க்வாரன்டீன் சூழலில் திரும்பிய பக்கமெல்லாம் இணையத்தில் வெப் சீரிஸ்களாகத்தான் இருக்கின்றன. 1 மணி நேரத்தில் ஆரம்பித்து 8, 10, 20 மணி நேரம் என சில வெப் சீரிஸ்கள் சரக்கு ரயிலின் பெட்டிகள் போல் நீண்டுகொண்டே இருக்கின்றன. குவிந்துகிடக்கும் சாம்பல் மேடுகளுக்கும் புகை மண்டலங்களுக்கும் நடுவே அவ்வப்போது அத்தி பூத்தாற்போல, நல்ல சீரிஸ்களும் வெளியாகின்றன. அதில் ஒன்றுதான் ‘மணி ஹெய்ஸ்ட்’.

எப்போதுமே ஹெய்ஸ்ட் கதைகள் பார்ப்பது அலாதியானது. திருடன் போலீஸ் விளையாட்டில், சுவாரஸ்யமாகத் திருடும் திருடர்கள்தான் மக்களின் ஆல் டைம் ஃபேவரைட். (மளிகைக் கடையில் பொட்டலம் மடித்துக்கொண்டே போலீஸாக ஊரைக் கண்காணிக்கும் சிங்கங்கள் மன்னிப்பீராக). பெரிய கிடங்கில் இருக்கும் பணம், பொருள் அவற்றை பக்கா பிளானுடன் கொள்ளையடித்தால், மணி ஹெய்ஸ்ட் பாகங்கள் ரெடி. ஸ்பெயின் நாட்டுத் தொடரான La casa de papel-ஐ 2017-ல் நெட்பிளிக்ஸ் வாங்கி மணி ஹெய்ஸ்ட் ஆக்கியபோது, இப்படி அதிரி புதிரி ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்த்திருப்பார்களா தெரியவில்லை. ஆனால், அதன்பின் நடந்தது எல்லாம் வரலாறு.

Money Heist 4

மூன்று சீஸன் பார்த்தவர்களும் இந்த க்வாரன்டீனில் அதைப் பார்க்க இருப்பவர்களும் அடுத்த மூன்று பத்திகளை ஸ்கிப் செய்துவிடலாம்.

வங்கியில் பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறது ஒரு குழு. ஆனால், அது படமெடுக்கும் வங்கி அல்ல. பணம் அடிக்கும் ஸ்பெயினின் ராயல் மின்ட். கொள்ளையடிக்கும் ஒவ்வொரு நபரும், நகரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறார்கள். அவர்களை வெளியே இருந்து இயக்குகிறார், குழுவின் தலைவரான புரொஃபசர். ராயல் மின்ட்டில் இருக்கும் பணயக் கைதிகளையும் பணத்தையும் காப்பாற்றப் போராடுகிறது காவல்துறை. காவல்துறை அதிகாரியான ரேக்கலுடன் டீல் பேசுகிறார் புரொஃபசர். புரொஃபசர் திட்டம்போட்ட வீட்டை காவல்துறை கண்டுபிடிப்பதுடன் முதல் சீஸன் முடிகிறது.

காவல்துறை திட்டமிடும் ஒவ்வொரு விஷயத்தையும் அதற்கு முன்னரே யூகித்து, பிளான் பி, பிளான் சி, பிளான் ஏபி, பிளான் ஏபிசி எனப் பல திட்டங்கள் போடுவதில் வல்லவர் புரொஃபசர். ரேக்கலின் காவல், புரொஃபசருடனான காதலாகக் கசிந்துருக, சிலரின் இழப்புகளுடன் முடிகிறது இரண்டாவது சீஸன்.

