பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மது என்னும் சேர்ந்தாரைக் கொல்லி, மது அருந்துபவரை மட்டுமல்லாது அவரைச் சுற்றியுள்ள அனைவரையும் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. மனிதன் எப்போதுமே செய்யக்கூடாத ஐந்து பெரும்பாவங்களில் ஒன்றாக இருப்பது மது அருந்துவது.

மது அருந்துபவர்களைப் பெரும் பாவம் செய்பவர்களாகப் பார்த்த காலம் ஒன்று தமிழ்ச் சமூகத்தில் இருந்தது. மது அருந்தக்கூடியவர் பிறர் அறியாவண்ணம் ஊரை விட்டு ஒதுக்குப்புறமாகச் சென்று மது அருந்திவிட்டு, யாரும் பார்க்காத வண்ணம் ஊருக்குள் திரும்புவது என்பதும் ஒரு காலத்தில் நடைமுறையில் இருந்தது.

ஆனால் இன்று நிலைமை மிகவும் மோசமானதாக மாறிவிட்டது. பெரும் நகரங்களிலும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும் மதுக்கடைகளும் பார்களும் அலங்காரமாய்க் காட்சியளிக்கின்றன.

Representational Image

பெரும்பான்மையான மக்களிடம் மது அருந்தும் பழக்கம் இன்று சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது. அதைத் தவறு என்று யாருமே உணர்ந்ததாகத் தெரியவில்லை. தினமும் மது அருந்தக்கூடிய குடி நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே போவது மனித வளத்திற்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இந்த மது அருந்தும் ‘பழக்கம்’ தற்போது ‘வழக்கமாக’ மாறிக்கொண்டிருக்கிறது.

இதனால் ஏற்படும் சமூக, பொருளாதார சீர்கேடுகள் எங்கு போய் முடியுமோ எனும் அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

பழக்கம் மற்றும் வழக்கம் வேறுபாடு:

பழக்கம் மற்றும் வழக்கம் ஆகிய இரண்டு சொற்களும் ஒன்றுபோல இருந்தாலும் இவை இரண்டிற்கும் இடையே ஒரு மெல்லிய வேறுபாடு உள்ளது.

“நாமாக ஒன்றைப் பழகிக் கொள்வது பழக்கம்”

(Habit)

“பழகிய பழக்கம் நாளடைவில் தொடர்வது வழக்கம்” (Custom)

Representational Image

21/90 விதி:

ஒரு செயலை தொடர்ந்து 21 நாள்களுக்குச் செய்தால் அது நமது பழக்கமாக மாறும்.

21 நாள்களுக்குப் பிறகு அதே செயலை மேலும் 90 நாள்கள் தொடர்ந்தால், அது நமது ஒரு வாழ்க்கை முறையாகவும், வழக்கமாகவும் மாறிவிடும் என்கிறது 21/ 90 எனும் மனித மனம் குறித்த உளவியல் விதி.

எடுத்துக்காட்டாக நாம் தினமும் காலையில் 5 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்ட வேண்டும் என முடிவுசெய்து 21 நாள்கள் தினமும் அதைத் தொடர்ந்து செய்தால் 21 நாள்கள் முடிவில் காலையில் சைக்கிள் ஓட்டுவது நமது ஒரு அன்றாடப் பழக்கமாக மாறிவிடும்.

அதன்பின் 90 நாள்கள் தொடர்ந்து காலையில் சைக்கிள் ஓட்டினோம் என்றால் அது நமது வழக்கமாக மாறிவிடும். இந்த 111 (21+90) நாள்களுக்குப் பிறகு நம்மால் காலையில் சைக்கிள் ஓட்டாமல் இருக்க முடியாது.

இதை அப்படியே குடிப்பழக்கத்திற்குப் பொருத்திப் பார்ப்போமானால், இன்று இயற்கையிலேயே சமுதாயத்திலிருந்து குடிப்பழக்கத்தை விரட்ட நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது லாக்டவுனில் உள்ள 21 நாள்களில் யாராலும் மது அருந்த முடியாது. மதுக்கடைகள் கிடையாது எனும்போது கடினமாக இருந்தாலும், குடிமகன்களுக்கு அது ஒரு பழக்கமாக மாறி இருக்கும்.

மதுவிலக்கை நாம் உண்மையிலேயே அமல்படுத்த வேண்டும் என்பது நமது உள்ளார்ந்த ஆர்வமாக இருக்குமானால்,

இந்த 21 நாள்கள் லாக்டவுன் முடிந்தபிறகு,

குறைந்தபட்சம் 90 நாள்களுக்காவது மதுக்கடைகளைத் திறக்காமல் இருக்க வேண்டும்.

“90 நாள்கள் மதுவிலக்கை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.”

