தமிழ்நாடு அரசு, சீனாவிடமிருந்து வாங்கிய ஒரு லட்சம் கொரோனா ரேபிட் சோதனைக் கருவிகள் தடுக்கப்பட்டதாக வெளியான தகவல் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

தற்போதுள்ள மருத்துவப் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பதை உடனடியாகக் கண்டறிய முடியாது. ரத்தம் மற்றும் சளி உள்ளிட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே முடிவு தெரியும்.
இந்நிலையில் அரை மணி நேரத்தில் சோதனை செய்து கொரோனா நோய் தாக்கியுள்ளதா.. இல்லையா.. என்று கண்டுபிடிக்கக் கூடிய ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவியை (Rapid Testing Kit) தமிழ்நாடு அரசு சீனாவிடமிருந்து வாங்குவதற்கு ஏற்பாடு செய்தது. அவை ஏப்ரல் 9ம் தேதி அன்று தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஏப்ரல் 10 -ம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் மக்கள் பயன்பாட்டிற்கும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அதை மத்திய அரசு தடுத்து கைப்பற்றியிருப்பதாகத் தகவல் வெளியானது.
இதுபற்றி நாகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே. நிஜாமுதீனிடம் பேசினோம்.“மத்திய அரசின் இச்செயல் மனிதகுலத்திற்கு எதிரானதாகும். வெளிநாடுகளிலிருந்து மாநில அரசுகள் நேரடியாக பொருட்கள் வாங்குவதற்கு தடை விதித்து இம்மாதம் 2 -ம் தேதிதான் மத்திய அரசு உத்தரவை மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது. அதுவும் கொரோனா பரவ ஆரம்பித்து 3 மாதம் கடந்து, நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எந்த முன்னேற்பாடும் செய்யாமல் இருந்துவிட்டு, இம்மாதம் 2 -ம் தேதி இந்த உத்தரவை அனுப்பியிருப்பதின் உள்நோக்கம் புரியவில்லை.
கொரோனா நோய்த் தாக்குதல் தீவிரமாக இருக்கும் நிலையில், மக்கள் உயிர்காக்கும் போர்க்கால நடவடிக்கையாக மாநில அரசு வெளிநாடுகளிலிருந்து சிகிச்சைக் கருவிகளை வாங்குவதற்கு அதிகாரமில்லை, உரிமையில்லை என்று மத்திய அரசு தடுத்திருப்பது கண்டனத்திற்குரியதாகும்.

தமிழ்நாடு அரசு வாங்கிய ஒரு லட்சம் கருவிகளையும் மத்திய அரசு கைப்பற்றி, அதை அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிப்போம் என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டுக்கு கொரோனா துயர்துடைப்பு நிதியாக வெறும் 314 கோடி ரூபாயை ஒதுக்கியும், தமிழ்நாட்டை விட குறைவான பாதிப்பை சந்தித்துள்ள மற்ற மாநிலங்களுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கியும் மத்திய அரசு பாகுபாட்டுடன் நடந்து வருகிறது. மத்திய அரசு 7 லட்சம் கருவிகளை சீனாவிடம் வாங்க உள்ளது, நமது 1 லட்சத்தையும் சேர்த்தால் 8 லட்சம் கருவிகள் ஆகும். இதனை அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளித்தால் தமிழ்நாட்டிற்கு சுமார் 20,000 கருவிகள் மட்டுமே கிடைக்கும்.
கொரோனா கொள்ளை நோயிலிருந்து மனிதர்களைப் பாதுகாப்பது எல்லாவற்றையும் விட முக்கியமானதாகும். எனவே, மாநில அரசுகள் நேரடியாக மற்ற நாடுகளிலிருந்து மருந்துவக் கருவிகள் வாங்குவதற்கு விதித்திருக்கும் தடையை மத்திய அரசு முழுமையாக நீக்க வேண்டும். சீனாவிடம் வாங்கிய ஒரு லட்சம் கருவிகளை உடனே தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றார்.