இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கைக்கு 10 டன் மருந்துகளை இந்தியா இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. இருக்கிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

மோடி-ட்ரம்ப்

நேற்றைய நிலவரப்படி அமெரிக்காவில் 3.68 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சுமார் பதினோராயிரம் பேர் அமெரிக்காவில் உயிரிழந்திருக்கிறார்கள். ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி என பல்வேறு நாடுகளிலும் கொரோனாவின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸை எதிர்ப்பதில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்னும் மருந்து `கேம் சேஞ்சராக’ இருக்கும் என அமெரிக்கா கடந்த மார்ச் மாதத்தில் தெரிவித்தது.

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு இந்த மருந்தைப் பரிந்துரைப்பதாகவும் தெரிவித்தது. அமெரிக்காவின் அறிவிப்பைத் தொடர்ந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துக்கு உலக அளவில் டிமாண்டு ஏற்படத் தொடங்கியது. உலக அளவில் இந்த மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான இந்தியா உள்நாட்டுத் தேவையை கருத்தில் கொண்டு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்குத் தடைவிதித்தது.

இந்தியா அனுப்பிய கொரோனா மருந்து பொருள்கள்

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு விலக்கு அளித்து அமெரிக்காவுக்கு அந்த மருந்துகளைக் கொடுக்க வேண்டும்“ என மோடிக்கு கோரிக்கை விடுத்தார். ட்ரம்பின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக மோடி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா பாதித்த அண்டை நாடுகளுக்கும் இந்த மருந்தை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. “கொரோனா என்னும் பெருந்தொற்றை மனதில் கொண்டு, நமது நாட்டின் திறனைச் சார்ந்து இருக்கும் சில அண்டை நாடுகளுக்கு பாராசிட்டமால் மற்றும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை மனிதாபிமான அடிப்படையில் வழங்க முடிவுசெய்துள்ளோம்“ என மத்திய வெளியுறவுத்துறை அறிவித்தது.

இந்தியா அனுப்பிய மருந்துகள்

இலங்கையில் நேற்றைய நிலவரப்படி 137 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 255 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 42 பேர் குணமடைந்துள்ளதாகவும் 6 பேர் இறந்துள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

மேலும் 2,000 பேர் மட்டுமே சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இலங்கையின் கோரிக்கையை ஏற்று நேற்று சிறப்பு விமானம் மூலம் 10 டன் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.

கோத்தபய ராஜபக்சே ட்விட்

இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, தனது ட்விட்டர் பக்கத்தில், `இந்தியப் பிரதமர் அவர்களுக்கு எனது இதயபூர்வமான பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கைக்குச் சிறப்பு விமானத்தில் மருந்துகளை அனுப்புவதன் மூலம் சிறப்பான சைகையை எங்களுக்குக் காட்டியிருக்கிறீர்கள். இந்திய அரசுக்கும், மக்களுக்கும் தேவைப்படும் இந்தத் தருணத்தில் உங்களின் தாராளமான மனதுக்கு எங்களின் பாராட்டுகள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.