அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்திலுள்ள சார்லொட்டே நகரைச் சேர்ந்தவர் ரேச்சர் ப்ரமெர்ட். மருத்துவர்கள் மற்றும் துறை வல்லுநர்களின் எச்சரிக்கையால் கடந்த 3 வாரங்களாக வீட்டை விட்டு வெளியேறவில்லை. ஏற்கெனவே நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு பிரச்னையால் தவித்து வரும் அவர், மருத்துவர்களின் அறிவுரைப்படி 3 வாரங்களாக வீட்டைவிட்டே வெளியேறவில்லை என்கிறார்கள். மூன்று வாரங்களுக்கு முன் மருந்தகம் ஒன்றுக்கு சென்றுவிட்டு வந்ததே, இதற்கு முன் தான் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவரும் அவரது கணவரும் தற்போது தனியாக மற்றொரு அறையில் வசித்து வருகிறாராம். அவரது கணவர், மருந்தகத்தில் இருந்த பார்மசிஸ்ட் தவிர அவரது வீட்டுக்கு மளிகைப் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் பெண் ஒருவர் என 3 பேரை மட்டுமே இந்த 3 வாரங்களில் சந்தித்ததாகச் சொல்கிறார் அந்தப் பெண். அதேநேரம், டோர் டெலிவரி செய்த அந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்று இருந்தது பின்னர் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தப் பெண்ணை ஒருமுறை கூடத் தொட்டதே இல்லை என்று சொல்லும் ரேச்சல், ஆனால் அவர் கொண்டுவரும் பொருட்களை கையில் கிளவுஸ் எதுவும் அணியாமல் வீட்டுக்குள் எடுத்து வைத்ததாகவும் சொல்கிறார்.
Also Read: கொரோனா வார்டில் 80 வயதுப் பாட்டி டைரியில் எழுதியது என்ன? – கொரோனா பாசிட்டிவ் கதைகள்
வாரத்தில் 3 நாள்கள் தனக்கான கடிதங்கள் வரும் என்றும் ஒவ்வொரு முறையும் அந்தக் கடிதங்களை எடுக்கச் செல்லும்போதும் கைகளில் கிளவுஸ் அணிந்து சென்றதாகவும் கூறுகிறார் அவர். திடீரென அவருக்குக் காய்ச்சல், தலைவலி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன. இதையடுத்து கொரோனாவுக்கான பரிசோதனையை செய்தபோது, தொற்று உறுதி என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியிருக்கிறது.

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், “மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்களின் அறிவுரைப்படி நாம் சரியான விஷயத்தைத் தான் செய்கிறோம் என்று இந்த 3 வாரங்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், தொற்று உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அதிர்ந்துபோய் விட்டேன். என் வாழ்நாளில் நான் சந்தித்த மிகப்பெரிய பிரச்னை இது. இதற்கு முன் ஃப்ளூவால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால், இது அப்படியில்லை. இது முழுக்க முழுக்க வேறொரு பெரிய பிரச்னை’’ என்று வேதனை தெரிவிக்கிறார் ரேச்சல். அவருக்கு யார் மூலம் தொற்று ஏற்பட்டது என்பதைக் கண்டறியும் விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள் அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள். ஆனால், அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

உலக அளவில் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டு, அதைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமூகப் பரவலைத் தடுக்க ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்கின்றன அரசுகள். ஆனால், மக்கள் ஊரடங்கைச் சரியாகக் கடைபிடிப்பதில்லை என்பதே வேதனையான உண்மை. 3 வாரங்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த அமெரிக்கப் பெண்ணின் சோகம், கொரோனா தொற்று மிக எளிதாகப் பரவும் என்பதற்கு மற்றுமொரு உதாரணம். அதேபோல், எப்படி, யார் மூலம் இந்தத் தொற்று பரவும் என்பதைக் கணிப்பதும் கண்டுபிடிப்பதும் சவாலான விஷயமே.