கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு தமிழகத்தின் பெரும்பாலான தனியார் பள்ளிகள் வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு ஆன்லைன் வழியில் பயிற்சி தரத் தொடங்கிவிட்டனர். சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு பெற்றோர்களை ஒருங்கிணைத்து வாட்ஸ்அப் குழுக்கள் வழியாகப் பாடங்கள், பயிற்சிகள் மற்றும் சிறு-குறுதேர்வுகளுக்கான கேள்விகள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக, போட்டித்தேர்வு எழுத இருக்கும் தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைன் கோச்சிங் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பெரும்பாலான பள்ளிகள், அரசு ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே பள்ளிகளுக்கு விடுமுறை விட்டிருந்தன. அதனால், ஆசிரியர்களும் மாணவர்களுக்கான பயிற்சிகளை அதற்கேற்றார் போலத் தயார்படுத்திக்கொண்டனர்.
ஆனால், அரசுப்பள்ளி மாணவர்கள் நிலை எப்படி இருந்தது?தமிழகத்தில் 144 உத்தரவு அறிவிக்கப்பட்ட பிறகும் பெரும்பாலான அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். 12-ம் வகுப்புத் தேர்வுகள் தேதி தள்ளிவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அறிவிக்கப்பட்ட தேதியில் நடைபெற்றன.
Also Read: கொரோனா… தனது தனியார் மருத்துவமனையை வழங்கிய மேட்டுப்பாளையம் மருத்துவர்! -குவியும் பாராட்டு
இதன்பிறகு விடுமுறை அறிவித்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். இருந்தும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை என்ன? நீட் ஜே.இ.இ உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் நடைபெறும் தேதி தள்ளிவைக்கப்பட்டிருந்தாலும், தனியார் ஆன்லைன் பயிற்சிகள் தரும்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சிக்கு என்ன வழி?
சி.பி.எஸ்.இ அல்லது தனியார் பள்ளிகள்போல ஆன்லைன் வகுப்புகளும் நடத்தப்படவில்லை. நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் பின்னடைவு ஏற்கெனவே கேள்வியாகி வருகிறது. இந்த நிலையில், கொரோனா பேரிடர் காலத்தில் மற்ற பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கோச்சிங் வாய்ப்புகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படும்போது அது சமமின்மையை (Inequality) ஏற்படுத்ததா?

சேலத்தைச் சேர்ந்த முதுகலை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “144 அறிவிக்கப்பட்டபோதே நாங்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கான ஒத்திகைகளை எடுசாட் (EDUSAT) வழியாக முயற்சி செய்துபார்த்தோம். ஆனால், அதைச் சரிவரச் செய்யமுடியவில்லை என்பதால் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டோம். ஆனால், போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக டி.என்.டி.பி (TNTP) என்கிற அரசு இணையத்தளத்தில் மாணவர்களுக்கான பயிற்சி வினாக்கள், பயிற்சிக்கான விஷுவல் பாடங்கள், மாதிரித்தாள்கள் உள்ளிட்டவை பதிவேற்றப்பட்டிருக்கின்றன. 11 மற்றும் 12 வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் அதிலிருந்தே பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்” என்கிறார்.
டி.என்.டி.பி இணையதளத்தில் உள்ள போட்டித்தேர்வுகளுக்கான மெட்டீரியல்கள் குறித்த பயிற்சி இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்குத் தரப்பட்டிருக்கின்றன.
ஆனால் இதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இந்த டி.என்.டி.பி இணையதளத்தில் உள்ள போட்டித்தேர்வுகளுக்கான மெட்டீரியல்கள் குறித்த பயிற்சி இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தரப்பட்டிருக்கிறது. பயிற்சி அளிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும்.
Also Read: நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி வகுப்பு எப்போது? கல்வியாளர்களின் கேள்வியும் கல்வித்துறையின் பதிலும்
நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர பயிற்சி தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் மாணவர்களுக்கு டி.என்.டி.பி இணையதளம் குறித்து, இதுநாள் வரை எந்தவிதத் தகவலும் தெரியாது. மாணவர்களிடம் லேப்டாப் வசதி இருந்தாலும் இன்டர்நெட் அல்லது மொபைல் போன் வசதி இல்லாத ஏழை மாணவர்களின் நிலை என்ன என்பதும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறுகையில், “தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகளிடம் பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது எனச் சொல்லமுடியாது. அதே சமயம் கொரோனா பேரிடர் காலத்தில் வருமானமே சரிவர இல்லாமல் பெற்றோர்கள் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும்போது மாணவர்களைப் பயிற்சி எடுத்துக்கொள்ளக் கட்டாயப்படுத்த முடியாது. இந்த இடைவெளியைச் சரிசெய்ய கொரோனாவால் பாதிப்படைந்திருக்கும் தற்போதைய நிலைமையைச் சீர்செய்த பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சிக்காக அரசு முன்வந்து கால அவகாசம் தர வேண்டும். கூடவே, இதனால் அவர்களின் எதிர்காலம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பதற்கான உத்திரவாதத்தை அளிக்க வேண்டியதும் அவசியம்” என்றார்.
பள்ளிக்கல்வித்துறை தரப்பு கருத்துகளை அறிய முயன்றோம். ஆனால், பதில் கிடைக்கவில்லை. மின்னஞ்சலும் அனுப்பியிருக்கிறோம். பதில் வந்தால் அதையும் இணைக்கத் தயாராக இருக்கிறோம்.