தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட எஸ்.பி-க்கள், கலெக்டர்கள், சென்னை தலைமைச் செயலக உயர் அதிகாரிகளுக்கு அவசரத் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், தற்போதுள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபானங்களை உடனடியாக அருகில் உள்ள திருமண மண்டபங்களுக்கு மாற்றும்படி கேட்டுள்ளனர்.

முறையாகத் திட்டமிடப்படாததால், கேரள அரசு மது பிரியர்களிடம் சிக்கித்தவிக்கிறது. அதுபோன்ற நிலை தமிழகத்திலும் நடக்கும் சூழ்நிலை வெகுதொலைவில் இல்லை. தமிழகம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகளை மார்ச் 25 முதல் மூடிவிட்டனர். இடைப்பட்ட நேரத்தில் குடி நோயாளிகள் பலரும் முடிந்த அளவுக்கு மதுபானங்களை வாங்கிப் பதுக்கினர். அடுத்து வந்த 7 நாள்களில் (ஏப்ரல் 1 வரை) பதுக்கப்பட்ட மதுபானங்களை குடித்து முடித்துவிட்டனர். தற்போது கைவசம் குடிக்க மது இல்லாததால் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அது கிடைக்காமல் போன விரக்தியில் முதல்கட்டமாக குடும்ப வன்முறையில் இறங்கியுள்ளனர். `மதுநோயாளிகளின் அட்டகாசங்கள் வீடுகளில் அதிகமாகிவிட்டது. உடனே போலீஸிடம் புகார் கொடுங்கள்’ என தமிழக மகளிர் ஆர்வலர்கள் பிரசாரம் செய்யுமளவுக்கு நிலைமை தீவிரமடைந்துள்ளது.

டாஸ்மாக்

கோயம்பேடு ஏரியாவில் சுமார் 12 டாஸ்மாக் கடைகள் இருந்தன. தற்போது அவை மூடப்பட்டுவிட்டன. அதையடுத்து, பிளாஸ்டிக் கவரில் 100 மில்லி சாராயம், ரூபாய் 100 முதல் 150 வரை கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இதேபோல் குவார்ட்டர் பாட்டில் விலை ரூ.400 முதல் ரூ.500 தாண்டி விற்கப்படுகிறது. `எப்படியாவது சரக்குத் தர ஏற்பாடு செய்யுங்கள்’ என்று டாஸ்மாக் ஊழியர்கள், பார்கள் நடத்துகிறவர்களை ஆங்காங்கே உள்ள போலீஸார் மற்றும் பல்வேறு அரசுதுறை அதிகாரிகளே டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துள்ளதால், டாஸ்மாக் தரப்பினர் விழிபிதுங்கித் தவிக்கிறார்கள்.

ஏப்ரல் 5 நிலவரப்படி, தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5. மதுகுடிக்க வழியில்லாமல் தற்கொலை மற்றும் குடும்ப வன்முறையில் ஈடுபட்டுக் கொலை.. என்கிற ரீதியில் இறந்துபோனவர்களின் எண்ணிக்கை 5. கொரோனா பாதிப்பைவிட, மது தட்டுப்பாடு விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும்போல தெரிகிறது. மது கிடைக்காமல் தவிப்பவர்களின் செயல்பாடு க்ரைம் சம்பவங்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. உளவுத்துறை ரிப்போர்ட்டின்படி, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் டாஸ்மாக் கடையை உடைத்து சரக்கு திருடுவது நடந்துவருகிறது. தமிழகத்தில் உள்ள 5,300 கடைகளில் கிராமப்புறங்களில் உள்ள கடைகள்தான் அதிகம். ஒவ்வொரு கடையிலும் சுமார் பத்து முதல் பதினைந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் ஸ்டாக்கில் உள்ளன.

டாஸ்மாக்

Also Read: மதுபானக் கடைகளை மூட கேரளா அரசு தயக்கம் காட்டியது ஏன்?

