திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பகுதியில் இஸ்லாமிய மதத்தினருக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனை மறுத்த சம்பவம் மிகப்பெரும் சர்ச்சையாகியுள்ளது.
திருத்தணியை அடுத்த இஸ்லாம் நகர் பகுதியில் வசிக்கும் சைதா என்பவர் தன் மனைவி ஆஷாவுக்கு கடந்த சில வாரங்களாக திருத்தணியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை செய்துவந்துள்ளார். திடீரென ஒருநாள், சைதாவைத் தொடர்புகொண்ட மருத்துவமனை நிர்வாகம் `மேற்கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாதென்றும், தங்கள் மருத்துவமனையில் முஸ்லிம் மதத்தினருக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம்’ என்று கூறி சைதாவின் மனைவிக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய சைதா “என் மனைவி ஆஷாவுக்கு போன மாசம் திடீர்னு உடம்பு சரியில்லாமப் போச்சு. உடனடியா, திருத்தணியில இருக்குற பீகாக் மருத்துமனைக்கு கூட்டிட்டுப் போனேன். என் மனைவியைப் பரிசோதிச்சிட்டு அவங்களுக்கு கிட்னில பாதிப்பு இருக்கு, உடனடியாக ஆபரேஷன் பண்ணனும்னு சொன்னாங்க. நான் அரசு மருத்துவமனைக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னதுக்கு, அவங்க உடல் நிலை மோசமா இருக்கறதால உடனடியா ஆபரேஷன் செய்யணும்னு சொன்னாங்க. இல்லனா உயிருக்கு உத்தரவாதம் இல்லைனு சொன்னதால நானும் என் மனைவியை அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை செய்யலாம்னு முடிவெடுத்தேன். அந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.30,000 செலவாகும்னு முதல்ல சொன்னாங்க, ஆனா எங்க கிட்ட ரூ.65,000 வாங்கிட்டாங்க.
அறுவை சிகிச்சை முடிஞ்சு அங்கேயே 4 நாள் வெச்சிருந்தாங்க பிறகு வீட்டுக்கு அனுப்பிட்டு, தொடர்ந்து வாரத்துல செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் வந்து டயாலிசிஸ் செஞ்சுட்டு போகணும்னு சொன்னாங்க. நானும் கடந்த செவ்வாய்க்கிழமை கூட என் மனைவிய கூட்டிட்டுப் போய் டயாலிசிஸ் செஞ்சுட்டு வந்தேன். ஆனா இந்த நிலையில ஏப்ரல் 2-ம் தேதி காலையில மருத்துவமனைல இருந்து போன் வந்துச்சு. என்கிட்ட பேசினவரு `நாளைக்கு நீங்க டயாலிசிஸ் சிகிச்சைக்கு வர வேண்டாம், எங்க மருத்துவமனைல முஸ்லிம் யாருக்கும் சிகிச்சை அளிக்கக் கூடாதுனு எங்க எம்.டி சொல்லிட்டாரு, அதனால நீங்க மேற்படி சிகிச்சைக்கு வேற மருத்துவமனையைப் பாத்துக்கோங்கன்னு” சொன்னாங்க.
நான் பதிலுக்கு என் மனைவிக்கு ஆரம்பத்துல இருந்தே உங்க மருத்துவமனையிலதானே பார்த்துட்டு வர்றேன். இப்போ திடீர்னு இப்படி சொன்னீங்கன்னா நாங்க இந்த 144 தடை நேரத்துல எங்க போறதுன்னு கேட்டதுக்கு, இல்ல சார் எங்களுக்கு திருவள்ளூர் ஜாயின்ட் டைரக்டர் அலுவலகத்துல இருந்து சுற்றறிக்கை வந்துருக்கு. அதுல, முஸ்லிம் மதத்தினர் யாரு சிகிச்சைக்கு வந்தாலும் அனுமதிக்க வேண்டாம்னு உத்தரவு போட்ருக்காங்க. உங்களுக்கு மேற்படி சிகிச்சை வேணும்னா நீங்க உங்க மனைவிய அரசு மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லிப் போன வெச்சுட்டாங்க.

