உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்று குவித்து வருகிறது. இதுவரை உலக அளவில் இந்த உயிர்க்கொல்லி வைரஸுக்கு 1,363,678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 4,789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு இந்த மாதம் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

இந்த நோயின் தீவிரம் குறித்து பொதுமக்களுக்கு அதிக விழிப்புணர்வு இல்லை. அதிலிருந்து மீண்டவர்களையும் சந்தித்து அனுபவங்களைக் கேட்டுப் பெற முடியாது. ஏனெனில் அதன் மூலம் தொற்று வரலாம். இந்நிலையில் பாலிவுட் நடிகர் புராப் கோலி தனது இன்ஸ்டாகிராம் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அவரும் அவரது குடும்பத்தினரும் கொரோனா நோய்த் தொற்று அறிகுறியுடன் இருந்ததாகவும், அவற்றின் அறிகுறிகளை அனுபவித்ததாகவும் கூறியுள்ளார். இவரும் இவரது மனைவி லூசி, மகன் ஒசியன் என ஒட்டுமொத்த குடும்பமும் இரண்டு வாரங்கள் தங்களை சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டு இருந்ததாகக் கூறியுள்ளார்.

மேலும் அவர் எப்படி இதனால் பாதிக்கப்பட்டார் என்பது குறித்து விளக்கியுள்ளார். அவர் பகிர்ந்து கொண்டுள்ள பதிவில், “ஹாய் நண்பர்களே, எங்களுக்கு காய்ச்சல் இருந்தது. எங்களுக்கு உள்ள அறிகுறிகளைப் பார்த்து கொரோனா இருக்கலாம் என மருத்துவர் கூறினார். வலுவான இருமல் மற்றும் மூச்சுத் திணறல் உள்ளது. மேலும் வழக்கமான காய்ச்சலைப் போன்று உள்ளது” என்று கோலி தனது பதிவில் எழுதினார். இந்த அறிகுறிகளை முதலில் கண்டறிந்தவர் அவரது மகள் இனயா தான் என்றும், அதைத் தொடர்ந்து அவரது மனைவிக்கு இருப்பதாகக் குறிப்பிட்டார் என்றும் அதனையடுத்து அவரது மகன் ஒசியனும் இந்தக் காய்ச்சலில் கடைசி ஆளாக இணைந்து கொண்டார் என்றும் எழுதியுள்ளார்.

“இனயாவுக்குதான் முதலில் வந்தது. அவர் மிகவும் லேசானவர். இருமல் மற்றும் சளி இரண்டு நாட்களுக்கு இருந்தது. எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் அறிகுறியைப் போலவே மனைவி லூசிக்கும் இருமல் இருந்தது. மார்பில் அதிகம் சளி இருந்தது. பின்னர், எனக்கு ஒரு நாள் கடுமையான சளி வந்தது. அது பயங்கரமாக இருந்தது. பின்னர் அது மறைந்துவிட்டது. இந்த எரிச்சலூட்டும் இருமல் 3 நாட்களுக்குத் தொடர்ந்தது” என்று அவர் எழுதியுள்ளார்.
மேலும் அவர், இது குறித்து எங்கள் மூன்று பேருக்கு 100-101 டிகிரி வரை உடல் வெப்பநிலை இருந்தது மற்றும் சோர்வும் இருந்தது. ஒசியனுக்கு 3 இரவுகளுக்கு 104 டிகிரி காய்ச்சல் வந்துவிட்டது. பிறகு மூக்கு ஒழுகுதல் மற்றும் லேசான இருமல் இருந்தது. அவரது காய்ச்சல் 5 வது நாளில்மறைந்தது” என்று படிப்படியாக நிலைமையை விளக்கியுள்ளார்.
அவரது இந்த நிலைமை குறித்து பின்னூட்டத்தில் பலரும் நலம் விசாரித்து வருகின்றனர். விரைவில் மீண்டு வர வாழ்த்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM