுத்த அறிவுரைகளைப் பின்பற்றுவது என்பதே அது. இதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். உலக சுகாதார அமைப்பின் தலைவரான ஜெட்ரோஸ், சீனாவுடன் விமானப் போக்குவரத்தை ரத்துசெய்ய வேண்டாம் என்று ஜனவரி 30-ந் தேதி உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் கூறிய அறிவுரையின்படி, ஜனவரி 25-ம் தேதியே சீனாவுடனான அத்தியாவசியமில்லாத அனைத்து விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தை இந்தியா ரத்து செய்துவிட்டது. ‘இந்தியர்களை சீனாவுக்கு பயணிக்க வேண்டாம்’ என்றும் கோரிக்கையும் விடுக்கப்பட்டது. அதனால், வரும் ஜூலை வரையில் சீனாவுக்கு பயணிகள் விமானப் போக்குவரத்து இல்லை. அதேபோல், உலக சுகாதார அமைப்பு டெஸ்டிங், டெஸ்டிங் என்று பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுத்து கூறிக் கொண்டிருந்தபோது, இந்தியா சோஷியல் டிஸ்டன்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து லாக்-டவுண் அறிவித்தது. முந்தைய காலகட்டங்களில் காசநோய் போன்றவற்றை ஒழிப்பதில் உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் முக்கியப் பங்காற்றியிருந்தாலும், கொரோனா விஷயத்தில் மத்திய அரசு இந்திய மருத்துவ கவுன்சில் காட்டிய வழிமுறைகளைத் தீர்க்கமாகப் பின்பற்றியது.
உலக சுகாதார அமைப்பு பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்த இன்னொரு காரணமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கொரோனா டெஸ்ட்டிங் கருவிகள் சீனாவில்தான் அதிக அளவு தயாரிக்கப்பட்டு உலக நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. டெஸ்ட்டிங் கருவிகளை சீனா இலவசமாக வழங்கவில்லை. இதையும், சீனா பிசினஸாகவே செய்து வந்தது. சீனாவின் வர்த்தகத்துக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே உலக சுகாதார அமைப்பு டெஸ்ட்டிங்கை வலியுறுத்தியதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஒருவருக்கு முதன்முறை பரிசோதனை செய்யப்பட்டால், நெகட்டிவ் என்று வந்தாலும் 10 நாள்கள் கழித்து அதே நபருக்கு மீண்டும் பாசிட்டிவ்வாக ரிசல்ட் வர வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில்கொண்டுதான் இந்தியா, அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே டெஸ்ட்டிங் மற்றவர்களுக்கு சோஷியல் டிஸ்டன்ஸ் மற்றும் தனிமைப்படுத்தலை அடிப்படையாகக்கொண்டு செயல்பட்டது.
அதேபோல மாஸ்க்குகளைப் பயன்படுத்தத் தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது. ஆனால் இந்தியாவோ, மாஸ்க்குகளைப் பயன்படுத்துவது முக்கியம் என்பதை அறிந்து, மாஸ்க்குகளைப் பயன்படுத்த தன் குடிமக்களை அறிவுறுத்தியது. மாஸ்க்குகள் அணியாத ஒருவரிடத்தில் நோய் அறிகுறி தெரியாவிட்டாலும், இருமல் மூலம் மற்றவருக்கு நோய்த்தொற்றை பரப்ப முடியும். மாஸ்க்குகள் அணிவதால் அதுவும் தடுக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலத்தில், தங்கள் குடிமக்களை மாஸ்க் அணிய அறிவுறுத்திய ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கொரோனா தாக்கம் குறைவாக இருப்பதும் கண்கூடாகத் தெரியவந்துள்ளது. இதனால்தான் டெல்லி, உத்தப்பிரதேசம் , மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
Also Read: பரப்ப வந்தது மதத்தையா… மரணத்தையா? படரும் பயம்… தொடரும் கைது நடவடிக்கை!
கொரோனா விஷயத்தில் உலக சுகாதார அமைப்பை நம்பாமல் , இந்திய மருத்துவ கவுன்சிலை இந்தியா நம்பியதற்கு தற்போது ஓரளவுக்கு பலன் கிடைத்துள்ளதாகவே நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனாலும், அடுத்த இரு வாரங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தீவிரம் தெரிய வரும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.