எல்லாம் சுபம் என்றாலும், ஏழரை இழுக்கவே பிறந்தவன் நான் எனக் காதல் போதையில் சிக்கிக்கொள்கிறான் ரியோ. தற்போது ரியோவைக் காப்பாற்ற வேண்டும். இன்னொரு ஹெய்ஸ்ட். ஆனால், இன்னும் பெரிதாக, தாங்கள் யாரென ஸ்பெய்னுக்கும் உலகுக்கும் காட்ட வேண்டும். காவல்துறையின் புத்திசாலியான ரேக்கலும், இப்போது லிஸ்பனாக புரொஃபசரின் பக்கம். ரியோவைக் காப்பாற்ற உலகத்தின் கண்காணிப்புகள் அற்ற இடங்களில் பதுங்கியிருந்த கும்பல் ஒவ்வொன்றாய் வெளியே வருகிறது. இந்த முறை மாஸ்க் இல்லாமல். அவர்களுக்கு சிம்ம சொப்பணமாய் வந்தமர்கிறார் காவல்துறை அதிகாரியான அலிசியா. அலிசியா ஒவ்வொரு கோலிலும், லீடு எடுக்க புரொஃபசரின் தோல்வியுடன் முடிகிறது மூன்றாவது சீஸன்.

Money Heist 4

Also Read: கங்காருவின் கம்பேக்!

நான்காவது சீஸன்

நைரோபி உயிருக்குப் போராட, லிஸ்பன் பிணைக் கைதியாக, தான் அதிகம் நேசித்த இருவர் கஷ்டப்பட, என்ன வித்தைகளைக் கட்டவிழ்க்கிறார் புரொஃபசர் என்பதுதான் நான்காவது சீஸனுக்கான ஒன்லைன். வழக்கம் போலவே டோக்கியோவின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. வழக்கம் போலவே ஃபிளாஷ்பேக்கில் சகோதரர்களான பெர்லின், புரொஃபசர் கதை சொல்லப்படுகிறது. வழக்கம் போலவே இதிலும் அடுரோ நம்மை வெறுப்பேற்றுகிறார். மூன்றாவது சீஸனில் விட்டதை எல்லாம் மீட்டெடுக்கிறார் புரொஃபசர். கொள்ளைக்கு இடையே மக்களின் பெருங்கூட்ட ஆதரவில் வழக்கம் போலவே புரட்சிக் கதைகளும் வெடிக்கின்றன. தொடரின் சர்ப்ரைஸ் பேக்கேஜ் அலிசியா சொல்லும் கதை. குரூரமாக டார்ச்சர் செய்யும் அலிசியாவின் மறுபக்கம், ஒரு கணம் நம்மை திகைக்க வைக்கிறது. ஆனால், அதைக் கடந்து நடப்பவை எல்லாமே மிகவும் எளிதாக யூகிக்கக்கூடிய விஷயங்கள். வெப்சீரிஸில் நடக்கும் லாஜிக் ஓட்டைகளை மறைக்கும் அளவுக்கு தரையில் துளையிடுகிறார் புரொஃபசர். மணி ஹெய்ஸ்டின் ஆகப்பெறும் பலம், அதன் வசனங்களும் ‘பெல்லா சியோ’ பாடலும்தான். இதில் பாடல் மாறினாலும், வசனங்கள் பக்கா. லிஸ்பனுக்கும் அலிசியாவுக்குமான காட்சிகளில் ஒருவரை ஒருவர் மாறி மாறி இழுத்துக்கொள்வது சிறப்பு. அதே போல், காண்டியா வங்கிக்குள் ஆடும் ஆட்டம் மிகச் சிறப்பு.

ஒரு கேள்வி?

