“கரூர் மாவட்டத்துல உள்ள ஊராட்சிப் பகுதிகள்ல மரக்கன்றுகளை நடுறதுக்காக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் எங்க ஊர்ல இந்த நர்சரிய ஆரம்பிச்சாங்க. இதுக்காக 2018 -19’ல மட்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரகத் திட்டம் மூலமா 17.68 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினாங்க. போர்வெல், அஞ்சு ஊழியர்கள்னு பரபரன்னு வேலை நடந்துச்சு. ஆனா, இப்போ நர்சரியில் இருக்கும் 5,000 மரக்கன்றுகளையும் தண்ணீர்ப் பற்றாக்குறைன்னு கருக விட்டுட்டாங்க. கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில இருக்கதால ‘திட்டம் முடிஞ்சதுன்னு’னு நர்சரியைக் காலி பண்ணப் பார்க்குறாங்க. இதுல பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்திருக்கு” என்று குமுறலோடு பேசத் தொடங்கினார் தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணி.

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது, தெற்கு அய்யம்பாளையம். இங்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சித்துறையால் தொடங்கப்பட்டுள்ளது இந்த நர்சரி. கரூர் மாவட்டத்தில் வெறும் 4 சதவிகிதக் காடுகளே உள்ளன. காவிரி, அமராவதி, நொய்யல் போன்ற ஆறுகள் பாய்ந்தாலும், மாவட்டத்தின் 70 சதவிகிதப் பகுதிகள் வறட்சியாகவே இருக்கின்றன.
தமிழகத்திலேயே அதிகம் வெயில் அடிக்கும் பகுதியாக இருந்த வேலூரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, கடந்த மூன்று வருடங்களாக முதலிடத்தில் இருக்கிறது கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி. இந்த நிலையை மாற்றி, கரூர் மாவட்டத்தைப் பசுமை பூமியாக மாற்றும் நோக்கோடு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்த நர்சரி தொடங்கப்பட்டுள்ளது. அதில் பல லட்சம் மோசடி நடந்திருப்பதோடு, அந்தத் திட்டத்தையே இல்லாமல் செய்ய பார்ப்பதாக, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

Also Read: `பாதபூஜை; 105 நபர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு’- தூய்மைப் பணியாளர்களைக் குளிர்வித்த கரூர் தொழிலதிபர்
இதுகுறித்து, நம்மிடம் விரிவாகப் பேசிய பாலசுப்ரமணி,
“கடவூர் ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில்தான், இந்த நர்சரியை எங்க ஊர்ல தொடங்கினாங்க. கடவூர் ஊராட்சி தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஊராட்சி. கடந்த மூன்று ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நடக்கும் மரம் நடும் பணிகளுக்கு, இங்கிருந்துதான் மரக்கன்றுகள் போகுது. தினமும் இரண்டு மூன்று வாகனங்களில் மரக்கன்றுகளை எல்லா ஊராட்சிகளுக்கும் எடுத்துப் போவாங்க.
மர நாற்றுப்பண்ணை பராமரிப்புப் பணி இங்கே சிறப்பாக இருந்த காரணத்தினால, கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் சிறந்த மர நாற்றுப்பண்ணைக்கான விருதும் மாவட்ட ஆட்சியர் அவர்களால வழங்கப்பட்டது. அதன்பின், கடந்த 2018-19-ம் ஆண்டு இந்த நர்சரி பராமரிப்புக்காக ரூ 17.68 லட்சம் நிதி ஒதுக்கீடு செஞ்சாங்க. அதுக்குப் பிறகுதான், இந்தத் திட்டத்தில முறைகேடு நடக்க ஆரம்பிச்சது. கடவூர் ஊராட்சி கிளார்க் பழனி, இதுல பெரிய அளவில் முறைகேடு பண்ணினாரு.

