நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை எதிர்த்து அரசு போராடி வருகிறது. தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது என்பதால் பொதுமக்களை வீட்டுக்குள்ளே இருக்குமாறு வேண்டுகோளும் விடுத்து வருகிறது. பொதுமக்கள் வீட்டுக்குள் இருந்தாலும் அவர்களுக்காக காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என பல தொழில்சார்ந்த ஊழியர்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக கொரோனா நோயைத் துரத்த மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள்.

image

கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு மருத்துவர்களும், செவிலியர்களும் சிகிச்சையளிப்பதால் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளுக்கே செல்வதில்லை. எங்கே தன் குடும்பத்தினரையும் கொரோனா வைரஸ் பாதித்துவிடும் என்ற அச்சம் இருப்பதால் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்கின்றனர். மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலின் ஜே.பி.மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவர் சச்சின் நாயக் வீ்ட்டுக்கு செல்லாமல் தன்னுடைய காரிலேயே தங்கி வரும் செய்தி சமீபத்தில் வைரலானது. அதுபோல ஒரு சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

image

கர்நாடகாவின் பெலாகவி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் சுனந்தா வீட்டிற்கே செல்லாமல் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் மருத்துவமனைக்கு அருகில் உள்ள விடுதியிலேயே அவர் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரை காணாது தவித்த அவருடைய 3வயது மகளை சுனந்தாவின் கணவர் இருசக்கர வாகனத்தில் வைத்து விடுதி வளாகத்திற்கு அழைத்து வந்தார்.

image

நீண்ட நாட்களுக்கு பிறகு தாயைப் பார்த்த மகள் தன் தாயிடம் செல்லத்துடிக்க, அருகில் வர வேண்டாமென தாய் சுனந்தா மறுத்துவிட்டார். கண்பார்க்கும் தூரத்தில் தாயும் மகளும் இருந்தாலும் அருகில் செல்ல முடியாமல் இருவரும் கண் கலங்கி அழுதனர். இதனைப் பார்த்த அங்கு அருகில் இருந்த அனைவரையும் இது கலங்க வைத்துவிட்டது. இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு, பார்ப்போரையும் கண் கலங்க வைத்து வருகிறது.

கிரிக்கெட் கமென்ட்ரி; விடாது துரத்தும் ட்ரோன்: கேரள போலீசார் வெளியிட்ட கலகல வீடியோ!

இந்த வீடியோ கர்நாடக முதல்வர் வரை சென்றுவிட்டது. தாய், மகளின் பாசப் போராட்டத்தை பார்த்த முதல்வர் எடியூரப்பா, சுனந்தாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். ”உங்கள் சொந்த குழந்தைகளைப் பார்க்க முடியாமல் நீங்கள் எப்படிப் போராடுகிறீர்கள் என்பதை நான் காண்கிறேன். நீங்கள் செய்யும் தியாகங்களை நான் அறிவேன். கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.