மக்கள் வாழ்வாதாரம் தொடங்கி, உலகப் பொருளாதாரம் வரை கொரோனா நோய்த் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய பொருளாதாரம் சுதந்திரத்துக்குப் பிறகு சந்தித்திருக்கும் மிக மோசமான நிலையாகத் தற்போதைய நிலைமையைப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்தக் கொரோனா நோய்த் தொற்றால் இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார். இரண்டு மாதங்களில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் அம்பானியின் சொத்து மதிப்பு 28% குறைந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 48,000 கோடி டாலர்.
நாட்டின் பங்குச் சந்தைகள் சில மாதங்களாகவே பெரும் சரிவில்தான் பயணித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தைகளின் மீதான நம்பகத்தன்மையும் வெகுவாகக் குறைந்துள்ளது.
Also Read: நியூயார்க்கில் புலிக்கு கொரோனா தொற்று எதிரொலி… எப்படி இருக்கிறது வண்டலூர் பூங்கா?
இந்த நிலையில் இரண்டு மாதங்களில் மட்டும் பங்கு சந்தைகளில் ஏற்பட்ட சரிவால் அம்பானியின் மதிப்பு நாள் ஒன்றுக்கு 300 மில்லியன் டாலர் வீதம் சரிந்து மார்ச் மாத இறுதியில் மொத்தம் 48,000 கோடி டாலர் (இந்திய மதிப்பில் 36.59 லட்சம் கோடி) சரிந்துள்ளதாக பிரபல பொருளாதார அமைப்பான ஹருன் குளோபல் ரிச் லிஸ்ட் தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் பின்னடைவின் காரணமாக உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னதாக 9-வது இடத்தில் இருந்த அம்பானி தற்போது 17-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். உலக பணக்காரர்கள் பட்டியலில் தங்கள் பெயரை பதித்த பல இந்திய கோடீஸ்வரர்களும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இன்னும் டாப் 20 வரிசையில்தான் நீடித்து வருகிறார். ஆனால், அவரைத் தவிர்த்து இந்திய தொழிலதிபர்கள் யாரும் டாப் 100 இடத்தில்கூட அங்கம் வகிக்காதது குறிப்பிடத்தக்கது. கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 37 சதவிகிதம் சரிந்துள்ளது. அதன் மதிப்பு 600 கோடி டாலர். ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடாரின் மதிப்பு கடந்த இரண்டு மாதங்களில் 26 சதவிகிதம் சரிந்துள்ளது அதன் மதிப்பு 500 கோடி டாலர். அதேபோல் கோட்டக் நிறுவனத்தின் தலைவர் உதய் கோட்டக்கின் நிகர மதிப்பு 28 சதவிகிதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தவிர, உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் தொடர்ந்து நிகர மதிப்பு $131 பில்லியன் டாலரோடு முதல் இடத்தில் நீடிக்கிறார். அவரின் சொத்து மதிப்பு இரண்டு மாதங்களில் வெறும் 9% மட்டுமே சரிந்துள்ளது. அவரைட் தொடர்ந்து பில் கேட்ஸ் 14% சரிவுடன் $91 பில்லியன் இருப்புடன் இரண்டாம் இடம் வகிக்கிறார். இவர்கள் இருவரைத் தவிர்த்து மற்றபடி உலக பணக்காரர்கள் பலரும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். கார்லோஸ் ஸ்லிம் பேமலி, மார்க் சக்கர்பெர்க், லாரி பேஜ், செர்ஜி ப்ரின், மிகேல் ப்ளூம்பெர்க் ஆகிய தொழிலதிபர்களின் சொத்து மதிப்பும் கணிசமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.