இதில் அந்தத்துறை மேலிட அதிகாரிகள், அப்போதைய ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் இருந்தவர்கள் என எல்லோருக்கும் சம்பந்தம் இருக்குறதா சொன்னாங்க. இந்த முறைகேடு வெளியில் தெரிஞ்சிடக் கூடாதுன்னு இரண்டு மாதங்களுக்கு முன்னாடி, ‘இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு இல்லை, திட்டம் முடிஞ்சிருச்சுன்னு’ சொல்லி, இந்த நர்சரிய மூடும் வேலையில் இறங்கினாங்க. அதனால், நாற்றுப்பண்ணையில் விதைக்கப்பட்ட 5,000 மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் விடாமல் வேணுமுன்னே கருக விட்டுட்டாங்க. நாங்க விசாரிச்சதுல, ‘கடவூர் பகுதியில் கடும் வறட்சி நிலவுது. தண்ணீர் பஞ்சத்தால், இனி இங்கே மரக்கன்றுகள் உற்பத்திப் பண்ணையை நடத்த முடியாது’ன்னு கடவூர் ஊராட்சி சார்பில் மேலிடத்துக்குத் தகவல் அனுப்பியதா தெரிய வந்துச்சு.
பல லட்சம் இதுல முறைகேடு நடந்திருக்கு. இதுல தப்பு நடக்கலன்னா, நன்றாக இருந்த 5,000 மரக்கன்றுகளைப் பயன்படுத்தி இருப்பாங்க. கடவூர் நுழைவாயில்’ல உள்ள கணைவாய்ப் பகுதியில் வனத்துறை சார்பில் மரநாற்றுப்பண்ணை ஒண்ணு இருக்கு. அவங்ககிட்ட கொடுத்திருந்தாக்கூட, அவங்க இந்த 5,000 மரக்கன்றுகளையும் முறையாப் பராமரிச்சு, காடுகள் பெருக்கத்துக்குப் பயன்படுத்தி இருப்பாங்க. ஆனா, கடவூர் ஊராட்சி கிளார்க் பழனிக்கு அந்த மரக்கன்றுகள பாதுகாப்பது நோக்கம் இல்ல. இதில் தான் செய்த முறைகேட்ட மறைக்க, இந்த திட்டத்துக்கு ‘வறட்சி’ங்கிற பெயரைச் சொல்லி, மூடுவிழா நடத்துறதுதான் அவரோட நோக்கம். மரக்கன்றுகளை கருகவிட்டு, இதில் நடந்த பல லட்சம் முறைகேட்டை, ‘நஷ்டக்கணக்கு’ எழுதி மறைக்கவே இப்படி செய்றாங்க. மெள்ள மெள்ள இந்தத் திட்டத்தை சாதுரியமா காலி பண்ண முயற்சி செஞ்சிட்டு இருந்தவங்களுக்கு, கொரோனா வைரஸ் பரவலும், அதைத்தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவும் பெரிய வாய்ப்பா போயிடுச்சு.

Also Read: `இது ஒரு நியாயமற்ற போர்’ – கொரோனாவுக்கு சிகிச்சையளித்த 100 இத்தாலி மருத்துவர்கள் மரணம்
‘இந்த நேரத்தில் நர்சரியைப் பராமரிக்க முடியலை. யாரும் வேலைக்கு வரலை’னு இந்தத் திட்ட மூடுவிழாவுக்கான திரைக்கதையை எளிதாக எழுதலாம்னு நினைக்கிறாங்க. நாங்க இதை சும்மா விடப்போறதில்ல. மாவட்ட நிர்வாகம் உடனே இதுல தலையிட்டு, நடந்திருக்கும் முறைகேட்டைக் கண்டுபிடிச்சு, உரியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கணும். இல்லைன்னா, ஊரடங்கு முடிஞ்சதும், மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்” என்றார் ஆக்ரோஷமாக.
இதுகுறித்து, கடவூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்லமுத்துவிடம் பேசினோம்.
“அதுபற்றி எனக்கும் ஒன்றும் தெரியாது. நான் முறைகேடு எதுவும் செய்யலை. கொஞ்சம் பொறுங்க, கிளார்க்குக்கிட்ட அதைப்பத்தி பேசிட்டு சொல்றேன்” என்று கூறி, போனைக் கட் செய்தார்.
குற்றச்சாட்டுகள் குறித்து, கடவூர் ஊராட்சியின் கிளார்க் பழனியிடமே பேசினோம். நாம் சொன்ன குற்றச்சாட்டுகளைக் கேட்டுக்கொண்டவர், “எல்லாம் பொய் குற்றச்சாட்டுகள் சார். இந்தத் திட்டத்தில் ஒரு ரூபாய் அளவுக்குக்கூட முறைகேடு நடக்கலை. தண்ணீர் பாய்ச்ச முடியல.

அதனால், மரக்கன்றுகளைக் காப்பாத்த முடியல. நிதியும் வரல. வறட்சியால, மேற்கொண்டு இந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியலை. அதனால, இந்தத் திட்டமே கேன்சலாயிட்டு” என்றவரிடம், “திட்டம் கேன்சலானது உண்மைதானா?” என்று கேட்டோம். அதைக் கேட்டு கொஞ்ச நேரம் அமைதி காத்தவர், “இப்போதைய மரக்கன்றுகளைக் காப்பாத்த முடியலை. ஆனால், புதுசா அங்கே மரக்கன்றுகளை விரைவில் உற்பத்தி செய்ய இருக்கிறோம்” என்று பல்டியடித்தார் பழனி.
என்னமோ நடக்குது… மர்மமா இருக்குது..!