உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. மத்திய அரசு சுதாரிப்பதற்கு முன்னதாகவே கேரளா, ஒடிசா போன்ற மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டன.

தற்போதும் கொரோனா தற்காப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகளும், முதல்வர்களுமே முன்னணியில் இருந்து வருகின்றனர். தினசரி செய்தியாளர்களைச் சந்திப்பது, கொரோனா பற்றிய தகவல்களை வெளிப்படைத்தன்மையுடன் பகிர்வது என முன்னோடியாக பல மாநில முதல்வர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஆனால், மத்திய அரசிடம் இதுபோன்ற துரிதமான, வெளிப்படையான நடவடிக்கைகள் இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ்

உள்ளாட்சி அமைப்புகள் தொடங்கி மாநில அரசுகள் வரை கொரோனா தற்காப்பு நடவடிக்கைகளில் களத்தில் தீவிரமாக செயல்பட்டுவருகின்றன. ஆனால், மத்திய அரசிடமிருந்து போதிய உதவி கிடைக்கவில்லை என மாநில அரசுகள் குற்றம் சாட்டத் தொடங்கிவிட்டன. நிதி அதிகாரத்தைத் தன்வசம் வைத்துள்ள மத்திய அரசு, மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், மத்திய அரசு முதல்கட்டமாக ரூ. 17,287 கோடியே ஒதுக்கீடு செய்திருந்தது. மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதிலும் தென் மாநிலங்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இத்தகைய விவாதங்கள் மீண்டும் மாநில சுயாட்சி, அதிகாரக் குவியலுக்கு மாறாக அதிகாரப் பரவலாக்கம் வேண்டும் என்கிற கோரிக்கையை உயிர்பெறச்செய்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா, நாடாளுமன்றத்தில் ஆற்றிய கன்னிப் பேச்சு, தற்போதும் அர்த்தம் பொதிந்ததாக இருந்து வருகிறது. அந்த உரையில், “இப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கிற ஒரு நாட்டிலிருந்து நான் வந்திருக்கிறேன். இன்றைய நிலையை நீங்கள் எப்படிப் புரிந்துகொண்டாலும் சரி, தெற்குக்கு ஒன்று கிடைக்காவிட்டால் அதற்கு இந்திய அரசுதான் காரணம் என்றே எம் மக்கள் நினைக்கிறார்கள். பிரிவினையால் இந்தியா தரித்திர நாடாகிவிடாது என்று உறுதி இருக்கும்போது, ஏன் தக்காண தீப கற்பத்துக்கு சுய நிர்ணய உரிமை தரக்கூடாது? அப்படி முடிவெடுப்பது இந்தியாவின் தரத்தை உயர்த்துவதாகவும் இருக்கும்” என்று பேசினார்.

அண்ணா

Also Read: கொரோனாவுக்கு நிதி… எங்கே கைவைக்க வேண்டும் பிரதமர்?

கொரோனாவை எதிர்கொள்வதில் ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு மாநிலங்களின் குறிப்பிட்ட பிராந்தியங்களும் தங்களுக்கு ஏற்றவாறு செயல்திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றன. கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச அரங்கில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. ராஜஸ்தானில் கொரோனாவால் அதிகம் பாதித்த பில்வாரா பகுதியை ராஜஸ்தான் அரசு கையாண்ட விதத்தை தேசிய முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு செயல்படலாம் என மத்திய அரசே பரிந்துரைத்துள்ளது. எனவே, பல தரப்பட்ட பிராந்திய அரசியல் மற்றும் சமூகப் பின்னனி கொண்ட இந்தியாவில், கூட்டாச்சி முறையால் மட்டுமே சிறந்த நிர்வாகம் வழங்க முடியும் என்கிற குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.

கொரோனா தற்காப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முதல்கட்டமாக மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கியது. அதில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு போன்ற தென்னிந்திய மாநிலங்களைக் காட்டிலும் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள வட இந்திய மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு ரத்துசெய்து, ரூ. 7,900 கோடியை இந்திய அரசின் கஜானாவுக்கு மடைமாற்றம் செய்துள்ளது மத்திய அரசு. இதற்கும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

சமீபத்தில் மாஸ்க், வென்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்களை மாநில அரசுகள் கொள்முதல் செய்யக்கூடாது, மத்திய அரசுதான் கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே மத்திய அரசின் நடவடிக்கைகளில் துரிதத்தன்மை இல்லை என்கிற குற்றச்சாட்டு உள்ள நிலையில், புதிய உத்தரவு மேலும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் கேட்டதற்கும் குறைவான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களையே மத்திய அரசு வழங்கியுள்ளது.