ஸ்பெயினில் ஒரே சீஸனாக 15 எபிசோடுகள் என வெளியான La casa de papel-ஐ எபிசோடுகளின் நேரத்தைக் குறைத்து இரண்டு சீஸன்களாக வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ். அப்போதே, சரி ஏதோ கோழிக் கால் சிறுசா இருந்தாலும் நல்லாத்தான இருக்கு எனப் பார்க்கத் தொடங்கினோம். அடுத்த சீஸனுக்கான முன்னோட்டம் வெளியிடப்பட, லைட்டாக ‘ப்ரிசன் பிரேக்’ எல்லாம் நினைவுக்கு வந்து லேசாக தொண்டையைக் கவ்வியது. சரி, பழகின பாவத்திற்குப் பார்ப்போம் என தொடர்ந்தால், மூணாவது சீஸனின் நைரோபிக்கான செக், லிஸ்பனின் அரெஸ்ட் என ஆங்காங்கே சில கூஸ்பம்ஸ் மொமண்ட் இருந்தது. ஒரு கட்டத்தில் எல்லாம் நீர்த்துப்போகும் என்கிற நிலையில் இருக்கிறது தற்போதைய சீஸன். எபிசோடில் பாதி நேரம் பிளாஷ் பேக்குக்கு என ஒதுக்கிவிட்டதாலயே, அதில் ஏதாவது சொல்வோம் என கொசுவர்த்தி சுருள் சுருட்டுவது; ‘லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே’க்கள் கூட செய்ய முடியாத மருத்துவ ஜாலங்களை மருத்துவரின் உதவி இல்லாமலே செய்துமுடிப்பது; எவ்வளவு பெரிய பிரச்னை என்றாலும் பிரச்னையைவிட பெரிதாக ஒரு ஓட்டை போட்டு காப்பாற்றுவது என தற்போது மணி ஹெய்ஸ்ட் குழுவினர் ஸ்பெய்ன் முழுக்க ஓட்டை போட்டு வைத்திருக்கிறார்கள்.

Money Heist 4

நெட்ஃபிளிக்ஸின் தாராள பட்ஜெட்டில் ஹைடெக்காக பல நாடுகளில் தற்போது நடக்கிறது கதை. ஆனால், திரைக்கதைதான் தங்க வங்கியின் ஒரு மாடியைக்கூட தாண்ட மறுக்கிறது. முதல் இரண்டு சீஸன் பண வங்கி என்றால், அடுத்த இரண்டு சீஸன் தங்க வங்கிதானே என்றால், இல்லை, அடுத்த சீஸனிலும் தங்கத்தைத்தான் உருக்கப்போகிறோம் என குட்பை சொல்கிறது மணி ஹெய்ஸ்ட். சில விஷயங்களை அப்படியே முடித்துவிடுவது நல்லது. பார்வையாளர்கள் அதிகரிக்கிறார்கள் என இழுக்கும்பொழுது, ‘ப்ரிசன் பிரேக்’ போல் அந்தத் தொடரின் மேலே ஓர் ஒவ்வாமை வந்துவிடும். ‘மணி ஹெய்ஸ்ட்’ குழு இதைப் புரிந்துகொள்ளும் என நம்புவோம்.

மணி ஹெய்ஸ்ட்டின் சுவாரஸ்யம் அதில்தான் அடங்கியிருக்கிறது. அவர்கள் நம்முன் ஒரு விஷயத்தைப் பாகங்கள் குறித்து விளக்குகிறார்கள். நாம் அதில் லயித்து, ̀கதை சொல்லு ராம்’ என செட்டில் ஆவோம். நமக்கு அதில் எந்த லாஜிக் கோளாறுகளும் உறுத்தாது. ஆனால், இந்த சீஸனில் சில தேவயானிக்கள் பாதியிலேயே ‘நானே தூங்கிக்கறேன்’ என முடிவு எடுத்திருப்பார்கள். அடுத்தடுத்த சீஸன்களையும் இப்படியே தொடர்ந்தால் கதை சொல்ல ராம்கள் தேவையிருக்க மாட்டார்கள்.

மற்றபடி லாஜிக் இல்லை, மேஜிக் பக்கா என செட்டில் ஆவீர்கள் எனில், இந்த வீக்கெண்டுக்கான பக்கா மெட்டிரியல் இந்த மணி ஹெய்ஸ்ட்.

Also Read: தமிழ் பேசும் வெப்சீரிஸ்

மணி ஹெய்ஸ்ட்டை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக எல்லாம் பேச்சு அடிபட்டது. மணி ஹெய்ஸ்ட் கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்கலாம். உங்கள் சாய்ஸ் என்ன? பாலிவுட் எனில் புரொஃபசராக என் சாய்ஸ் ஷாருக். பெர்லினாக விக்ரம். உங்கள் பரிந்துரைகளை கமெண்ட்டில் சொல்லவும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.