அவற்றின் மொத்த மதிப்பு பல கோடியைத் தாண்டும். `மது நோயாளிகள் கும்பலாகக் கடைகளை அட்டாக் செய்தால் ஏதும் செய்யமுடியாது. எனவே, கடைகளில் உள்ள சரக்குகளை போலீஸ் பாதுகாப்புடன் அருகில் உள்ள திருமண மண்டபங்களுக்கு மாற்றுங்கள்’ என மாவட்ட எஸ்.பி-க்கள் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். இந்தத் தகவல் முதல்வருக்கு போனதும், டாஸ்மாக் துறை உயர் அதிகாரிகளை அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது, `ரகசியமாக ஒட்டுமொத்த சரக்குகளையும் வேறு இடங்களுக்கு மாற்றுவிடுங்கள்’ என உத்தரவிட்டுள்ளார். இன்றைய நிலவரப்படி சுமார் 1,000 கடைகளில் இருந்த மதுபானங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டன. மீதிக்கடைகளில் உள்ள மதுபானங்களை படிப்படியாக இடம்மாற்றி வருகின்றனர். சரக்கு உள்ள டாஸ்மாக் கடைகளின் வெளியே உள்ள ஷட்டர்களின் மீது இரும்புக் கம்பியால் ஆன பாதுகாப்புக் கவசத்தை டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அமைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.

மது குடிப்பவர்களில் பல ரகம் உண்டு. தமிழகத்தின் மொத்த ஜனத்தொகை ஏழரை கோடி. அதில் ஆண்களின் எண்ணிக்கை பாதி. அவர்களில் சதாகாலமும் குடிப்பவர்கள், தினப்படி ஒரு நேரம் குடிப்பவர்கள், வார இறுதியில் குடிப்பவர்கள், திருமணம் போன்ற சுப வைபவங்களின்போது குடிப்பவர்கள்… என்று பல பிரிவினராக இருக்கிறார்கள். சுமார் ஒரு கோடி பேர் தற்போது குடிநோயாளிகளாகவே ஆகிவிட்டனர். மது போதைக்கு அடிமையானவர்கள் அரசின் பலதுறைகளில் இருக்கிறார்கள்.

Also Read: மூன்றுநிலை `குடி’மகன்கள்… திருந்துவார்களா, திரும்புவார்களா? ஊரடங்கு Vs மதுப்பிரியர்கள்

தவிர, அன்றாடம் உடல் உழைப்பு செய்து பிழைப்பு நடத்தும் தொழிலாளர்கள்… தற்போது கடும் டென்ஷனில் தவிக்கிறார்கள். தமிழகத்தில் சுமார் 5,300 கடைகள் உள்ளன. ஆண்டுக்கு 33,000 கோடி ரூபாய் அரசுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் துறை இது. கடந்த 11 நாள்களாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால், சுமார் 100 கோடி ரூபாய் வரை அரசுக்கு வரவேண்டிய பணம் நின்றுபோய்விட்டது. மேலும், பத்து நாள்கள் மூடப்பட்டால் அது 200 கோடியைத் தாண்டிவிடும். “கடை மூடப்பட்ட கடைசி இரண்டு நாள்களில் (மார்ச் 23, 24) சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்றுத் தீர்ந்தது” என்கிறார்கள் டாஸ்மாக் அதிகாரிகள்.

தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர், பார் கட்டட உரிமையாளர் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் தலைவர் அன்பரசன் இது குறித்துப் பேசுகையில்,

அன்பரசன்

“மார்ச் 17-ம் தேதியே பார்களை முடிவிட்டோம். மாநிலம் முழுக்க சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் பார்களில் வேலைசெய்கிறார்கள். டாஸ்மாக் பணியாளர்களின் எண்ணிக்கை 35,000-ஐ தாண்டும். இப்போதைக்கு டாஸ்மாக் இயங்கும் கட்டடங்கள், அதில் உள்ள சரக்குகளின் பாதுகாப்பை கவனிக்கவேண்டிய தருணம். மதுப் பிரியர்களுக்காக கேரள அரசாங்கம் செயல்படுத்திய அணுகுமுறையை தமிழக அரசும் உடனே பின்பற்றலாம். ஆன்லைன், எலைட் ஷாப்களில் வைத்து மதுபாட்டில்களை முறைப்படுத்தி விதிமுறைகளுடன் விற்பனை செய்யலாம்.

எங்களைப் போன்றவர்கள் பெரும்பாலும் கடன் வாங்கித்தான் பார்களை நடத்துகிறோம். கட்டட உரிமையாளர்களுக்கு வாடகை பாக்கி செலுத்தவேண்டியிருக்கிறது. கொரோனா பிரச்னை நேரத்தில் நாங்கள் அரசுக்கு முடிந்தளவுக்கு ஒத்துழைப்பை தருகிறோம். அரசுக்கு நாங்கள் செலுத்தும் பார்களுக்கான மாதாந்திர உரிமைத்தொகையை மூன்று மாதங்களுக்கு விலக்கு தரும்படி கோரிக்கை வைத்திருக்கிறோம். தற்போதைய நஷ்டங்களை சரிகட்ட இதைவிட்டால் வேறு வழி தெரியவில்லை” என்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.