ஆழி செந்தில்நாதன்

இதைப்பற்றி எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன் நம்மிடம் பேசுகையில், “மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் மக்களிடம் நெருக்கமாக உள்ளதால், பிராந்தியத் தேவைகளை நன்றாக உணர்ந்துகொள்ள முடியும். மாநிலங்களுக்கு அதிக முடிவெடுக்கும் அதிகாரமும், சுதந்திரமும் வழங்கினால்தான் இந்தியா போன்ற நாட்டை நிர்வகிக்க முடியும். இத்தகைய நெருக்கடியான சமயத்திலும் மாநில அரசுகள் மத்திய அரசின் கருணையிலேதான் இருக்க வேண்டும் என்கிற டெல்லியின் போக்கு தவறானது. மத்திய அரசும் அதனை நடத்திக் கொண்டிருப்பவர்களும் தேசத்தின் ரட்சகர் போல மக்கள் மத்தியில் காட்சியளிக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடுதான் இது.

Also Read: `WHO’-வுடன் முட்டிமோதும் அமெரிக்கா… இந்திய மருத்துவ கவுன்சிலைப் பின்பற்றும் இந்தியா!

ஏற்கெனவே, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதற்கு பிறகு, மாநில அரசுகளின் வருவாய் பெரிதும் குறைந்துள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்குச் செலுத்தவேண்டிய ஜிஎஸ்டி வரி பாக்கியையும் தற்போது வரை செலுத்தவில்லை. மாநில அரசுகள் கேட்கின்ற நிவாரண நிதியையும் என்றுமே முழுமையாக வழங்கியதில்லை. கேரள வெள்ளத்தின்போது கேரள அரசுக்கு ஐக்கிய அரபு அமீரகம் நிதியுதவி அளிக்க முன்வந்தபோது, மத்திய அரசு அதனை நிராகரித்துவிட்டது. ஆனால், தற்போது பி.எம். கேர்ஸ் நிதிக்கு வெளிநாட்டு நன்கொடைகளை வழங்கலாம் என அறிவித்துள்ளது. இந்த நிதி எவ்வாறு செலவு செய்யப்படும் என்பதில் வெளிப்படைத்தன்மையே இல்லை. எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி என்பது அந்த மாநிலங்களுக்குச் சேர வேண்டியது. இதனை மத்திய அரசு பாரபட்சமின்றி மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஐரோப்பாவிலிருந்து நமக்கு ஒரு படிப்பினை இருக்கிறது. ஐரோப்பாவில் மற்ற நாடுகளைக் காட்டிலும் ஜனநாயகமும் கூட்டாட்சி முறையும் வலுவாக உள்ள ஜெர்மனியில், கொரோனாவின் தாக்கம் குறைவே. ஊரடங்கால் இந்தியா முழுவதும் வேறு மாநிலத் தொழிலாளர்கள் இடம்பெயர நேர்ந்தது. இவ்வாறு பிற மாநிலத் தொழிலாளர்களுக்கான முகாம்களை அமைத்து நிவாரணம் வழங்குவதில் கேரளா தான் முன்னணியில் இருக்கிறது. தமிழக அரசும் பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு சிறந்த முறையிலே நிவாரணம் அளித்துள்ளது. ஆனால், சர்வ அதிகாரமும் குவிந்துள்ள டெல்லியால் பிற மாநிலத் தொழிலாளர்களைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை. இது அதிகாரக் குவிப்பின் தோல்வியே. மத்திய அரசின் இந்தப் போக்கு மாநில அரசுகளை கைப்பாவை ஆக்குவதோடு மட்டுமல்லாது, மத்திய அரசின் நிர்வாக அமைப்பையுமே பாதித்துவருகிறது. பிரதமர் அலுவலகத்திலிருந்து மட்டுமே இந்தியாவை நிர்வகிக்க முடியாது என்பதை தற்போதாவது மத்திய அரசு உணர்ந்திருக்க வேண்டும்.

பிரதமர் மோடி

மாநில அரசுகளை வெறும் நிர்வாக அமைப்பாக மட்டுமே மாற்றி, அதன் அரசியல் முக்கியத்துவத்தை நீக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்-ன் நீண்ட கால அஜெண்டா. அதன்படிதான் தற்போதைய பா.ஜ.க அரசு செயல்பட்டுவருகிறது. கொரோனா போன்ற நெருக்கடியான காலகட்டத்தையும் அதிகாரக் குவியலுக்காக மத்திய அரசு பயன்படுத்திக்கொள்வதுதான் இதில் வேதனையான விஷயம்.

மக்களைக் காப்பது மாநில அரசின் கடமை, மண்ணைக் காப்பது மத்திய அரசின் கடமை என்று அண்ணா ஒருமுறை குறிப்பிட்டார். அதிகாரக் குவியல் என்பது இந்தியாவில் தோற்றுப்போய்விட்டது. இந்த அணுகுமுறை இனியும் தொடர்ந்தால், அது இந்தியாவை மேலும் நெருக்கடிக்கே இட்டுச்செல்லும்” என்றார் அவர்.

#GameCorner

கொரோனா அச்சம், லாக்-டவுண் பரபரப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறைகள் அத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இதோ ஒரு குட்டி கேம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.