இவ்வாறு 90 நாள்களுக்கு மதுக்கடைகளைத் திறக்காமல் இருப்போமாயின் 21/90 விதியின்படி குடிமகன்களுக்கு மது குடிக்காமல் இருப்பது அவர்களின் வழக்கமாக மாறிவிடும். இந்த 90 நாள்களுக்குப் பின்னர் குடிமகன்களில் பெரும்பாலானோர் மதுப் பழக்கத்திலிருந்து விடுபடுவது உறுதி.

Representational Image

ஏதேனும் ஒன்று பழக்கமாக இருக்கும்போது அது மாறுவதற்கு வாய்ப்புண்டு. ஆனால் அதுவே வழக்கமாக மாறிவிட்டால் மாறுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்கிறது உளவியல்.

இதில் நிச்சயம் விதிவிலக்காக சிலர் இருக்கவும் வாய்ப்புண்டு. குடிநோயாளிகள் குடிப்பதை உடனே நிறுத்துவது என்பது நடைமுறையில் இயலாத ஒன்று. ஆனால் நிரந்தரக் குடிநோயாளிகள் அல்லாத பெரும்பான்மையானோர், இந்த 90 நாள் மதுவிலக்கால் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவர் என்பது உறுதி.

மதுக்கடைகளைத் திறக்காமல் இருப்பதற்கு உற்பத்தி குறைவு, மூலப்பொருள்கள் பற்றாக்குறை என்று ஏதேனும் ஒரு காரணத்தை கூறிக்கொண்டு, இதை ஒரு சோதனை முயற்சியாக அரசுகள் செயல்படுத்திப் பார்க்க வேண்டும். மது என்னும் அரக்கனிடம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் குடிமகன்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினராவது அதிலிருந்து மீள்வதற்கு விரும்புவர்.

இவ்வாறு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களுக்கு உதவ வேண்டியது அரசுகளின் அடிப்படையான அறமாகும்.

Representational Image

ஆயினும் சுற்றிலும் நெருப்பு பற்றி எரியும் போது நடுவில் கற்பூரமாக நாம் இருக்க முடியாது. தமிழ்நாடு அரசு மட்டுமே இதைச் செயல்படுத்தி எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை.

ஏனெனில் குடிமகன்கள் பக்கத்து மாநில எல்லை கிராமங்களுக்கும், பக்கத்து மாநிலங்களுக்கும் குடிப்பதற்காக வேண்டி படையெடுத்து விடுவர். இந்த 90 நாள் மதுவிலக்கு திட்டம் ஒரு சமுதாயச் சிக்கலாக மாறிவிடும்.

எனவே தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து 90 நாள்களுக்கான கட்டாய மதுவிலக்கை அமல்படுத்தினால், 21/90 விதியின்படி பெரும்பாலான குடிமகன்கள் மதுப் பழக்கத்திலிருந்து விடுபட வாய்ப்புண்டு.

இது குடிமகன்களைக் கொண்டுள்ள ஒவ்வொரு இந்திய குடும்பத்தின் வேண்டுகோளாக நிச்சயம் இருக்கும்.

இயற்கையிடமிருந்து மனிதன் பல நுட்பங்களைக் கற்றுள்ளான். இந்த 21 நாள்களை குடிப்பழக்கத்தை சமுதாயத்திலிருந்து விரட்ட இயற்கை நமக்களித்த வாய்ப்பாக ஏற்றுக்கொள்வோம்.

“நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து” என்கிறது நாலடியார்.

‘பாலையும் நீரையும் கலந்து வைத்தால் அன்னப் பறவையானது பாலை மட்டும் குடித்துவிட்டு நீரை அப்படியே விட்டுவிடுமாம்’.

Representational Image

அதுபோன்று நமக்குக் கிடைத்துள்ள இந்தக் கடினமான சூழ்நிலையிலிருந்து நமக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு, தேவை இல்லாதவற்றை விட்டுவிடுவோம்!

மதுப்பழக்கத்தால் சமூகப் பொருளாதாரச் சீர்கேடுகள், தனி மனித மற்றும் குழு ஒழுக்கக்கேடுகள், மனிதவள ஆற்றலில் குறைபாடுகள் மிகுந்துவிட்ட இன்றைய சூழலில் தமது குடிமகன்கள் மீது அரசுகள் உண்மையாகவே அக்கறை கொண்டிருக்குமாயின், இந்த 90 நாள்கள் மதுவிலக்கை பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்பதே ஒவ்வொரு தனிமனிதனின் விருப்பமாக இருக்கும்!

வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையும் நமக்கு ஏதேனும் ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் செல்கிறது.

இந்தச் சூழ்நிலையில் இருந்தும் நாம் ஒரு நேர்மறையான பாடத்தைக் கற்கத் தொடங்குவோம்!

அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.