இப்ப என் மனைவிக்கு டயாலிசிஸ் பண்ணனும். மருத்துவமனை நிர்வாகம் திடீர்னு இப்படி சொல்லிட்டதால அடுத்து என்ன பண்றதுனு தெரியாம தவிச்சிட்டு இருக்கோம். ஒரு நாள் சிகிச்சை அளிக்கத் தவறினா கூட அவ உயிருக்கே ஆபத்தாயிடும். திருத்தணி பகுதில வேற எங்கயும் இந்த சிகிச்சை கிடையாது. எங்க பகுதில இஸ்லாமிய சமூக மக்கள்தான் அதிகமா இருக்கோம். ஆரம்பத்துல இருந்து சிகிச்சை அளிச்சிட்டு வந்துட்டு இப்ப அவங்க இப்படி எங்களுக்கு மருத்துவம் பார்க்காமல் புறக்கணிக்கிறதுதான் எதுக்குன்னு தெரியல, குறிப்பாக எங்க மதத்தினருக்கு மட்டும் சிகிச்சை இல்லைன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்னும் தெரியல.
டெல்லில நடந்த ஜமா-அத் மாநாட்டுக்குப் போய்ட்டு வந்துருப்போம்னுதான் எங்களுக்கு சிகிச்சை அளிக்காம புறக்கணிக்குறாங்க. ஆனா எங்க இஸ்லாம் நகர் பகுதியில இருந்து ஒருத்தர் கூட அந்த மாநாட்டுக்குப் போகல. அப்படி இருக்கும்போது உயிர் காக்கும் மருத்துவமனையில இது மாதிரி மத பாகுபாடு பார்ப்பதுதான் மிகுந்த வேதனை அளிக்குது. நான் என் மனைவிய வேற மருத்துவமனையில சிகிச்சைக்கு அனுமதிப்பேன். ஆனா எங்களுக்கு நடந்த மாதிரி இனி யாருக்கும் நடக்கக் கூடாது. இன்னைக்கு இப்படி செய்றவங்க நாளைக்கு ஒரு அவசரம்னு போனாலும் இப்படித்தான் எங்களைப் புறக்கணிப்பாங்க.

திருவள்ளூர் இணை இயக்குநர்தான் சுற்றறிக்கை அனுப்புனதா சொன்னதால நாங்க இப்ப இணை இயக்குநர்கிட்டயே தகுந்த ஆதாரங்களோடு புகார் மனு அளிச்சிருக்கோம். நடவடிக்கை எடுக்ககுறதா உறுதி அளித்துள்ளார். மேற்கொண்டு அரசு பீகாக் மருத்துவமனை மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து என் மனைவிக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்க உதவணும்” என்றார்.
இது குறித்து, திருவள்ளூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் இளங்கோவிடம் பேசினோம், “பாதிக்கப்பட்டுள்ள ஆஷாவின் தரப்பிலிருந்து மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிரான புகார் மனுவைப் பெற்றிருக்கிறேன். மனுவின் மீதான நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளேன். அரசுத் தரப்பிலிருந்து அப்படி ஏதும் சுற்றறிக்கைகள் அனுப்பவில்லை. மருத்துவமனை நிர்வாகம் பொய்யான ஒரு கருத்தை பரப்பியிருப்பது முறையல்ல. மனுவின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை வலியுறுத்தி இருக்கிறேன். உடனடியாக விசாரிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, “ஆஷா எங்கள் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு நாங்கள்தான் சிகிச்சை அளித்து வருகிறோம். ஆனால், தற்போது நோய்த் தொற்று பரவலின் காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு நோய் பாதிப்பு இருக்கலாம். எனவே, அவர்கள் குறித்து அரசுக்குத் தகவல் தெரிவித்து அரசு சிகிச்சையளிக்க ஒப்புதல் அளித்தால் மட்டுமே மேற்கொண்டு சிகிச்சை அளிக்கிறோம். அதன் அடிப்படையில்தான் அவர்களுக்கும் கூறினோம். ஆனால், இப்போது அரசு ஆஷாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதால், நாங்கள் ஆஷாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கத் தயாராகவே இருக்கிறோம்” என்று கூறி சமாளித்தனர்.

Also Read: `274 மாவட்டங்களில் கொரோனா தாக்கம்; 3,374 பேருக்கு பாதிப்பு!’ – மத்திய அரசு தகவல்
ஆனால், சைதாவிடம் மருத்துவமனை நிர்வாகம் பேசிய ஆடியோ பதிவில், இஸ்லாமிய மதத்தினருக்கு தங்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மாட்டோம் என்றே கூறியிருந்தனர். அது பற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது. “நாங்கள் அப்படிச் சொல்லவே இல்லை” என்று மழுப்பினர்.
மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மனித நேயத்தின் அடிப்படையில் இயங்கும் மருத்துவத் துறையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனையாக இருக்கிறது.