கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஐபிஎல் தொடரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஏப்ரல் 15ஆம் தேதி அன்றும் நடைபெறுமா ? என்பது மிகப்பெரிய சந்தேகம் தான். இந்தியாவின் கொரோனா பாதிப்பு வேகத்தை பார்க்கும்போது, கண்டிப்பாக ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாது என்றே தோன்றுகிறது.
இவ்வாறு நடக்காமல் போனால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் பங்குதாரர்களுக்கு சுமார் ரூ.3,800 கோடி இழப்பு ஏற்படும் என தெரியவந்துள்ளது. ஸ்டார் இந்தியா நிறுவனம் 2017ஆம் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ரூ.16,347.50 கோடிக்கு பெற்றது. உலக அளவில் 5 ஆண்டுகளுக்கான உரிமம் இது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்காமல் போனால் இந்நிறுவனத்திற்கு மட்டும் ரூ.3,269.50 கோடி இழப்பு வரும். அத்துடன் பிசிசிஐ விவோ நிறுவனத்திற்கு 5 வருடத்திற்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை ரூ.2,000 கோடிக்கு விற்றிருந்தது. அதன்மூலம் ரூ.400 கோடி இழப்பும், கூடுதலாக பொது ஸ்பான்ஷர்சிப் பெற்றர்களுக்கு ரூ.200 கோடி இழப்பும் ஏற்படும். இவ்வாறாக மொத்தம் ரூ.3.869.50 கோடி இழப்பு நேரிடும். அத்துடன் கொரோனா வைரஸால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டால், அதற்கு இன்சுரன்ஸ் பணமும் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஐபிஎல் போட்டிகள் மூலமாக கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் கிடைக்காமல் போகும். ஐபிஎல் விதிமுறைப்படி போட்டிகள் தொடங்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே 15% சம்பளம் வீரர்களுக்கு கொடுக்கப்படும். பின்னர் தொடர் நடந்துகொண்டிக்கும்போது 65% சம்பளம் வழங்கப்படும். தொடர் முழுவதும் முடிந்த பின்னர் மீதமுள்ள சம்பளமும் கொடுக்கப்படும். ஆனால், இந்த முறை இன்னும் எந்த வீரருக்கும் சம்பளம் கொடுக்கப்படவில்லை.
இந்த முறை ஐபிஎல் போட்டி நடக்காமல் போனால் அது அறிமுக வீரர்களின் கிரிக்கெட் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஐபிஎல் போட்டிகளில் பல விலையுயர்ந்த வீரர்களுக்கு ரூ.75 முதல் 85 கோடி வரை சம்பளமாக கொடுக்க வேண்டும். ஆனால் விலையுயர்ந்த வீரர்களைவிட முதல் முறை களம் காணும் அனுபவமில்லா வீரர்களே இதில் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனப்படுகிறது. அதேசமயம் ஐபிஎல் போட்டிகளை தற்போது நடத்த முடியவில்லை என்றாலும், இந்த வருடத்திற்குள் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ கூறியிருக்கிறது. இருப்பினும் பிசியான கிரிக்கெட் கால அட்டவணையில் அதற்கு இடம் கிடைப்பது தான் கடினம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM