கொரோனா பாதிப்புக்குள்ளானவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம். ஆய்வு அறிக்கை வரும் முன்னரே உடலை அனுப்பி வைத்த மருத்துவர்களின் செயலால், இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் கலக்கம்.

கீழக்கரையில் கொரோனா உயிரிழப்பு

கீழக்கரையைப் பூர்வீகமாகக் கொண்ட 71 வயது தொழில் அதிபர் ஒருவர் சில நாள்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து சென்னை வந்திருந்தார். சென்னையில் உள்ள மண்ணடி பகுதியில் உறவினர் ஒருவரது வீட்டில் தங்கியிருந்த இவருக்கு கடந்த 2-ம் தேதி காலை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா எனக் கண்டறிய ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் சில மணிநேரங்களில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறி அவரது உடலை கீழக்கரை கொண்டு செல்ல ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அனுமதி அளித்தனர். அன்று இரவு சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்ட அவரது உடல் மறுநாள் கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளிவாசலில் தொழுகைக்குப் பின் அடக்கம் செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனும் ஒருவர்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனை

இதனிடையே, அந்தத் தொழிலதிபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது பரிசோதனை முடிவில் உறுதியானது. இதனால் இறப்பு மற்றும் இறுதி நிகழ்வுகளில் பங்கேற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அவரது வீடு உள்ள கீழக்கரை சின்னக்கடை பகுதி சுகாதாரத் துறையினரால் சீல் வைக்கப்பட்டது. மேலும், 5 கி.மீ சுற்றளவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அனுமதிக் கடிதம்

இதுகுறித்து ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “கொரோனா நோய்த்தொற்று முடிவு அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதத்தாலும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் அலட்சியத்தாலும் தற்போது பெரும் அச்சம் ஏற்பட்டிருக்கின்றது. கடந்த மாதம் துபாயிலிருந்து வந்த கீழக்கரையைச் சேர்ந்த சென்னையில் வசிக்கும் 71 வயதுடைய நபர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவரது வீட்டில் அரசு சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார். அவர் கடந்த ஏப்ரல் 2 அன்று காலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு முடிவுகள் வருவதற்கு முன்பே அன்று மாலை அவர் உயிரிழந்துவிட்டார். ஆனால், நேற்று இரவு வரை முடிவுகள் வராதது மிகப்பெரிய கால தாமதம்.

அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது என்ற அறிவிப்பை அரசு காலதாமதமாக இன்று வெளியிட்டிருக்கிறது. சந்தேகிக்கப்பட்டு பரிசோதனையில் இருக்கும் ஒருவர் இறந்த நிலையில் முடிவு வருவதற்கு முன்பே, உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதாக கூறி உடலை ஒப்படைத்தது மருத்துவமனை நிர்வாகம் செய்த மிகப் பெரிய தவறு. தற்போது நோய்த்தொற்று உறுதியாகி உள்ள சூழ்நிலையில் அவரது இறுதி நல்லடக்கத்தில் உடல்நலக்குறைவால் இறந்தவர் என்று யதார்த்தமாக பங்கேற்ற அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதனால் அனைவரும் தற்போது பெரும் அச்சத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

நவாஸ்கனி

இந்த முடிவை உடனடியாக அறிவித்திருந்தால் இது போன்ற அச்சம் ஏற்பட்டிருக்காது. அல்லது முடிவு வர தாமதமாகும் பட்சத்தில் இறந்தவர்களின் உடலைப் பாதுகாத்து முடிவு வந்ததற்குப் பிறகு ஒப்படைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும். இறுதி அஞ்சலியில் பங்கேற்பதை அனைவரும் தவிர்த்திருப்பார்கள். அதைச் செய்யாமல், மிகுந்த அலட்சியப்போக்குடன் இந்தப் பேரிடர் காலகட்டத்தில் மெத்தனமாக செயல்பட்ட ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் பெரும் தவற்றை நிகழ்த்திவிட்டார்கள். மெத்தனப் போக்குடன் செயல்படும் ஸ்டான்லி மருத்துவமனையின் நிர்வாகத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.