கொரோனா வைரஸ் பரவிவருவதால் இந்தியா முழுவதும் வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்கப் போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே சமயம் மீன்களை விற்க அரசு தடை விதிக்கவில்லை. இதைப் பயன்படுத்தி ரசாயனம் கலந்த மீன்களை பலர் விற்பனை செய்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் ரசாயனம் கலந்த மீன் விற்பனையை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கேரள மாநிலத்தில் பார்மலின் கலந்த மீன்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனைக்கு வந்தன. இறந்தவர்களின் உடலைக் கெடாமல் வைப்பதற்குப் பயன்படும் பார்மலின் கலந்த மீனை சாப்பிடுபவர்களுக்கு கடும் கெடுதலை ஏற்படுத்தும். எனவே பார்மலின் கலந்த மீன் விற்பனையைக் கண்காணிக்க `ஆபரேஷன் ஸாகர் ராணி’ என்ற திட்டத்தை கேரள சுகாதாரத்துறை ஏற்படுத்தியது. அந்தத் திட்டத்தின் அடிப்படையில் ரசாயனம் கலந்த மீன் விற்கப்படுகிறதா என அதிரடியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம் முழுவதும் 216 பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில் ரசாயனம் கலந்த 15,641 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ரசாயனம் கலந்த மீன்களை அதிகாரிகள் அழித்தனர். இது சம்பந்தமாக 15 மீன் விற்பனை மையங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Also Read: ‘பார்மலின்’ மீன்களைக் கண்டறிவது எப்படி?
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், `கன்னியாகுமரி மாவட்டத்தின் குளச்சல் பகுதியில் உரமாக மாற்றி வைக்கப்பட்ட, சாப்பிடத் தகுதி இல்லாத 8,056 கிலோ மீன்களை மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் விற்பதற்காக கொண்டு வந்தார்கள். அதை திருவனந்தபுரத்தில் வைத்து அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

அதுபோல தேங்காப்பட்டணம் பகுதியிலிருந்து கொல்லம் மாவட்டத்தின் நீண்டகரை, கல்லும்தாழம் பகுதிகளில் விற்பனைக்காகக் கொண்டுசென்ற 9,005 கிலோ சூரை மீன், கேரை மீன் வகைகளை ஸ்பெஷல் டீம் கொல்லத்தில் வைத்து பிடித்துள்ளது. இது அனைத்தும் சாப்பிடத் தகுதி இல்லாத மீன்களாகும். பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன’ என அதில் கூறப்பட்டுள்ளது.